For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  படங்காணச் சென்று வளர்ந்த நம் பட்டறிவு - எதுவும் வீண் போகாது

  By Ka Magideswaran
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  தொலைக்காட்சிப் பெட்டி பரவலாவதற்கு முன்புவரை திரைப்படம் பார்த்தல் என்பது எப்போதும் இயல்கின்ற ஒன்றாக இருக்கவில்லை. பட்டிக்காட்டில் வாழ்பவர்களுக்கு நகரத்திற்குக் கிளம்பிச் செல்வதற்குப் பல முனைப்புகளும் முன்னாக்கங்களும் வேண்டும். அத்தகைய முன்னேற்பாடுகளையும் முன்திட்டங்களையும் வகுத்துக்கொண்டுதான் ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்ல முடியும். நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் எனக்கென்று ஒரு மிதிவண்டி தரப்பட்டது. அந்த மிதிவண்டி வாய்த்ததால்தான் திருப்பூரின் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படங்கள் பார்த்தேன். அம்மிதிவண்டி எனக்கு வாய்த்திருக்கவில்லை என்றால் நான் அத்தனை படங்களைப் பார்த்திருக்கமாட்டேன்.

  வேளாண்மையிலோ சிறுதொழிலிலோ ஈடுபடுகின்ற பாட்டாளியால் பொழுதிறங்கிய பின்னரே திரைப்படத்திற்குச் செல்ல முடியும். அதனால் முதலாட்டம், இரண்டாவதாட்டம் எனப்படுகின்ற இரவுக் காட்சிகள் ஆண்கள் கூட்டத்தினரால் நிரம்பி வழியும். காலைக்காட்சியிலும் நண்பகற்காட்சியிலும் பெண்கள் கூட்டத்தினர் அலைமோதுவார்கள். என்னைப் போன்ற மாணவர்கள் பள்ளி அரை நேரத்தின்போதும் விடுமுறை நாள்களிலும் நாள் தவறாமல் திரைப்படம் பார்ப்பதில் ஆர்வத்தோடு திரிந்தோம்.

  Watching Movies In Our Childhood

  எல்லார்க்கும் திரைப்படங்களைக் காட்டுவதற்கென்றே ஒரு தாய்மாமன் இருப்பாரே, எனக்கும் அப்படி ஒருவர் அமைந்தார். அவர் படங்களைப் பார்ப்பதிலும் பாடல் புத்தகங்களை வாங்குவதிலும் என்னை மிஞ்சிய ஆர்வத்தினராக இருந்தார். அப்போது அவர் கவுந்தப்பாடியை அடுத்துள்ள சலங்கைப்பாளையத்தில் காளிங்கராயர் கால்வாயின் இரட்டைக்கிளைகள் பாயும் பச்சைவயல்களிடையே குடியிருந்தார். திரைப்படப் பாட்டுப் புத்தகம் எப்படி இருக்கும் என்று முதன்முதலாய் அங்கேதான் பார்த்தேன். அவருடைய தொகுப்பில் நூற்றுக்கணக்கான பாடல் புத்தகங்கள் இருந்தன. அவற்றை முறையாய் அடுக்கி மெல்லிய நூலால் கட்டி வைத்திருந்தார். ஒருதலை ராகம், தூறல் நின்னு போச்சு, பாலைவனச்சோலை, சுவரில்லாத சித்திரங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இரயில் பயணங்களில், மௌன கீதங்கள், உரிமைக்குரல் என்று அந்தப் பாட்டுப் புத்தகங்களின் கறுப்புவெள்ளை அட்டைகள் இன்றும் என் நினைவிலாடுகின்றன. சில புத்தகங்களின் மேலட்டையில் கறுப்பு வெள்ளையோடு நீலமோ சிவப்போ கலந்திருக்கும். பாட்டுப் புத்தகங்கள் பன்னிறத்தை அடைய முயன்ற அச்சு முயற்சி அஃது.

  ஆண் பெண் இணைப்பாக்களை நானும் அவருமாய்ச் சேர்ந்து பாடிப் பார்ப்போம். நான் எப்படியேனும் சரியாகப் பாடிவிடுவேன். அவர் எங்கேனும் ஓரிடத்தில் சொற்களைத் தவற விடுவார். பாட்டு கேட்பதற்கு வழியில்லாதபோது நாமே பாடகராகிப் பாடிக் களிக்கிறோம். கோபியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தால் எப்படியேனும் அங்கே போய்விடுவார் அவர். தூறல் நின்னு போச்சு திரைப்படப்பிடிப்பை நேரில் பார்த்தவர். அதனால்தானோ என்னவோ அவருடைய கனவுலகில் சுலக்சனாவுக்கு நிரந்த இடமுண்டு. இன்றைக்கு அவர் எந்தத் திரைப்படத்தையும் பார்ப்பதில்லை. தொலைக்காட்சியையும் பார்ப்பதுபோல் தெரியவில்லை. இப்பகுதியின் புகழ்பெற்ற வீட்டுமனை விற்பனைத் தரகராக மாறிவிட்டார்.

  Watching Movies In Our Childhood

  நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்காக என்னை அழைத்துச் சென்ற தாய்மாமன் தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் எதிர்வரும் திங்களன்று வருக என்று கேட்டுக்கொள்ளப்பட்டார். முன்னதாக ஆறாம் வகுப்புச் சேர்க்கைக்கு என்று அப்பள்ளியில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டிருந்தது. நுழைவுத் தேர்வில் நான் தொண்ணூற்றிரண்டு மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். என்னை இருகரம் கூப்பி வரவேற்றுக்கொண்ட பள்ளி அஃது. சேர்க்கைக்கு இன்னொருநாள் வரச்சொன்னதும் நொய்யலாற்றின் மறுகரையிலிருந்த நடராஜ் திரையரங்குக்குள் நுழைந்துவிட்டோம். இராதாரவி, இரவீந்திரன் போன்றோர் நடித்த "குற்றவாளிகள்" என்னும் குதிரைக் கொள்ளையர்களின் படம் அது. பள்ளிக் கூடத்திற்குச் சேரச் சென்று படம்பார்த்துத் திரும்பினோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

  நான் பள்ளிக்கு முறையாகச் செல்லத் தொடங்கியதும் என் மாமனுக்குத் திரைப்படம் பார்ப்பதற்குச் சேர்க்கை கிடைக்கவில்லை. தனியாளாகச் செல்வது அவர்க்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. அந்நேரத்தில் மைதிலி என்னைக் காதலி என்ற படம் வெளியாகியிருந்தது. திருப்பூரில் எங்கே திரும்பினாலும் "என்னாசை மைதிலிய்யே... என்னை நீ காதலி்ய்யே..." என்று ஒலித்தது. மதிய உணவுக்கான இடைவேளை விட்டபோது என்னைத் தேடியபடி பள்ளிக்கே வந்துவிட்டார். பாட்டிக்கு உடல்நலமில்லை என்று வகுப்பாசிரியரிடம் கூறிவிட்டு என்னை வெளியே கூட்டி வந்துவிட்டார். நான் பதற்றத்தோடு அவருடன் வந்தேன். "பாட்டிக்கு என்னாச்சு மாமா ?" என்று கேட்க, அவர் "பாட்டிக்கெல்லாம் ஒன்னுமில்ல... நாம சினிமாவுக்குப் போகப்போறோம்..." என்று சூரியாத் திரையரங்குக்கு மிதிவண்டியை மிதித்தார். அப்போதுதான் புதிதாகக் கட்டித் திறக்கப்பட்டிருந்த சூரியாவில் நான் பார்த்த முதற்படம் அது.

  திருப்பூரில் கட்டப்பட்ட திரையரங்குகளில் சூரியாவைப்போல் பல்வேறு முகங்களை மாற்றிக்கொண்ட திரையரங்கம் வேறில்லை. கழகப் பெருந்தலை ஒருவரின் திரையரங்கம் அது. அதனால்தான் சூரியா என்னும் பெயர். திறக்கப்பட்டபோது மாவீரனே முதற்படம். திருப்பூரில் எத்திரையரங்கு கட்டித் திறக்கப்பட்டாலும் முதற்படமாக இரஜினிகாந்தின் படத்தைத் திரையிடுவார்கள். கைராசி கருதி அவ்வாறு செய்தார்கள். மாவீரனை அடுத்து மைதிலி என்னைக் காதலி, விக்ரம் போன்ற படங்கள் வெளியாயின. அதற்குப் பிறகு புகழ்பெற்ற ஆங்கிலப் படங்களை வெளியிடத் தொடங்கினார்கள். அலியன்ஸ், அபைஸ் போன்ற படங்களை அரங்கு கொள்ளாத கூட்டத்திடையே அங்கேதான் பார்த்தேன். தொடர்ச்சியாய் ஆங்கிலப் படங்களை வெளியிட்டவர்கள் தடம்மாறி பாலுறவுப் படங்களை வெளியிட்டார்கள். அந்நிலைப்பிறழ்வு பார்வையாளர்களை இழக்கச் செய்தது. இன்றைக்கு அத்திரையரங்கம் செயல்படுகிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

  நாம் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்த ஆர்வக் காலங்களில் நம்மோடு ஒருவர் தொடர்ந்து வந்திருப்பார். ஆண் என்பதனால் அந்தத் தோழமை வெறும் பழைய நினைவாக நிறம் மங்கியிருக்கலாம். பெண்ணின் நிலையில் இதை எண்ணிப் பார்த்தால் அவர்களுடைய நினைவுகளின் பசுமை இன்னும் ஈரப்பதமாக இருக்கக்கூடும். என் நகரத்தில் நான் நண்பர்களின் வீடுள்ள பகுதிகளை முதலில் அறியத் தொடங்கினேன். அதன் பிறகு திரையரங்குகள் இருந்த பகுதிகளைத்தான் நன்கறிந்தேன். குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றியதில் நகரத்தின் ஒவ்வொரு தெருவையும் துலக்கமாக அறிந்துவிட்டேன். வழியெங்கும் எங்கெங்கே என்னென்ன நிறுவனங்கள் இருக்கின்றன என்பதும் தெரியும். அந்த அறிவுதான் பள்ளி முடித்ததும் எனக்குத் தூதஞ்சல் ஒன்றில் சேர்ப்பனையாளர் பணியைப் பெற்றுத் தந்தது. எதுவும் வீண் போகாது என்பதுதான் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட தலைப்பாடம்.

  English summary
  Cinema essay about watching movies in our childhood

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more