For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறந்த திரைப்பாடல் எப்படி இருக்க வேண்டும்?

By Shankar
|

- கவிஞர் மகுடேசுவரன்

சிறந்த திரைப்படப்பாடல் எப்படி இருக்க வேண்டும் ? இந்தக் கேள்வி என்னை எப்போதும் சிந்திக்கச் செய்வது. சில படங்களுக்கு நான் பாடல்கள் எழுதியபோது, ஒரு பாடல் காலத்தால் அழியாமல் காற்றில் உலவுவதற்கு எத்தகைய பண்புகளைக் கொண்டிலங்க வேண்டும் என்று ஆராய்ந்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலாசிரியரும் எத்தகைய உத்திகளைக் கையாள்கிறார்கள் என்பது தெரியும். நன்றாக இருந்தும் ஒரு பாடல் ஏன் தோற்கிறது என்பதைக் கூற முடியும். நாம் எல்லாருமே திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அதனினும் மிகுதியாக திரைப்படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள். ஒரு பாட்டு எப்படி எழுதப்பட்டிருக்கலாம் என்பதில் ஒவ்வொருவர்க்கும் ஒரு கருத்து இருக்கும். எல்லாப் பாட்டுக்கும் எல்லார்க்கும் பிடித்திருக்க வேண்டியதில்லைதான். ஆனால், வெற்றி பெற்ற பாடல்கள் அனைவர்க்கும் பிடித்துப் போனதாகவே இருக்கும்.

இயக்குநரோ கதாசிரியரோ கூறிய கதைச் சூழலுக்கேற்ப பாடலாசிரியர் பாடல் வரிகளை எழுதுகிறார். அந்தப் பாடலுக்கான இசையை இசையமைப்பாளர் கோக்கிறார். வாத்தியக் கலைஞர்கள் மீட்டுகிறார்கள். உரிய பாடகர்கள் பாடுகிறார்கள். ஒலிப்பதிவுப் பொறியாளர்கள் அவற்றைப் பதிகிறார்கள். நாம் கேட்கும் தரத்திலான பாடல் இந்த மட்டத்தில் உருவாகிறது. அதன் பிறகு அந்தப் பாடல் படமாக்கப்படுகிறது. அங்கே நடிகர்களும் படக்குழுவினரும் பங்களிக்கிறார்கள். திரைப்படத்தில் அப்பாடல் இடம்பெறுகிறது. மக்கள் பார்க்கிறார்கள். பாடல் நன்றாக இருந்தால் திரைப்படத்திற்கு வெளியேயும் பரவி நிலைபெறுகிறது. நன்றாக இல்லை என்றால் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போகிறது.

Which is a good film song?

திரைப்படப் பாடல் என்றால் என்ன என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தனிப்பட்ட நிலைமையை விளக்கும் ஒன்று. கதைச்சூழலின்படி திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கூறுவதும் கூற விரும்புவதும் நினைப்பதும் நினைவை அலைக்கழிப்பதும்தாம் திரைப்பாடல் வரிகளாக அமையும். அந்தக் கதை மாந்தரின் அகமொழியாகவோ, அவர்களைப் புறமிருந்து பார்ப்போரின் மொழியாகவோ ஒரு பாடல் இருக்கும். ஒட்டுமொத்தப் படக்கதையின் பிழிவாகவோ நாட்டு நிலவரத்தை ஒப்பிட்டுப் பேசுவதாகவோ சில பாடல்கள் அமையும். எடுக்கப்படுகின்ற படக்கதையை விட்டு விலகி அங்கே ஒரு சொற்றொடரைக்கூட அமைக்க இயலாது என்பதுதான் உண்மை.

இவற்றுக்கிடையே வேறு பல கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. இலக்கியச் செம்மையாக அமைந்தால் மக்களுக்கு விளங்காது என்பார்கள். பேச்சுமொழியில் இருக்கின்ற சொற்களைத் தவிர பிறவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று வேண்டுவார்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று படுத்துவார்கள். ஒரு பெண் இதைச் சொல்லக்கூடாது என்று மாற்றுவார்கள். 'ஒவ்வொரு வரியும் பழமொழிபோல் மேற்கோளாகிப் பரவும் தரத்தில் இருக்க வேண்டும்' என்று பேராசை கொள்வார்கள். 'எழுதுகின்ற வரிகள் படமாக்குவதற்கேற்ற காட்சிச் சித்தரிப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.. இந்தப் பாடலில் நாங்கள் ஒளிப்பதிவில் அசத்தப் போகிறோம்... அதற்கேற்ப வேண்டும்...' என்று கேட்பார்கள். 'நல்லாருக்கு... ஆனாலும் நிரம்பவும் கவிதையாக இருக்கே...' என்று விழிப்பார்கள். இவ்வாறு ஒரு திரைப்பாடலை எழுதுவதற்கு இருக்கின்ற தங்கு தடைகள் ஒன்றிரண்டில்லை. இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டுத்தான் உடுமலை நாராயணகவியும் தஞ்சை இராமையாதாசும் மருதகாசியும் கண்ணதாசனும் வாலியும் புலமைப்பித்தனும் வைரமுத்தும் எழுதினார்கள். இவற்றுக்கு இடையறாமல் தன்னை ஒப்புக்கொடுத்துத்தான் முத்துக்குமார் தன்னையே இழந்தான். 'நானும் பாட்டெழுதுவேன்...' என்று உங்களுக்கும் ஒரு நப்பாசை இருக்கும். போய் அமர்ந்தீர்கள் என்றால் கதறிக் கண்ணீர்விட வைத்துவிடுவார்கள். எதை எழுதிக்கொடுத்தாலும் ஏற்கமாட்டார்கள். 'இன்னும் கொஞ்சம் நல்லதா முயற்சி பண்ணுவோமே...' என்பார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து வருவீர்கள். அதற்குப் பிறகு அவ்வப்போது எழுதி வந்த கவிதையைக்கூட எழுதமாட்டீர்கள்.

Which is a good film song?

இப்போது உருவாகியிருக்கின்ற திரைப்பாடல் வடிவத்தின் தடயங்கள் பல தனிப்பாடல் திரட்டில் காணக்கிடைக்கிறது. தாம் பட்ட பாடுகளைப் புலவர்கள் பலர் தனிப்பாடல்களாகப் பாடியிருக்கிறார்கள். ஒரு புலவர் எண்ணற்ற பாடல்களால் அமைந்த நெடுநூலையே செய்ய வேண்டுமென்பதில்லை. அவ்வப்போது தோன்றுகின்ற மின்னல் எண்ணங்களையும் அன்றாடப் பாடுகளையும்கூட கவிதையாக்கலாம். அத்தகைய தனித்தனிப் பாடல்களின் நெடுந்தொடர்தான் காவியங்களும் பேரிலக்கியங்களும்.

இராமச்சந்திர கவிராயர் எழுதிய தனிப்பாடல் இது:

கள்ளிக்கேன் முள்வேலி கழுதைக்கேன்

கடிவாளம் கறுப்பில்லாத

உள்ளிக்கேன் பரிமளங்கள் உவர்நிலத்துக்கு

ஏன்விதைகள் ஒடித்துப் போடும்

சுள்ளிக்கேன் கோடாலி துடைப்பத்திற்கு

ஏன்கவசம் சும்மாபோகும்

பள்ளிக்கேன் அதிவீர மழவரங்க

பூபனெனும் பட்டந்தானே !

"கள்ளிக்கு முள்ளில் வேலி ஏன் ? கழுதைக்குக் கடிவாளம் ஏன் ? வெள்ளையாய் இருக்கும் வெங்காயத்திற்கு எதற்கு வாசனைச் சேர்ப்புகள் ? உவர்நிலத்துக்கு விதை எதற்கு ? கையாலே ஒடிக்கக்கூடிய சுள்ளிக்குக் கோடாலி ஏன் ? துடைப்பதற்கு ஏன் கவசம் ?" என்று அந்தப் பாடல் செல்கிறது. ஆக, இன்றைய திரைப்பாடல்களின் உள்ளடக்கம் தமிழின் பழம்பாடல்களில் பொதிந்திருக்கிறது. இவற்றிலிருந்து இழையெடுத்து நாடகங்களில் பாடல்கள் எழுதியவர்கள் உடுமலை நாராயணகவியும் தஞ்சை இராமையாதாசும். அவர்கள் வடிவமைத்துத் தந்தபடி தொடர்பவைதாம் நம் திரைப்பாடல்கள். பிறகு வந்த மருதகாசியும் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் இலக்கியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து மேலும் வளர்த்தெடுத்தார்கள். பாமரர்களுக்கும் விளங்கும் எளிமைத் தன்மைதான் திரைப்பாடல்களின் முதல் தகுதி.

நல்ல பாடல் என்பது முதல் வரியிலேயே கருத்தைக் கவரும். 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்று தொடங்கியதும் பாடல் கருத்து விளங்கிவிடுகிறது. 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது ?' என்னும் தொடக்கம் உடனே நம்மை ஈர்க்கிறது. 'கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...' என்பதற்கு மேல் அந்தப் பாடலில் உழவரை வேறெப்படி உயர்த்திக் கூறிவிட முடியும் ? 'குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது ?' என்னும் ஒரேவரிதான் அந்தப் படக்கதையின் சுருக்கம். அப்படியொரு முதல் வரியைப் பிடித்துவிட்டால் அந்தப் பாடல் காலத்தை விஞ்சி நிற்கும்.

யாவரும் விளங்கிக்கொள்ளும் எளிமை, இலக்கிய நாட்டுப்புற உள்ளடக்கக் கூறுகள், முத்தாய்ப்பான முதல்வரி - இவைதாம் ஒரு சிறந்த திரைப்பாடலின் முதல் தேவைப்பாடு. இவற்றுக்கு மேலும் பல தன்மைகள் இருக்கின்றன. அவற்றையும் அடுத்தடுத்த கட்டுரைகளில் விளக்குவேன்.

English summary
How could a lyricist make a good film song? Here is Magudeswaran's article on it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more