For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இளையராஜாவுக்கு யார் போட்டி?

  By Shankar
  |

  -கவிஞர் மகுடேசுவரன்

  தேரோட்டம் நடக்கும் சாலை என்றாலும் அதிலும் எல்லா வண்டிகளும் போகத்தானே செய்யும்? இளையராஜா திரையிசையமைப்பில் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் அவரோடு போட்டி போட்டு இசையமைத்தவர்கள் இருந்தார்கள். சந்திரபோஸ், எஸ்.ஏ. இராஜ்குமார், மரகதமணி போன்றவர்கள் இசையமைத்த படங்கள் வெளிவந்தபோது, "ராஜாவுக்குச் சரியான போட்டியாளர் வந்துவிட்டார், என்றுதான் அன்றைய இதழ்கள் எழுதின.

  இளையராஜாவின் இளவல் கங்கை அமரனே இந்தப் பட்டியலில் வருகிறார். 'வாழ்வே மாயம்' படப்பாடல்கள் கங்கை அமரனுக்கு முத்தாய்ப்பாக அமைந்தன. "எனக்கு இரண்டாம் வாழ்க்கை கொடுத்தவர் அமரன்தான்," என்று அப்படத்துக்குப் பாட்டெழுதிய வாலி நெகிழ்ந்து கூறுமளவுக்கு அப்பாடல்கள் வென்றன. கோழி கூவுது படத்தின் வெற்றியால்தான் கங்கை அமரன் ஓர் இயக்குநராகத் தொடர வேண்டியவர் ஆனார்.

  Who is competitor to Ilaiyaraaja?

  அதே நேரத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த படங்களும் வரிசையாக வந்தன. அந்த ஏழு நாட்கள், போக்கிரி ராஜா, கீழ்வானம் சிவக்கும் படப்பாடல்கள் விசுவநாதனைத் தொடர்ந்து அரியணையில் வீற்றிருக்கச் செய்தன. மெல்லிசை மன்னரை இளையராஜா முந்தியது எப்படி? அதற்கு விடை பின்னணி இசைதான். இளையராஜா தம் காலத்தின் எல்லா இசையமைப்பாளர்களையும் தோற்கடித்த இடமும் அதுதான். ரகுமான் வரும் வரைக்கும் இளையராஜாவின் பின்னணி இசைக்கோப்பு நுட்பத்தோடு வேறு யாருமே போட்டி போடவில்லை. பாடல்கள் வழியாகவே போட்டியிட்டுக் கொண்டிருந்தனர்.

  ஏவிஎம் நிறுவனம் அப்போது திரைப்படத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியது. ஏவி மெய்யப்பனார் மறைவினால் சிறிது காலம் படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்த அந்நிறுவனம் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் என்னும் இரண்டு பெரிய படங்களின் வழியாக வணிகச் சந்தையை மிரட்டியது. அவ்விரண்டு படங்களும் 'பாத்திரக்கடைக்குள் மதயானை' புகுந்ததுபோல் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் நாயகர்கள் ஐயந்திரிபில்லாமல் தம்மை முதன்மை நட்சத்திரங்களாக நிறுவிக்கொண்டனர். அவற்றுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். அந்நிறுவனம் தொடர்ச்சியான படத்தயாரிப்பில் ஈடுபட்டபோது தமக்கென்று 'ஒரு நிலையக் கலைஞரை' அமர்த்திக்கொள்ள விரும்பியதும் தவறில்லைதான்.

  ஏவிஎம் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் படத்தொடக்க நாளன்றே அப்படம் விற்கப்பட்டுவிடுமாம். அப்படி விற்கப்படும்போதே அப்படத்தின் வெளியீட்டு நாளையும் குறிப்பிட்டுவிடுவார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் வெளியீட்டு நாள் தவறாதிருப்பதுதான் அவர்களின் வணிக வெற்றி. அந்த வாய்மைதான் அவர்களுடைய விற்பேர் (Brand) நிலைத்திருக்க உதவியது. இசைக்கோப்பு, பாடல் பதிவு தொடர்பானவற்றுக்காக இளையராஜா போன்ற கடும்பணிக் கலைஞர் ஒருவரைச் சார்ந்திருத்தல் ஏவியெம் தரப்புக்கு இயலாமல் போயிருக்கலாம். எனவே, சந்திரபோஸ் ஏவியெம்மின் படங்களுக்குத் தொடர்ந்து இசைத்தார். மனிதன், சங்கர்குரு, பாட்டி சொல்லைத் தட்டாதே, வசந்தி போன்ற படங்களில் சந்திரபோஸ் நல்ல பெயரெடுத்தார். ஏவியெம் நிறுவனம் மும்முரமாகத் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்திரபோசுக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன.

  திடீரென்று பருவ ராகம் என்ற பெயரில் கன்னடப் படமொன்று மொழிமாற்றமடைந்து வந்தது. அப்படத்தின் கல்லூரிக் காதல் கும்மாளப் பாடல்கள் மாவட்டத் தலைநகர்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளில் அலறின. அதற்கு அம்சலேகா என்பவரின் இசை. அவரையே 'கொடி பறக்குது' என்னும் படத்துக்கு இசையமைக்க வைத்தார் பாரதிராஜா. 'சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு...' பாடலை மறக்க முடியாதுதான். இசைப்பாட்டுக்குப் பன்முக ஈர்ப்பாற்றல் வேண்டும். அதைத் தருவதற்கு அம்சலேகா தவறிவிட்டார் என்றே சொல்லலாம். அதனால்தான் பாரதிராஜா பிணைக்கையெழுத்து போட்டும்கூட அம்சலேகாவால் இங்கு நிலைக்க முடியவில்லை.

  பாரதிராஜாவின் வாய்ப்பைப் பெற்ற இன்னோர் இசையமைப்பாளர் தேவேந்திரன். கச்சேரி ஒன்றில் 'கண்ணுக்குள் நூறு நிலவா ?' பாடலைப் பாடி முடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூறினார்: "தேவேந்திரன் அருமையான இசைக்கோப்பாளர். அவர் ஏன் வாய்ப்பின்றிப் போனார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்." மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது படப்பாடல்களால் தேவேந்திரன் நம்பிக்கை ஊட்டினார். ஏனோ அவரால் மேலும் தொடர முடியவில்லை.

  'சின்ன பூவே மெல்லப் பேசு' படம் வந்தபோதே எஸ்.ஏ. இராஜ்குமார் தமிழகமெங்கும் கேட்கப்பட்டார். அடுத்ததாய்ப் புது வசந்தம் வெளிவந்து வெற்றி பெற்றது. அவ்வெற்றிக்குப் பிறகு எஸ்.ஏ. இராஜ்குமார் இளையராஜாவுக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்டார். புது வசந்தம் படத்தில் பாடல்கள் கச்சிதமான வடிவத்தில் அமைந்தன. படத்தின் வெற்றிக்கும் பாடல்களே காரணம். ஆனால், இராஜ்குமாருக்குத் தொடர்ச்சியாய்ப் படங்கள் வரவில்லை. எதிர்க்கடை போட இயன்ற அளவுக்கு அவரால் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை.

  இடையிடையே டி. இராஜேந்தர் இசையமைத்த படங்களும் வந்தபடியிருந்தன. டி. இராஜேந்தர் தம் படங்களுக்கு இசையமைத்தோடு கூலிக்காரன் போன்ற பெரிய படங்களுக்கும் இசையமைத்தார். கூலிக்காரன் படப்பாடல்கள் ஒலிக்காத இடமேயில்லை. இவற்றுக்கு நடுவில் ஆபாவாணன் குழுவினரை முன்னொற்றிய திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படங்களும் வந்தன. அவற்றுக்கு மனோஜ் கியான் என்னும் இரட்டையர் இசைத்தனர். ஊமை விழிகள் படப்பாடல்கள் கேட்டாரை மேலும் மேலும் கேட்க வைத்தன. தாய்நாடு, உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் போன்ற படங்களின் பாடல்கள் இன்றைக்கும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. செந்தூரப்பூவே திரைப்படத்தின் வெற்றியை இன்றைக்கு எந்தப் படத்தின் வெற்றியோடும் ஒப்பிட முடியுமா? வாய்ப்பே இல்லை.

  விசு, இராம நாராயணன் படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்துக்கொண்டிருந்தார். அப்படங்களும் நட்டமில்லாமல் ஓடின. 'வண்ண விழியழகி வாசக் குழலழகி மதுரை மீனாட்சிதான்...' என்னும் பாடல் இராம நாராயணனின் ஆடிவெள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. அப்போதைய வெற்றிக் கணக்குகளின்படி ஆடிவெள்ளி திரைப்படம் கரகாட்டக்காரனுக்கு அடுத்ததாய்க் கருதத்தக்க வெற்றிப் படம். பெண்மணி அவள் கண்மணி திரைப்படத்தில் சங்கர் கணேஷின் பாடல்கள் அருமையாக அமைந்தன. 'எங்க சின்ன ராசா', 'ஊர்க்காவலன்' போன்ற பெரிய படங்களும் சங்கர் கணேஷ் இருப்பை நிறுவின.

  பிறகு தேவா, சௌந்தர்யன், பாலபாரதி, வித்யாசாகர் என்ற வரிசை தொடர்ந்து இரகுமான் வரை வந்தது. இளையராஜாவைப் போலவே இசையமைப்பது என்று தேவா தன் வழியை வகுத்துக்கொண்டபோது இளையராஜாவின் போட்டி இசையமைப்பாளர் என்ற ஒப்பீடு ஒழிந்தது. அவரை அணுகமுடியாது என்பதால் தமக்குக் கிடைத்த வாய்ப்பு என்று எல்லா இசையமைப்பாளர்களும் விளங்கிக்கொண்டனர். அவர் ஒரு மாமேதை என்று புகழும் இசையமைப்பாளர்கள் வரத்தொடங்கினர்.

  English summary
  Whos is Ilaiyaraaja's competitor? Here is an analysis from Poet Magudeswaran
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X