»   »  ரஜினி- ரஞ்சித்தின் கபாலிக்கு எதிராக சிலர் எழுதுவது ஏன்?

ரஜினி- ரஞ்சித்தின் கபாலிக்கு எதிராக சிலர் எழுதுவது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் பிரமாதமான வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்கள் தாண்டி குடும்பத்துடன் பார்க்க ஆரம்பித்துள்ளனர் மக்கள்.

ஆனால் இந்தப் படத்தை சிலர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் 'இத்தனை வன்மம் தேவையா? இதன் பின்னணி என்ன?' என்று யோசிக்கும் அளவுக்கு உள்ளன அந்த விமர்சனங்கள்.

முதல் காரணம், இயக்குநர் ரஞ்சித்தின் பின்னணி. இரண்டு படங்கள்தான் அவர் இதுவரை தந்திருக்கிறார். இரண்டுமே பெரிய வெற்றிப் படங்கள் அல்ல. ஆனால் வெகுவாகப் பாராட்டப்பட்டவை. குறிப்பாக மெட்ராஸ் படத்தின் உருவாக்கம், அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் இன்றைய வாழ்நிலை போன்றவை மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

Why hatred campaign against Kabali?

ரஜினிக்கு தன்னைப் பிடித்துப் போன காரணம் இதுதான் என்று ஏற்கெனவே பல பேட்டிகளில் ரஞ்சித் கூறியுள்ளார். அவர் தனது முந்தைய படங்கள் இரண்டிலுமே, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைப் பிரதிபலித்திருந்தார். படங்களில் வாய்ப்புள்ள இடங்களில் அந்த குறியீடுகளைப் பயன்படுத்தத் தவறவில்லை.

கபாலியில் கதையின் சூழலில், நாயகனின் பின்னணியை வைத்து இந்த குரலை கொஞ்சம் ஓங்கி ஒலித்திருக்கிறார். அதைத்தான் சிலர் சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம், அந்த மக்களின் வலியும் வேதனையும் புரிந்து கொள்ள முடியாமல் போனதுதான். அல்லது, இவர்கள் என்ன திடீரென்று திரையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற பொறாமையுடன் கூடிய கோபமும்தான் என்கிறார்கள் சினிமா விரும்பிகள்.

"இன்றைக்கு தமிழ்ச் சமூகம் எதையுமே சாதீய கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் நச்சு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டுவிட்டது. நமது முன்னோர்கள், தலைவர்கள் 60 ஆண்டுகளாக எதை மெல்ல மெல்ல வேரறுக்க முயன்றார்களோ அந்த சாதி வேர் இப்போது மீண்டும் வேகமாகத் துளிர்க்கிறது. அதனால் விளைந்த கோரங்களை, கொடுமைகளைத்தான் ரயில் தண்டவாளங்களின் ஓரங்களில் பிணங்களாகப் பார்த்தோம். இத்தனைப் படித்தும், பகுத்தறிந்து பார்த்தும், ஒரு பிரச்சினை என்று வந்ததும் அதற்கு சாதி மூலம் பூசுகிறார்கள். இந்தத் தவறுக்கு மீடியாவும் உடந்தையாக இருப்பதுதான் கேவலம்," என்கிறார் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிரபல இயக்குநர் ஒருவர்.

Why hatred campaign against Kabali?

"ரஜினிக்கு இந்தக் கதை தெரியும். திரைக்கதையை முழுமையாக வாசித்த பிறகே நடிக்க ஒப்புக் கொண்டார். வசனங்கள், காட்சிப்படுத்தலின் போது ரஞ்சித் பயன்படுத்திய அம்பேத்கர், புத்தர் படங்கள் எல்லாம் அவரது கவனத்துக்கு வராமலில்லை. தெரிந்துதானே அவர் நடித்தார். காரணம், அந்த கருத்தியலில் அவருக்கு உடன்பாடு இருந்ததால்தான். ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு ஆதரவாக ஒரு குரலை, இந்த நாட்டில் அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒரு சூப்பர் ஸ்டார் வாயால் சொன்னால்தான் மண்டையில் ஆணி அறைந்த மாதிரி புரியும் என்ற ரஞ்சித்தின் எண்ணத்தைப் புரிந்து அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் ரஜினி. வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வேலையை செய்திருக்கிறார் ரஜினி. அதற்கு முதலில் பாராட்டுகள். ரஞ்சித் எதிர்ப்பார்த்ததற்கும் மேலே நடந்திருக்கிறது. அது பொறுக்காமல் படத்தை எதிர்த்து எழுதுகிறார்கள். அவரவர் வேஷங்கள் கலைந்து கொண்டிருக்கின்றன. இதுதான் உண்மையான மகிழ்ச்சி!", என்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

ரஞ்சித்துக்கு எதிராக மத்திய மாவட்டங்களில் சிலர் ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தியதும் கபாலி ரிலீஸ் சமயத்தில் நடந்திருக்கிறது. ஆனால் படத்துக்குக் கிடைத்த பிரமாண்ட வரவேற்பில் அது அடிபட்டுப் போனது.

இந்த விவகாரத்துக்கு முத்தாய்ப்பாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இப்படிச் சொல்கிறார்:

"சாதி என்ன சாதி... மனிதன் தோற்றமும், இருத்தலுக்காக அவன் வேட்டையாடி சாப்பிட்டதும், ஒரு கட்டத்தில் வேற்றுமை காரணமாக தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்ததும், பின்னர் அதுவே சாதி மதம் என திரிந்து மோதிக் கொண்டதும் வரலாறு. இந்தப் படம் சாதியம் பேசவில்லை. அது இந்தப் படத்தின் நோக்கமும் அல்ல. எல்லை கடந்த தமிழ்க் குழுக்களின் இன்னொரு கதை. எல்லை கடந்து போனாலும் தமிழன் எதையெல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டுமோ அவற்றை விட்டொழிக்காமல் தேவையற்றவைகளைச் சுமந்து மோதிக் கொண்டார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ரஞ்சித். இந்தக் கதைக்கு எப்படி காட்சி வேண்டுமோ அப்படி அமைத்திருக்கிறார். சாதிக் கண்ணோட்டத்தில் இதைப் பார்க்க வேண்டாம். ஒரு சிறந்த படைப்பு, இயல்பான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மக்கள் குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கிறார்கள். மிகச் சிலர்.. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் வன்மத்துடன் நஞ்சைத் துப்புகிறார்கள். அவர்கள் யாரென்பது எனக்குத் தெரியும். அற்ப வியாபார காரணங்களுக்காக சில ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வன்மம் காட்டுவதை அறியாதவனல்ல நான். அவர்களின் சாயத்தை மக்களே வெளுத்துவிட்டார்கள்" என்றார்.

English summary
Why some guys and a section of media writing against Rajinikanth's Kabali? Criticising director Ranjith? Here is the answer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil