»   »  தியேட்டர்களுக்கு ஏன் மக்கள் வருவதில்லை... ஒரு பார்வை!

தியேட்டர்களுக்கு ஏன் மக்கள் வருவதில்லை... ஒரு பார்வை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமா ஸ்ட்ரைக் முடியுமா?..முடியாதா?- வீடியோ

இப்போது நடக்கும் சினிமா வேலை நிறுத்தத்தில் முக்கிய பேசு பொருள் 'தியேட்டர்கள்'.

"தியேட்டர்காரர்கள் சரியானபடி கணக்கு கொடுப்பதில்லை, கொள்ளையடிக்கிறார்கள்," என்பது தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு.

"தியேட்டருக்கு நல்ல படங்கள் வருவதில்லை, கூட்டமும் வருவதில்லை, தியேட்டர் நடத்துவதற்குப் பதில் அந்த இடத்தில் வேறு ஏதாவது செய்தால் இதைவிட நல்ல லாபம் கிடைக்கும்," என்பது தியேட்டர்காரர்களின் புலம்பல்.

Why public avoiding cinema theaters?

இரண்டு பேர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பின்னே எங்கேதான் பிரச்சனை?

தியேட்டர்காரர்கள் சொல்லும் 'நல்ல படம்' என்பது அளவுக்கதிகமான படங்களின் வரவு மற்றும் டிஜிட்டல் கேமராவினால் எளிதான கைக்கூடல் இவற்றினால் விளைந்தவை. தற்சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இதற்குத் தீர்வு காண முயற்சி நடக்கிறது. பார்ப்போம்.

இப்போது தியேட்டருக்கு வருவோம்:
. எல்லா தியேட்டர்களுக்கும் ஏன் கூட்டம் வருவதில்லை?
எந்தப் படம் போட்டாலும் சில தியேட்டர்களுக்கு மட்டும் எப்படி கூட்டம் வருகிறது?
காரணம், தியேட்டரின் பராமரிப்பு மற்றும் தியேட்டரோடு சேர்ந்த இன்னபிற வசதிகள். மால் தியேட்டர்களுக்குக் கூட்டம் வருவதற்குக் காரணம், பர்ச்சேஸ் செய்துவிட்டு, ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டுவிட்டு, குழந்தைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டு அதோடு சினிமா பார்க்கும் வாய்ப்பு இருப்பதால்தான்.

சரி, தனிக்கட்டையாக இருக்கும் சிங்கிள் தியேட்டர்களுக்குக் கூட்டம் வர என்ன செய்யலாம்? சில ஆலோசனைகளைப் பார்ப்போம்.

1. கண்டிப்பான முறையில் முகம் சுழிக்காத அளவு, பளபளவென்று இல்லாவிட்டாலும் பளிச்சென்று இருக்கும் வகையில் சுத்தமாக தியேட்டரின் உள்ளே, வெளியே மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். எத்தனை தியேட்டர்கள் மூத்திர சந்துக்குள் நுழையும் எஃபெக்டோடு உள்ளன என்று எல்லோருக்கும் தெரியும். பராமரிக்காத தியேட்டருக்கு அதனைச் சார்ந்த சங்கம் அபராதம் விதிக்க வேண்டும். மட்டுமல்லாமல் மிக நன்றாகப் பராமரிக்கப்படும் முதல் மூன்று தியேட்டர்களுக்குப் பரிசுகள் வருடா வருடம் வழங்க வேண்டும். அதனையும் விழா வைத்துக் கொடுக்க வேண்டும்.

2. எந்தப் படம் போட்டாலும் தியேட்டர் சார்பாக பிட் நோட்டீஸ் அச்சடித்து சுற்றுப் பகுதிக்கு விநியோகிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் அனுப்பும் போஸ்டர்களை விரயம் செய்யாமல் ஒட்ட வேண்டும்.

3. டிக்கெட் சம்பந்தமாக அடிக்கடி குலுக்கல் வைத்து ஆடியன்ஸுக்குப் பரிசுகள் வழங்க வேண்டும். கணினி முன்பதிவு கட்டுப்படியாகும் விலையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பத்து ரூபாய்க்குள்.

4. தரம் குறையாத பொருட்களுடன் கேண்டீன் இருக்க வேண்டும். விலையும் சரியானபடி இருக்க வேண்டும். 'ரெண்டு சமோசா வாங்கினால் ஒரு டீ இலவசம்', ஐந்து டிக்கெட் ஒருவர் வாங்கினால் ஒரு பாப்கார்ன் இலவசம், பைக்கில் வருபவருக்கு குலுக்கல் முறையில் பெட்ரோல் டோக்கன் வழங்குவது, தியேட்டரின் தரம் பற்றி உயர்வாக வாசகம் எழுதுபவருக்கு ஒரு டிக்கெட் இலவசம்... இப்படி நிறைய தர வேண்டும்.

5. ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு சிறிய பகுதி சிறுவர்கள் விளையாட ஏற்பாடு செய்திருக்க வேண்டும். டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இளைப்பார இடம் இருக்க வேண்டும். எந்தப் படம் போட்டாலும் பரவாயில்லை என்று குடும்பங்கள் ஆர்வமாகவும், சந்தோசமாகவும் தியேட்டருக்கு வர விருப்பப்பட வேண்டும்.

6. எந்தத் தியேட்டரிலும் மது அருந்திவிட்டு படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பான்பராக் தடை வேண்டும். இவை இரண்டும் எந்தப் படம் போட்டாலும் குடும்பங்களை வர விடாமல் தடுத்து விடும்.

7. முன்பெல்லாம் மாட்டு வண்டியிலும், பின்பு ஆட்டோவிலும் தியேட்டர் பற்றியும், படம் பற்றியும் பிரச்சாரம் நடக்கும். இப்போதும் கொஞ்சம் நவீனமாக முயற்சிக்கலாம்.

இது போட்டி நிறைந்த உலகம். பொழுதுபோக்கிற்கு நிறைய வழிகள் வந்துவிட்டன. ஆனாலும் தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு வகையான சுகமான அனுபவம். அதை மூட்டைப் பூச்சி இல்லாத, உடைந்து ஆடாத, அழுக்காய் கப்படிக்காத நல்ல சேர்களில் அமர்ந்து பார்க்கும்படி செய்ய வேண்டும்.

வேண்டா வெறுப்பாய் பிளீச்சிங் பௌடர் மட்டும் தூவி விட்டு எனக்கென்ன என்று விட்டுவிடாமல், நல்லவிதமாகப் பராமரிக்கப்பட்ட டாய்லெட் இருப்பது அவசியம்.

புது முயற்சிகள் கண்டிப்பாகப் பலன் தரும். மேற்சொன்ன விசயங்களைக் கடைப்பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. தியேட்டரையே கட்ட முடிந்த நம்மால் அதைப் பராமரிப்பது முடியாத காரியமா?

முயன்றுதான் பார்ப்போமே!

- கஸாலி.

English summary
Why public avoiding cinema theaters? Here is an analysis.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X