twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பத்மாவதி' - வரலாற்றுத் திரிப்பா? உண்மையில் என்ன பிரச்னை?

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    பத்மாவதி இந்தி படத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?- வீடியோ

    சஞ்சய் லீலா பன்சாலி என்கிற பிரபல ஹிந்தி இயக்குனர் படைப்பில் 'பத்மாவதி' என்கிற படம் வெளிவர இருக்கிறது. இது தடை செய்யப்பட வேண்டும் என்கிற கூக்குரல்கள் ராஜ்புத் சமூகத்தினரால் எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக மிகவும் வெளிப்படையாகவும் காங்கிரஸ் ஓரளவு தயங்கித் தயங்கியும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.

    ராஜஸ்தானில் உள்ள சித்தோர் என்கிற சமஸ்தானத்தில் ரத்னசேனன் என்கிற அரசனின் மனைவி பத்மாவதி பற்றிய படம் இது. சின்ஹால் எனும் ஊரில் வசிக்கும் பத்மாவதி எனும் பெண்ணின் பேரழகு பற்றி ஒரு பேசும் கிளி மூலம் ரத்தினசேனன் கேள்விப்படுகிறான். அதிலேயே அவள் மேல் பெரும் மையல் கொண்டு அவளை அடைய எல்லாவற்றையும் துறந்து வீரர் குழு ஒன்றுடன் புறப்படுகிறான். அவனுக்கு ஏற்கெனெவே நாகமதி எனும் மனைவி இருக்கிறாள். ரத்தினசேனன் நடத்தையைக் கண்டு அவள் பெரும் வருத்தமுறுகிறாள். ஆனாலும் அவன் பயணத்தை தொடர்ந்து பெரும் துயரங்களுக்குப் பின் பத்மாவதியை கண்டடைகிறான். அவளை மணமுடித்து சித்தோருக்கு கூட்டி வருகிறான். அப்போது ரத்தினசேனனால் அரண்மனையை விட்டு நீக்கப்பட்டிருந்த ஒரு அமைச்சர் அவனை பழி வாங்க வேண்டி தில்லி சென்று சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் பத்மாவதியின் பேரழகினை விவரிக்கிறான். அந்த விவரணையில் மயங்கிய கில்ஜி பத்மாவதியை அடைய வேண்டி படைகளுடன் சித்தோர் விரைகிறான். அங்கே நடக்கும் போரில் ரத்தினசேனன் காயமுற்று இறக்கிறான். பத்மாவதியும் நாகமதியும் தன் கணவனின் சிதையில் புகுந்து உயிர்த்தியாகம் செயகிறார்கள். கில்ஜி அரண்மனை புகும் நேரம் அவனுக்கு பத்மாவதியின் சாம்பல் மட்டுமே கிடைக்கிறது.

    Why they against for padmavati release -Padmavati detailed history

    இதுதான் பத்மாவதி. ஒரு கூடுதல் விஷயம், இது தமிழிலும் படமாக வந்திருக்கிறது. 'சித்தூர் ராணி பத்மினி' என்கிற தலைப்பில், சிவாஜி, பதமினி, நம்பியார் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தியிருக்கிறார்கள். ஹிந்தியிலும் 'மஹாராணி பதமினி' என்ற பெயரில் பதமினியே நடித்து வெளிவந்திருக்கிறது

    இந்த சர்ச்சையில் ராஜ்புத் சமூகத்தினருக்கு இருக்கும் புகார்கள் இரண்டு: ஒன்று பன்சாலி வரலாற்றை திரித்து விட்டார். இரண்டு, பத்மாவதி எனும் மானமிகு ராணியின் பெருமையைக் குலைத்து விட்டார்.

    முதல் புகாரை பார்ப்போம். கில்ஜி சித்தோரை தாக்கியது 13ம் நூற்றாண்டில். மேற்சொன்ன சம்பவங்கள் மாலிக் முஹம்மது எனும் ஒரு சூஃபி துறவி எழுதிய 'ப்ரேமாக்யான்' என்கிற கவிதை இலக்கியத்தில் இருக்கிறது. அது எழுதப் பட்டது 16ம் நூற்றாண்டில். அதாவது பத்மாவதி என்கிற பாத்திரம் முதன் முதலில் அறிமுகமானது ஒரு கற்பனைப் படைப்பில்தான். அதற்கு முந்தைய எந்த வரலாற்று எழுத்துகளிலும் இந்த ராணி பற்றிய குறிப்புகள் இல்லை. சொல்லப்போனால் பத்மாவதி என்கிற ஒரு ராணி சின்ஹாலில் பிறந்து சித்தோரில் வாழ்ந்து மரித்ததற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. கில்ஜி இந்த ராணியை தேடிப் போனதற்கும் ஆதாரம் இல்லை.

    இது வரலாறே இல்லை எனும் போது திரிப்பதற்கு முகாந்திரமும் இல்லை. ஒரு படைப்பாளியின் கற்பனையில் உருவான ஒரு பாத்திரம் இன்னொரு படைப்பாளியின் கற்பனையில் சிறிய மாற்றங்கள் கொள்வதில் ஆச்சரியமோ தவறோ இல்லை. சொல்லப் போனால் மாலிக் எழுதிய காலத்தில் இருந்து பத்மாவதி பெரும் மாற்றங்கள் கொண்டே வந்திருக்கிறாள். வடஇந்தியாவில் பெரும் பிரசித்தி பெற்று விட்ட இவள் கதை பெர்சியன், பெங்காலி, குஜராத்தி, ஜெயின் இலக்கியங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு எழுதப் பட்டிருக்கிறது. 18ம் நூற்றாண்டில் வேறொரு கதையில் ரத்தினசேனன் மேவார் சமஸ்தான அரசனாக மாறிப் போகிறான்.

    ஜேம்ஸ் டாட் என்கிற, ராஜபுதன சமஸ்தானத்தில் பணியில் இருந்த, ஆங்கில அதிகாரி 19ம் நூற்றாண்டில் எழுதிய புத்தகத்தில் ராஜபுதனர்களை முஸ்லிம்களுக்கு எதிராக வீரமாக போராடிய தியாகிகளாக சித்தரித்திருந்தார். இதில்தான் முதல் முறையாக பத்மாவதியின் தியாகம் முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துக்களின் போராட்டமாக உருவகப் பட்டிருந்தது. அதுவரை வெறும் கதையாக வழங்கப் பட்டிருந்த ராணி இந்தக் கட்டத்தில்தான் ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையின் தியாகச் சின்னமாக மாறிப் போனாள். எனவே வரலாற்றை திரித்து விட்டார்கள் என்கிற புகாரே அர்த்தமற்றது.

    இரண்டாவது புகாருக்கு வருவோம்: பத்மாவதியின் மானம் குலைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். மானம் என்றால் இங்கே என்ன குறிக்கப் படுகிறது? அவள் கற்பு. அதாவது கணவன் இறந்ததும் தானும் சிதையில் புகுந்தது வீரச் செயல். கணவனைத் தாண்டிய வேறு வாழ்வை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று பெண்களுக்கு அறிவுறுத்த பத்மாவதி பயன்படுகிறாள். ரத்தினசேனன் முதல் மனைவியையும் தன் ராஜ்ஜியத்தையும் விட்டு விட்டு வேறொரு அழகியைத் தேடி போனது இங்கே பிரச்சனையே இல்லை. கில்ஜி செய்தது பிரச்னை, ஏனெனில் அவன் முஸ்லீம். பத்மாவதி உயிரோடு இருந்திருந்து அவனால் கவரப் பட்டிருந்தால் அது பத்மாவதிக்கு நடந்த அநீதி இல்லை; ராஜபுதன சமூகத்துக்கு நடந்த அநீதி. அதாவது பத்மாவதியின் யோனியில் ராஜபுதன மானம் புதைந்து கிடக்கிறது.

    பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு பெயர் போன மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. கருவில் பெண் குழந்தைகளை கொலை செய்வது, வரதட்சணை பிரச்னை, பெண் ஆண் குழந்தைகளிடம் உள்ள கல்வி இடைவெளி இவை ராஜஸ்தானில் இருக்கும் பெரிய பிரச்சனைகள். இப்போதே இப்படி என்றால் 13ம் நூற்றாண்டில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். ரத்தினசேனன் பெரிய பெண்ணியவாதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே ரத்தினசேனன் நல்லவன், கில்ஜி கெட்ட மனிதன் என்கிற வாதம் அங்கே எடுபடாது. ஹிந்து முஸ்லீம் இரண்டு அரசர்களும் பற்பல மனைவிகள், அந்தப்புர அழகிகள் என்று வாழ்ந்து வந்த காலம். பெண்கள் ஒரு போகப் பொருளாகவும் குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கப் பட்ட காலம். எனவே, அங்கே பத்மாவதி நிகழ்த்திய தியாகம் என்று சொல்லப் படுவதுதான் பெண்களை அவமானப் படுத்தும் விஷயம். ஆனால் இன்றைக்கு ராஜ்புத் சாதியினர் நடத்தும் போராட்டத்தின்படி சிதையில் புகுந்து சாவதுதான் பெண்களுக்கு பெருமை. அதுவும் சாதி மாறாமல், மதம் மீறாமல் இருப்பதுதான் பெருமை என்கிற அர்த்தம் புலப்படுகிறது.

    பத்மாவதி ஹிந்து முஸ்லீம் போரின் சின்னமல்ல. அவள் சாதிக் கட்டுப்பாட்டின் சின்னம். ஆணாதிக்கத்தின் சின்னம். Patriarchy எனப்படும் தந்தை-வழிக் குல முறையின் சின்னம். இதெல்லாம் 16ம் நூற்றாண்டுக் கதையில் வெளிப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஏனெனில் அந்தக் காலம் அப்படி. ஆனால் இன்றைய தேதியில், பெண்ணியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில், பெண் மீதான அடக்குமுறையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு சமூகம் தங்கள் தியாகச் சின்னத்துக்கு ஆதரவாக போராடுவதுதான் இங்கே முக்கிய பிரச்சனையாக கருதப் பட வேண்டும். ஆகவே, ஒரு கற்பனைப் பாத்திரத்துக்கு தன் சுய கற்பனையால் மேலும் மெருகூட்டும் சஞ்சய் லீலா பன்சாலியின் முயற்சி எந்த விதத்திலும் ஆட்சேபிக்கத் தக்கதல்ல. படம் பார்த்து அதில் எதாவது விமர்சனங்களை முன் வைக்கலாம். ஆனால் படமே கூடாது என்பது இந்த மாதிரி போக்கிரித்தனங்களை ஊக்குவிக்கவே பயன்படும்.

    கடைசியாக, 'வரலாற்றை திரிப்பது' பற்றி. பத்மாவதி மாதிரி ஒரு கதைநாயகியை 'திரிப்பதே' இவர்களுக்கு ஆட்சேபிக்கத் தக்கதாக இருக்கிறது. ஆனால் 'தேஜோமய பாரத்' என்கிற புத்தகம் குஜராத் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் உள்ளது. அதில் வேதகாலத்தில் மோட்டார் கார்கள் இருந்தன. மரபணு தொழில் நுட்பம் பயன்பாட்டில் இருந்தது என்றெல்லாம் எழுதப் பட்டிருக்கிறது. இவை இரண்டுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. (இந்தப் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதி இருக்கிறார்.) ராமாயணம் உண்மையாக நடந்த வரலாற்று சம்பவம் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவர் சுதர்சன ராவ் கூறுகிறார். சொல்லி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு ஒரு வரலாற்று ஆதாரம் கூட யாரும் இதுவரை கொடுக்கவில்லை. சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தை வேவு பார்க்க நேரு உளவாளிகளை நியமித்து இருந்தார் என்று பாஜகவினர் சொல்லி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பிரதமரே வெளியிட்ட போஸ் ஆவணங்கள் எதிலும் இது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தாஜ்மகால் முன்னர் ஒரு சிவன் கோயிலாக இருந்தது என்று பாஜக எம்எல்ஏக்களே சொல்லிக் கொண்டு இதுவரை ஒரு சான்று கூட தராமல் இருக்கிறார்கள்.

    இவையெல்லாம்தான் வரலாற்றுத் திரிப்புகள். இவை எல்லாம் எந்தக் கவனிப்பும் இல்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு படைப்பாளியின் கற்பனை காவியம் சாதியவாதிகளால் தாக்கப் படுகிறது. மதவாத வலதுசாரி அரசியல் அதற்கு துணை போகிறது.

    - ஶ்ரீதர் சுப்ரமணியம்

    English summary
    Deepika Padukone, Ranveer Singh and Shahid Kapoor starred 'Padmavati' film directed by Sanjay leela bhansaali release has postponed due to various protests. What is the actual controversy in this film?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X