அமரன் படத்தின் வசூலை முந்துமா மதராஸி?.. கூலியை தொடர்ந்து அடுத்த பாக்ஸ் ஆபீஸ் பஞ்சாயத்து ஆரம்பம்!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன் மற்றும் வித்யூத் ஜமால் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. கடைசியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், மதராஸி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் குறித்த விவாதங்கள் இப்போதே கிளம்பியுள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் முதல் 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்த சன் பிக்சர்ஸ் அதன் பின்னர் விநாயகர் சதுர்த்தி முடிந்த பின்னர் கூட எந்தவொரு வசூல் அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கூலி திரைப்படம் 500 கோடி வசூல் செய்ததா? இல்லையா? என்கிற பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அடுத்ததாக மதராஸி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் அமரன் படத்தின் வசூலை முந்துமா என கிளம்பியிருக்கிறது.
100 கோடி முதல் 300 கோடி வரை: நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டி வெற்றிநடை போட்டது. அனைத்து ரசிகர்களுக்கும் அந்த படம் பிடித்தது. அந்த படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படமும் சூட்டோடு சூடாக 100 கோடி வசூலை அள்ளியது. ஆனால், அதன் பின்னர் வெளியான பிரின்ஸ், அயலான் மற்றும் மாவீரன் உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை கூட எட்டவில்லை. சிவகார்த்திகேயன் அவ்வளவு தான், காலி இனிமேல் வசூல் எல்லாம் வராது, அமரன் படத்தின் கிளைமேக்ஸில் இறந்துவிடுவார், சென்டிமென்ட்டாக படம் ஓடாது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஆனால், 100 கோடியில் இருந்து 300 கோடி வசூலை அமரன் படம் அள்ளி அனைவரையும் வாயடைக்க வைத்தது.
மதராஸி பாக்ஸ் ஆபீஸ் எப்படி இருக்கும்?: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துப்பாக்கி 2 படத்தை போல தூள் கிளப்பும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், தர்பார், சிக்கந்தர் படங்களின் தோல்வி தான் ஏ.ஆர். முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கிறது. மதராஸி படத்தின் ஓபனிங் சிவகார்த்திகேயனுக்காக சிறப்பாக இருந்து 20 கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் வந்தால், மதராஸி படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் வசூலை முந்துமா?: இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அமரன் படத்தின் வசூலை முந்திய ஒரே படம் என்றால் அது ரஜினிகாந்தின் கூலி படம் தான். அஜித் குமாரின் குட் பேட் அக்லி படமே 200 கோடி போஸ்டருக்கு மேல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் வசூலை மதராஸி தாண்டினாலே பெரிய விஷயம் தான் என்றும் அட்லீஸ்ட் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் 150 கோடி வசூலையாவது மதராஸி தாண்ட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மாஸ் காட்டும் எஸ்கே: பேட்டிகளில் உட்கார்ந்துக் கொண்டு உருட்டாமல் இந்த முறை பெங்களூர், கோவை என ஏகப்பட்ட ஏரியாக்களுக்கு நேரடியாக சென்று மதராஸி படத்தை ப்ரோமோட் செய்து வருகிறார். ருக்மணி வசந்துக்கு விஜய் சேதுபதியுடன் நடித்த முதல் தமிழ் படமான ஏஸ் தோல்வியை கொடுத்த நிலையில், மதராஸி வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் தரமாக இருந்தால் 200 கோடிக்கும் மேல் வசூல் வரும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











