»   »  எழுத்துக்குத் திரைத்துறையில் என்ன மதிப்பு?

எழுத்துக்குத் திரைத்துறையில் என்ன மதிப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் உரையாட வாய்த்தது. எழுத்துக்கு திரைத்துறையில்தான் பணமதிப்பு இருக்கிறது என்பது அவர் கருத்து. நீங்கள் வாழ்க்கை முழுக்க எவ்வளவு எழுதினாலும் அதன் வழியே பொருளீட்டுவது குதிரைக் கொம்பாகவே இருக்கும் என்றார். ஆனால், ஒரேயொரு திரைக்கதையைத் திறம்பட எழுதிவிட்டீர்கள் என்றால் அதன்வழியே நினைத்துப் பார்க்க முடியாத தொகையைக் கூட நீங்கள் பெற முடியும் என்றார்.

அன்னார் கூறுவது உண்மையோ என்று நானும் என்னைத் திரும்பிப் பார்க்கிறேன். முன்பின் அறிமுகமில்லாத இயக்குநர்கள்கூட "கதையேதும் இருக்கா சார் ?" என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். என் இயக்குநர் நண்பர்களிடம் முன்பு ஒரு கதையைக் கூறியிருக்கிறேன். ஜோதிட விதிகள் துலக்கமாகவும் மாயம்போலவும் ஒருவனின் வாழ்க்கையில் தொடர்ந்து நிறைவேறிக்கொண்டே இருக்கும். அவ்விதி தன்வாழ்வில் திறம்பட இயங்குவதை உணர்ந்த பின், தான் எண்ணியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகச் செய்வான். ஒரு கட்டத்திற்கு மேல் அவனுடய விருப்பம் அவனுடைய பழைய காதலியின்மீது திரும்பும். தான் அடையத் தவறிய காதலியை அவளுடைய மண உறவில் குறுக்கிட்டு அடைய முயல்வான். அம்முயற்சி அவனுக்கே எதிராகத் திரும்பி அவனை அழித்துவிடும். தான் நம்பிய கோள்களின் விதிப்பாடு தன்னைக் கைவிட்டதோ என்று அவன் அஞ்சுகையில் காதலியின் நிலைமை வேறொன்றாக இருக்கும்.

Writers and Cinema

இந்தக் கதையை ஒரு மாய எதார்த்தப் புனைவின் வழியே திடுக்கிடும் திருப்பங்களுடன் ஒரு திரைக்கதையாக மனத்தில் வடித்திருந்தேன். இக்கதை அருமையாக இருக்கிறது என்று பாராட்டிய நண்பர்கள் இதை மலையாளத் திரையில் செய்வதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்று கூறிவிட்டனர். அதன் பிறகு நானும் என் முயற்சியைக் கைவிட்டேன். ஆனால், ஓர் எழுத்தாளரிடம் ஒன்றுக்குப் பத்து கதைகள் இருக்குமானால் அவர் அதைத் துலக்கமான திரைக்கதையாக எழுதி வைத்திருப்பாரேயானால் உடனடியாக ஓர் இயக்குநரிடமோ நடிகரிடமோ தயாரிப்பாளரிடமோ செலுத்துவது எளிதாகத்தான் இருக்கும்.

இந்த அடிப்படையில்தான் என் நண்பர் எழுத்துக்குத் திரைத்துறையில் விற்பனை மதிப்பு உண்டு என்றார். நீங்கள் பத்தாயிரம் வரிகள் எழுதி எழுதி ஈட்டாத பணத்தைப் பத்தே வரிகளை எழுதும் ஒரு பாடலாசிரியன் பெற்றுக்கொண்டிருக்கிறான் என்றார். இங்கே பாட்டுக்குப் பணம் சம்பாதிப்பது என்பது நல்ல தொழிலாக இருந்திருக்கிறது. எழுதினால் பணம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கிறது என்பதைப் போன்ற தோற்றத்தை எல்லாரும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பாட்டும் இசையும் நடிப்பும் இங்கே சல்லிசாகவும் கிடைக்கின்றன. அதே நேரத்தில் ஒருவர்க்குச் சந்தை மதிப்பு ஏற்பட்டுவிட்டால் நல்ல விலையும் தரப்படுகிறது. இங்கே எல்லாருமே முதற்பெரு வெற்றியைக் காணும்வரை பிழைப்பூதியம்போல் ஏதோ ஈட்ட முடியும் என்று தோன்றுகிறது. அதன்பிறகு ஒருவர் நன்கறியப்பட்ட எழுத்தாளராகவோ பாடலாசிரியராகவோ ஆன பிறகு உரிய மதிப்பூதியம் தானாய்த் தேடி வரும்.

தாம் திரையுலகில் போராடிய காலத்தையும் தமக்குச் சந்தை மதிப்பு ஏற்பட்டபின் அதே திரையுலகம் தம்மிடம் நடந்துகொண்ட விதத்தையும் வடிவேலு நேர்காணல் ஒன்றில் முத்தாய்ப்பாகக் கூறினார் : "அன்னிக்கு அம்பது ரூவாய்க்கி அஞ்சு ரூவா குறையுதுண்ணேன்னு சொன்னபோது திரும்பிப் பார்க்காமப் போனவய்ங்கதான் இன்னிக்கு அஞ்சாறு லட்சத்தை அப்படியே குடுத்துட்டுத் திரும்பிப் பார்க்காமப் போறாய்ங்க...". மதிப்பில்லாதபோது பணத்தைக் கேட்டு நடையாய் நடக்க வேண்டியிருக்கலாம். ஆனால், நம் தகுதியையும் தரத்தையும் உணர்த்திவிட்டால் தரவேண்டியதைத் தந்தே ஆகவேண்டும். அதற்கு வானமே எல்லை.

இலக்கியப் புலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் திரைத்துறையில் பொருளீட்டினார்களா என்பது ஆராயப்பட வேண்டியது. எல்லாப் புகழ்பெற்ற எழுத்தாளர்களும் திரைத்துறையில் முட்டி மோதிப் பார்த்திருக்கிறார்கள். ஜெயகாந்தன் தம் எழுத்துச் செயற்பாட்டின் பொற்காலத்தில் இருந்தபோது தம் கதைகளைத் திரைப்படமாகவே எடுத்தவர். அவற்றின் வழியாக மாற்று முயற்சிகளுக்கான நற்பெயரை ஈட்டினாரேயன்றி பொருளீட்டியிருக்க வாய்ப்பில்லை. கம்பதாசன் என்றொரு கவிஞர் இருந்தார். திரைத்துறையில் எங்கோ சென்றிருக்க வேண்டிய பாடலாசிரியர் என்று சி.சு. செல்லப்பா கூறக் கேட்டிருக்கிறேன். நாடகத் துறையில் பேரழகியாத் திகழ்ந்த ஒரு பெண்மணி கம்பதாசனின் எழுத்துக்கு மயங்கிக் காதலித்து அவரையே திருமணம் செய்துகொண்டார் என்றும் சொன்னார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கம்பதாசன் திரைப்படத்துறையில் பொருளீட்ட முடியாமல் திணறினார். போதைக்கு அடிமையாகி மாண்டார்.

Writers and Cinema

பாரதிதாசன் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் ஒரு படச்சம்பளமான நாற்பதாயிரத்தைத் துச்சமெனக் கருதி வெளியேறியவர். அவரும் பிற்காலத்தில் சென்னையில் வீடு பிடித்துப் 'பாவேந்தர் பிக்சர்ஸ்' என்று பெயர்ப்பலகை மாட்டினார். பாண்டியன் பரிசு என்னும் தம் கதையைத் திரைப்படமாக்குவதற்காகச் சென்னைத் தெருக்களில் அலைந்தார். சிவாஜி கணேசனின் நாள்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து மனம்வெதும்பிச் செத்தார். நல்ல வேளை, திரைப்படங்கள் தலையெடுப்பதற்கு முன்னதாகவே யானையால் தூக்கியெறியப்பட்டு மாண்டார் பாரதியார். இல்லாவிட்டால் அவரையும் திரைப்பட மயக்கம் மொய்த்து முகத்தைப் பெயர்த்திருக்கும்.

திரைப்படத்திற்கான கதைகளை எழுதுவதற்கென்றே சில எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். ஆர். செல்வராஜ் என்னும் ஒருவர் இதைத் திறம்படச் செய்தார் என்று கேள்விப்படுகிறேன். பஞ்சு அருணாசலமும் திரைக்கதை எழுதியவர்தான். இவர்கள் எழுதுவது திரைத்துறையில் அடிமுதல் நுனிவரை அறிந்த அறிவைக்கொண்டுதான். இவர்கள் ஒரு படத்தை இயக்கக் கூடிய அளவிற்கு முழுமையானவர்கள். வெறுமனே திரைக்கதை எழுதித் தருபவர்கள் என்று சுருக்க முடியவில்லை. எப்படிக் கண்ணதாசன் முதற்கண் ஒரு படமுதலாளியோ அதைப்போல. திரைத்துறையில் ஓர் எழுத்தாளரால் மிகுபொருள் ஈட்ட முடியும் என்றால் அவ்விடத்தைச் சுஜாதாவும் பாலகுமாரனும் பெற்றிருக்க வேண்டும். கேள்விப்படும் செய்திகளைக் கொண்டு பார்க்கையில் அப்படி எதுவும் ஆகியிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

கலைவேட்கை மிக்குற்றவராகி நம் தகைமை விளங்கிக்கொள்ளப்பட்ட நிலையில் திரைத்துறைக்கு வருவதே சாலச் சிறந்தது. இல்லாவிட்டால் இங்கே ஈட்டவும் இயலாமல் இயற்றவும் இயலாமல் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியதுதான். கண்முன்னாடி எண்ணற்ற இளைஞர்கள் கனவுகளோடு திரிவதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒன்றேயொன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், உங்கள் ஆசையை அடைவதற்கு வாழ்க்கையைத் தொலைக்க நேருமென்றால் அந்த ஆசையைத் தொலைப்பதே அறிவுடைமை.

English summary
Are professional writers getting good amount in cinema? Here is an analysis

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil