100 வது நாளை எட்டிய மண்டேலா... டீமுடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு
சென்னை : யோகிபாபு ஹீரோவாக நடித்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த படம் மண்டேலா. கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டுக்களை பெற இரண்டு அரசியல் கட்சிகள் செய்யும் அலப்பரையை காமெடி கலந்து சொல்லப்பட்ட படம்.
இந்த படம் நேரடியாக ஸ்டார் விஜய்யில் ரிலீஸ் செய்யப்பட்டு, அடுத்த 4 நாட்களில் நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது. புதுமுக டைரக்டர் மடோனி அஸ்வின் இந்த படத்தை இயக்கினார். சசிகாந்த், ராமச்சந்திரா இந்த படத்தை தயாரித்தனர்.
இந்த படத்தில் யோகிபாபுவுடன் ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பரத் சங்கர் இசை அமைத்திருந்தார். 2019 ல் நவம்பர் மாதம் ஒரே கட்ட படப்பிடிப்பில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனத்திற்கு ரெட் கார்டு
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை தயாரித்த YNOT ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தான் மண்டேலா படத்தையும் தயாரித்தது. ஜகமே தந்திரம் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்நிறுவனத்திற்கு ரெட் கார்டு போட்டனர்.

நேரடியாக விஜய் டிவி ரிலீஸ்
இந்நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய தியேட்டர் தர போவதில்லை என முடிவு செய்தனர். இதனால் மண்டேலா படத்தை நேரடியாக டிவி.,யிலேயே ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். இதனால் ஏப்ரல் 4 ம் தேதி விஜய் டிவி.,யிலும், ஏப்ரல் 9 ம் தேதி நெட்ஃபிளிக்சிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

தேர்தலுக்கு முன் மண்டேலா ரிலீஸ்
முதலில் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, மார்ச் 31 சென்னை பிவிஆர் சினிமாசில் படத்தை திரையிட முடிவு செய்திருந்தனர். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த நெருக்கடியால் 4 நாட்கள் தாமதமாக விஜய் டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது.

வரவேற்பை பெற்ற மண்டேலா
நேரடியாக டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பல தடைகளை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக 3 முதல் 3.5 ரேட்டிங்கை பெற்றது மண்டேலா படம். பிரபலங்கள் பலரும் இந்த படத்தை வெகுவாக பாராட்டினர்.

100 வது நாளை கொண்டாடிய யோகிபாபு
இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இதனை மண்டேலா படக்குழுவினருடன் யோகிபாபு கேக் வெட்டி கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் யோகிபாபு.


Click it and Unblock the Notifications











