“விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்… ஆனா அங்கதான் ஒரு ட்விஸ்ட்”: ரகசியம் சொன்ன லவ் டுடே இயக்குநர்
சென்னை: கோலிவுட்டின் வசூல் மாஸ்டர் விஜய்யின் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அவரின் அடுத்த படங்கள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோர் லைனில் இருக்க, இப்போது விஜய்யின் இயக்குநர் வரிசையில் இன்னொருவரும் இணைந்துள்ளார்.

தளபதி விஜய்
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் தளபதி, வசூல் மாஸ்டர் என கொண்டாடப்படும் விஜய், இப்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இம்மாதம் இறுதிக்குள் வாரிசு ஷூட்டிங் மொத்தமும் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தீபாவளியை முன்னிட்டு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் அபிஸியல் அப்டேட்டும் தீபாவளி தினத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் இயக்குநர்
விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் 'தளபதி 67' படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், தளபதி 68, தளபதி 69, தளபதி 70 என அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்கள் குறித்தும், அதன் இயக்குநர்கள் பற்றியும் நாளும் ஒரு தகவல் வெளியானபடி உள்ளன. தளபதி 67க்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக இருதினங்களுக்கு முன்னர் தான் சொல்லப்பட்டது. இதனிடையே இளம் இயக்குநர் பிரதீப் விஜய்க்காக ஒரு கதை ரெடியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

நேரில் சந்திப்பு
ஜெயம் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'கோமாளி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. காமெடி ஜானரில் 2019ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூலிலும் மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து தற்போது 'லவ் டுடே' படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். அவரே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் செம்மையாக ரீச்சானது. லவ் டுடே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னதாகக் பிரதீப் கூறியுள்ளார்.

விஜய் சம்மதம்?
அப்போது தான் சொன்ன கதை பிடிச்சிருக்கு என விஜய் கூறியதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்தப் படம் உடனே கைகூடுமா எனத் தெரியவில்லை, இருந்தாலும் விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என பிரதீப் நம்பிக்கையோடு கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜுக்குப் பிறகு அட்லீ, ஆர்ஜே பாலாஜி, ஏஆர் முருகதாஸ் ஆகியோர் விஜய்யுடன் இணையவுள்ளதாகவும், தோனி தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாகவும் பலவிதமான அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இதன் நடுவில் இப்போது இயக்குநர் பிரதீப்பும் இணைந்துள்ளது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











