»   »  டைவர்ஸ் கேட்கிறார் யுவன் ஷங்கர் ராஜா!

டைவர்ஸ் கேட்கிறார் யுவன் ஷங்கர் ராஜா!

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சுஜயா சந்திரனும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சமீப காலமாக திரையுலகம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முதலில் பிரஷாந்த், கிரகலட்சுமி விவகாரம் வெடித்தது. பின்னர் அதில் பல திருப்பங்கள் ஏற்பட்டு திரையுலகை கலங்கடித்தது.

பிறகு ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் வெளியில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி சுஜயா. இவர் லண்டனைச் சேர்ந்த தமிழ்ப் பெண். கடந்த 2002ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றிருந்தபோது முதல் பார்வையிலேயே சுஜயா மீது காதல் கொண்டார் யுவன்.

இதையடுத்து இருவரும் அடுத்த ஆண்டே ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தனது வீட்டினரின் சம்மதத்தைப் பெற்றார் யுவன். அதன் பின்னர் 2005ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இருவருக்கும் சென்னையில் விமரிசையாக திருமணம் நடந்தேறியது.

இருவரும் ஆரம்பத்தில் இளையராஜாவின் வீட்டியேலே கூட்டுக் குடித்தனம் நடத்தினர். பின்னர் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா தனி வீடு கட்டி தனிக் குடித்தனம் சென்றார்.

கடந்த ஏப்ரல் மாத வாக்கில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். தற்போது இருவரும் பரஸ்பரம் பிரிந்து சென்று விட முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு இருவரும் ஒன்றாக வந்தனர்.

விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவைப் பரிசீலித்த நீதிபதி தேவதாஸ், சட்டப்படி 6 மாதங்கள் கணவனும், மனைவியும் பிரிந்திருக்க வேண்டும் என்று கூறி வழக்கை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி சுஜயா சமீபத்தில்தான் இயக்குநர் செல்வராகவனின் ஒயிட் எலிபன்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்தார்.

இந்த நிறுவனத்தில் யுவனும் ஒரு பங்குதாரர். இந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த யுவன், செல்வராகவனின் நண்பரான ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா பிரிந்து சென்ற பிறகுதான் சுஜயா பங்குதாரரானார்.

யுவன் ஷங்கர் ராஜா விவாகரத்து கோரி கோர்ட்டுக்குப் போயுள்ளது இளையராஜா குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil