மாமன்னன் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியான மாரி செல்வராஜ்… அடுத்து வெப் சீரிஸ் இயக்க முடிவு?
சென்னை: பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.
உதயநிதி, ஃபஹத் பாசில் நடித்துள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாமன்னன் படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய விவாதம்
கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்.' இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்தார். நெல்லை அதன் சுற்றுவட்டாரப் பின்னணியில் காணப்படும் அடையாள அரசியலை மையமாக வைத்து உருவான இந்தப் படம், மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கதை, திரைக்கதை, மேக்கிங் என பரியேறும் பெருமாள் திரைப்படம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தனுஷுடன் இணைந்த மாரி செல்வராஜ்
முதல் படத்தில் கிடைத்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு இரண்டாவது படமான கர்ணனை தனுஷ் நடிப்பில் இயக்கினார் மாரி செல்வராஜ். 'கர்ணன்' திரைப்படமும் அதே நெல்லை சுற்றுவட்டாரப் பின்னணியில் சாதிய அரசியலை மையமாக வைத்து உருவாகியிருந்தது. 'பரியேறும் பெருமாள்' படம் போலவே, கர்ணனுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது. தனுஷின் கேரியரில் மிகச் சிறந்த படமாகவும் கர்ணன் இடம்பெற்றது.

உதயநிதி நடிப்பில் வெளியாகும் மாமன்னன்
கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் 'மாமன்னன்' படத்தை இயக்கத் தொடங்கினார் மாரி செல்வராஜ். உதயநிதியுடன் ஃபஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மாமன்னன் ஷூட்டிங், சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. தற்போது மாமன்னன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் மாரி செல்வராஜ். இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஓடிடியில் வெப் சீரிஸ்
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், சில முன்னணி இயக்குநர்கள் தற்போது வெப் சீரிஸ் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், மாரி செல்வராஜும் டிஸ்னி ப்ளஸ் ஓடிடிக்காக வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்தின் ரீலீஸ் தேதி முடிவானதும், வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதில், நடிகர் கலையரசன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











