Coolie OTT: படம் வெளியாகி ஒரு மாசம் கூட ஆகல.. கூலி ஓடிடி ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அமேசான் பிரைம் சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்தின் வெற்றி விழா உள்ளிட்ட எந்தவொரு கொண்டாட்டத்தையும் சன் பிக்சர்ஸ் கொண்டாடாத நிலையில், அதிரடியாக ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வந்துவிட்டது.
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், செளபின் சாஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், நித்யா ராம், கண்ணா ரவி, சார்லி, பூஜா ஹெக்டே, மோனிஷா பிளெஸ்ஸி, ரெபா மோனிகா ஜான், மாறன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது.

படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், படத்தின் முதல் வார டிக்கெட் முன்பதிவு அனல் பறந்த நிலையில், அதிகபட்ச பாக்ஸ் ஆபீஸ் வசூல் வந்தது.
500 கோடி வசூல்: கூலி திரைப்படம் உலகளவில் 500 கோடி வசூல் வந்ததாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் சொல்லி வரும் நிலையில், 404 கோடி வசூலை 4 நாட்களில் படம் ஈட்டியது என சந்தோஷமாக அறிவித்த சன் பிக்சர்ஸ் அதன் பின்னர் டெட் சைலன்ட்டாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றி மட்டும் வாய் திறக்காமல் தொடர்ந்து படத்தின் போஸ்டர்களையும் காட்சிகளையும் வெளியிட்டு வருகிறது. ஓவர்சீஸ் வசூலே 180 கோடி வரை வந்திருப்பதாக ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட்டும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கூலி ஓடிடி ரிலீஸ்: ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் வெளியான நிலையில், வரும் செப்டம்பர் 11ம் தேதியே அமேசான் ஓடிடி தளத்தில் அனைத்து மொழிகளிலும் கூலி படம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் பிரைம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அமேசான் பிரைமில் பல புதிய படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கண்ணப்பா இந்த வாரம்: விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், மோகன்லால், மோகன்பாபு, ப்ரீத்தி முகுந்தன், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட மல்டி ஸ்டாரர்கள் நடித்த கண்ணப்பா படம் செப்டம்பர் 4ம் தேதியான இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்த வாரம் கூலி படம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











