தீபாவளிக்கு டைரக்ட் ஓடிடி ரிலீஸ்.. அருள்நிதியின் ராம்போ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் தெரியுமா?
சென்னை: அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள "ராம்போ" திரைப்படம் இந்தத் தீபாவளிக்கு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.கொம்பன், விருமன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வழக்கமான கிராமத்து பின்னணியிலிருந்து விலகி, நகர வாழ்வை மையப்படுத்தி, அதிரடி சாகசங்களை இணைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
ஒரு துணிச்சலான இளம் குத்துச்சண்டை வீரர், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவும் முயற்சியுடன் கதை தொடங்குகிறது. பின்னர், அவரது வாழ்வில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிரடி சம்பவங்களைச் சுற்றி நகர்கிறது. முத்தையாவின் தனித்துவமான இயக்கத்தில், உணர்ச்சிகரமான அம்சங்களுடன் அதிரடிப் படமாக இது வெளிவர உள்ளது.

இயக்குநர் முத்தையா இந்தப் படம் குறித்துக் கூறுகையில், "எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு விதமாகச் சொல்ல இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். ராம்போ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லனாக நடிக்க, ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வழக்கமாக கிராமத்து பின்னணியில் அடி கருப்பு நிறத்தழகி என ஆட்டம் பாட்டத்துடன் வீரத்தையும் கலந்து படங்களை கொடுத்து வந்த முத்தையா இந்த முறை நகரப் பின்னணியில் உருவாகியுள்ள "ராம்போ", ஆக்ஷன், த்ரில் மற்றும் உணர்ச்சிகரமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான பாக்ஸிங் படத்தை கொடுக்கவுள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் "ராம்போ" படம் ஸ்ட்ரீமாகிறது.
இந்த தீபாவளிக்கு தியேட்டரில் டியூட், பைசன், டீசல், கம்பி கட்ன கதை, கார்மேனி செல்வம் என பல படங்கள் தியேட்டரில் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க முதலிலேயே சோலோவாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர காத்திருக்கிறது ராம்போ.


Click it and Unblock the Notifications











