ஆஸ்கர் ரேஸில் கலக்கும் Black Panther: Wakanda Forever... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
வாஷிங்டன்: அட்வென்சர்ஸ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் பேந்தர் கடந்தாண்டு நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் 3500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த பிளாக் பேந்தர் திரைப்படம் தற்போது ஆஸ்கர் போட்டியிலும் மாஸ் காட்டி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிளாக் பேந்தர் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என மார்வெள் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பிளாக் பேந்தர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளாக் பேந்தர் ரசிகர்கள்
மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் தயாரிப்பில் பிளாக் பேந்தர் இரண்டாம் பாகம் கடந்தாண்டு நவம்பர் 11ம் தேதி ரிலீஸானது. முதலில் 2022 மே 6-ம் தேதி வெளியாகவிருந்த பிளாக் பேந்தர் சில காரணங்களால் நவம்பரில் ரிலீஸானது. ஆனாலும் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் 3500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆக்ஷன், மேக்கிங், கிராபிக்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் மரண மாஸ் காட்டியது பிளாக் பேந்தர்.

ஆஸ்கர் ரேஸில் கடும் போட்டி
சூப்பர் ஹீரோ படங்களில் கறுப்பினத்தவர்களை சைடு கிக்காகத்தான் வைத்திருப்பார்கள். கேப்டன் அமெரிக்கா, அயர்ன்-மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் என எல்லோரது சைடு கிக்கும் கறுப்பின ஹீரோதான். அந்த வரிசையில், முதல்முறையாக ஒரு கறுப்பின சூப்பர் ஹீரோ படமாக 2018ல் பிளாக் பேந்தர் வெளியானது. அதில் கறுப்பின அரசியலும் ஓரளவுக்கு பேசப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தான் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் 5 பிரிவுகளில் போட்டியிடுகிறது பிளாக் பேந்தர்.

நாட்டு நாட்டு பாடலுடன் போட்டி
ஏஞ்சலா பாசெட் சிறந்த துணை நடிகைக்கான போட்டியில் இடம்பிடித்துள்ளார். ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற அவர், ஆஸ்கரையும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காஸ்ட்யூம் டிசைன், சிறந்த மேக்கப், ஹேர்ஸ்டைல், சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. முக்கியமாக இதில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்குப் போட்டியாக பிளாக் பேந்தரில் இருந்து 'லிப்ட் மீ அப்' என்ற பாடலும் களத்தில் உள்ளது. ஆஸ்கர் ரேஸில் பிளாக் பேந்தர் திரைப்படம் கடும் போட்டி போடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஓடிடி ரிலீஸ் தேதி
இந்நிலையில் தற்போது பிளாக் பேந்தர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மார்ச் மாதம் ஆஸ்கர் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், பிப்ரவரி 1ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பிளாக் பேந்தர். ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆங்கிலம் தவிர்த்து தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாக் பேந்தர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். திரையரங்குகளில் மில்லியன் கணக்கில் வசூலை வாரிகுவித்த பிளாக் பேந்தர், ஓடிடியிலும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











