Rambo OTT Review - அருள்நிதியின் ராம்போ எப்படி இருக்கு?.. முத்தையா ரம்பத்தை வெச்சிட்டாரே.. இதோ விமர்சனம்
சென்னை: அருள்நிதி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ராம்போ. அபிராமி, தன்யா ரவிச்சந்திரன், சரண்ராஜ், ஆயிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் நேற்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விமர்சனத்தை இதில் பார்க்கலாம் வாங்க.
கிக் பாக்ஸரான அருள்நிதி வாழ்க்கையில் ஒரு சூழ்ச்சி நடந்து அவரால் பாக்ஸிங் ரிங்கிற்குள் ஏற முடியாத சூழ்நிலை உருவாகிறது. அது ஒருபக்கம் இருக்க அனாதை குழந்தைகள் ஆசிரமம் நடத்திவரும் அவருக்கு ஒருகட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட அந்தப் பணத்தை பெறுவதற்கு நேர்மை, தீமை என்ற இரண்டு வழிகள் வருகின்றன. அதில் நேர்மையான வழியை தேர்ந்தெடுக்கும் ஹீரோ எப்படி வென்றார், அவருக்கு பாக்ஸிங்கில் நடந்த சூழச்சி என்ன அதை செய்தது யார் என்பது போன்ற கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கிறார் முத்தையா.
முத்தையா இயக்கமா இது?: இயக்குநர் முத்தையா என்றாலே தென் தமிழ்நாட்டு வாழ்வியலை புழுதி பறக்க பேசுபவர் என்ற பிம்பம் கோலிவுட்டில் உண்டு. அவரும் அதற்கேற்றபடிதான் தனது பயணத்தை வடிவமைத்திருந்தார். இப்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தை அவர் எடுத்திருப்பாரோ என்றே படம் பார்க்கும்போது தெரிகிறது. கதை என்று எடுத்துக்கொண்டால் வழக்கமான கதைதான். அதை ப்ரெசெண்ட் செய்த விதத்தில் ஓரளவுக்கு ஓகே ரகம் வாங்குகிறார். ஓரளவுக்குத்தான்.

திரைக்கதையில் சொதப்பல்: ஒரு திரைப்படம் வெல்வதற்கு கதை சொதப்பினாலும் திரைக்கதை ரசிகர்களை கட்டிப்போட்டுவிட வேண்டும் என்ற கூற்று உண்டு. அதனை ஊறுகாய்க்குக்கூட முத்தையா தொட்டுக்கொள்ளவில்லை போல. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் எளிதாக கண்டுபிடிக்கும்வகையில்தான் திரைக்கதையை செய்திருக்கிறார் இயக்குநர். அதிலும் தன்யா ரவிச்சந்திரன் கடத்தல் கேம்கள் எல்லாம், என்னமோ ஒரு பந்தை ஆள் ஆளுக்கு எடுத்து செல்வது போல் முதலில் ஒருவரிடம் அடுத்து இன்னொருவரிடம், அடுத்து இன்னொருவரிடம் என்று சென்றுகொண்டிருப்பதெல்லாம் பார்க்க முடியவில்லை.
யாரு ப்பா அந்த வில்லன்: அதேபோல் ஒரு படத்துக்கு வில்லன் ரோல் ரொம்பவே முக்கியம். இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரஞ்சித் சஜீவ் கொஞ்சம்கூட பொருத்தமே இல்லை. நடை, உடையில் ஃபிட்டாக இருக்கும் அவர்; வில்லனிஸம் காண்பிப்பதில் அன்ஃபிட்தான். அவர் எவ்வளவு இறுக்கமாக முகத்தையும், உடலையும் வைத்துக்கொண்டு வசனம் பேசினாலும்; ரசிகர்களுக்கு என்னவோ சின்ன பையன் மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போன்றுதான் இருக்கிறது.
என்ன கொடுமை சார்: படத்தின் போஸ்டரை பார்த்தபோதெல்லாம் கிக் பாக்ஸிங் கதைக்களத்தை முத்தையா எடுத்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டவர்கள் எல்லாம்; படம் பார்த்த பிறகு இதில் எங்கே கிக் பாக்ஸிங் வருகிறது என்று தேட ஆரம்பித்துவிட்டார்கள். ஒப்புக்குக்கூட் அருள்நிதி ஒரு கிக் பாக்ஸிங் சண்டையில் கலந்துகொண்டது போல் காட்சி இல்லை. மாறாக அவரை ஸ்ட்ரீட் ஃபைட்டர் போல் சித்தரித்தும்விட்டார்.
இதன் காரணமாக அவர் கிக் பாக்ஸரா இல்லை ஸ்ட்ரீட் ஃபைட்டரா என்ற குழப்பத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர். காமெடி என்கிற பெயரில் விடிவி கணேஷ் படம் முழுக்க என்னென்னம்மோ செய்துகொண்டிருக்கிறார். ஜென்சன் திவாகர், பிக்பாஸ் ஆயிஷா, அபிராமி, தன்யா ரவிச்சந்திரன் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை ஒழுங்காக செய்து முடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, நடிப்பு: படத்தின் ப்ளஸ் என்றால் அது அருள்நிதியின் நடிப்புதான். சண்டை காட்சிகளில் நல்லவிதமாக செய்திருக்கும் அவர்; எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேசமயம் அவரது நடிப்பு மோசம் எல்லாம் இல்லை. அவர் தவிர்த்து ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, சில இடங்களில் ஜிப்ரானின் பின்னணி இசை ரசிக்க வைக்கின்றன.
கிக் பாக்ஸிங் கதைக்களத்தையே மெயின் தீமாக எடுத்துக்கொண்டு அதில் வேலைப்பாடு செய்திருந்தால் முத்தையா புது அட்டெம்ப்ட் செய்திருக்கிறார் என்ற பெயராவது கிடைத்திருக்கும். ஆனால் இந்த ராம்போவில் கிக் பாக்ஸிங்கை ஜிகினாவாக பயன்படுத்திக்கொண்டு ரண கொடூர விளையாட்டை விளையாடியிருக்கிறார். படம் பார்த்தவர்களுக்கு ஏகப்பட்ட பஞ்ச்சுகள் விழுகின்றன. ஆகமொத்தம் ராம்போ கழுத்தில் வைக்கப்பட்ட ரம்பம்.


Click it and Unblock the Notifications











