ரஜினி மகளுக்கு செம சந்தோஷம்.. டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் படத்தை பெரிய தொகைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!
சென்னை: மற்ற ஓடிடி நிறுவனங்களை விட நெட்பிளிக்ஸ் நிறுவனம் போட்டிப் போட்டு புதிய தமிழ்ப் படங்களை தொடர்ந்து பெரிய தொகைக்கு வாங்கி வருகிறது. இந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல பெரிய நடிகர்கள் படங்களை நம்பி வாங்கி ஏமாந்து போனது தான் மிச்சம்.
இந்நிலையில், நல்ல நல்ல படங்களை டார்கெட் செய்து வாங்கும் முடிவுக்கு வந்துள்ள அந்த ஓடிடி ஜெயண்ட் தற்போது அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக செளந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற அபிஷன் ஜீவிந்த், மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், அதன் ஓடிடி உரிமம் இப்போதே விற்பனையாகி உள்ளது.
கோவா முதல் அபிஷன் ஜீவிந்த் படம் வரை: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். சிறு வயதிலேயே அப்பாவின் படையப்பா படத்தின் டைட்டில் டிசைனை உருவாக்கி அசத்தியவர். பல படங்களுக்கு கிராஃபிக் டிசைனராகவும் பணியாற்றியுள்ளார். கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கி இயக்குநராகவும் மாறினார். இந்நிலையில், தற்போது அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் படத்தையும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.
கார் பரிசு: சசிகுமார், சிம்ரன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி சுமார் 85 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ள நிலையில், அவருக்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் தயாரிப்பாளர் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அடுத்த சந்தோஷமான செய்தியை செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நெட்பிளிக்ஸ் வாங்கிடுச்சு: ஜியோ ஹாட்ஸ்டார் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கி மிகப்பெரிய லாபத்தை பார்த்த நிலையில், அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தை ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கிவிட்டதாக செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். வரும் அக்டோபர் 31ம் தேதி அபிஷன் ஜீவிந்திற்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அவருக்கு ஹேப்பி நியூஸ் லைன் கட்டி வருவது ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சீக்கிரமே படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications