Paradha OTT Review: 'பரதா’ விமர்சனம்.. முக்காடு விலகியதால் அனுபமாவை கிணத்துல தள்ளிட்டாங்களே!
சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் ஏகப்பட்ட புதிய படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களை தியேட்டர் பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டன. ரஜினிகாந்தின் கூலி, ஜென்ம நட்சத்திரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரனின் பரதா உள்ளிட்ட படங்கள் செப்டம்பர் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
அயலி வெப்சீரிஸ் போலவே படத்தின் எனும் கிராமத்தில் ஜுவாலாம்மா என்கிற குல தெய்வத்தை வழிபடும் மக்கள் ஒரு மிகப்பெரிய மூட நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் எல்லாம் பயன்படுத்தினாலும், பெண்கள் முக்காடு (பர்தா (அ) பரதா) இல்லாமல் வெளியே வரக்கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு.

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் பரதாவை அணிந்துக் கொள்ள வேண்டும். வெளியே அவர்கள் முக்காடு இல்லாமல் மற்றவர்களின் கண்ணில் பட்டுவிட்டால், அந்த ஊருக்கு ஜூவாலாம்மா சாபம் கொடுத்துவிடுவாள் என்றும் கடுப்பாட்டை மீறும் பெண்ணை நரபலி கொடுத்தால் தான் ஊர் நல்லா இருக்கும் என்கிறை மூடநம்பிக்கையுடன் வாழும் ஊரில் வசித்து வரும் ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரனின் முக்காடு ஒரு சில நிமிடங்கள் காற்றில் பரந்த நிலையில், அவருக்கு என்ன ஆகிறது என்கிற கதையை படமாக்கியுள்ளனர்.
பரதா கதை: கடந்த மாதம் ஆகஸ்ட் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியான பரதா திரைப்படம் கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தியேட்டரில் மிஸ் பண்ண ரசிகர்கள் ஓடிடியில் தாராளமாக ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம். அம்மனுக்கும் சேர்த்து முக்காடு போட்டுவிட்டு பரதா திருவிழாவை நடத்தி வரும் ஊரில் காதலனை கூட கண்களால் பார்க்க முடியாமல் காதலித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ள நிலையில், திருமண நிச்சயதார்த்தத்தின் போது அவரது முகம் ஒரு இதழின் அட்டைப் படமாக வந்து விழ பூகம்பம் வெடிக்கிறது. அனுபமா பரமேஸ்வரனும் தன்னை கிணற்றில் தள்ளி கொன்று விடுங்க என தயார் ஆன நிலையில், அவர் கிணற்றிலும் தள்ளப்படுகிறார். பிறகு என்ன ஆனது? அந்த ஊர் மக்கள் நம்பிக் கொண்டிருந்த மூடப்பழக்கம் முடிவுக்கு வந்ததா? இல்லையா? என்பது தான் இந்த பரதா படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஜுவாலாம்மாவையும் அந்த ஊர் நம்பிக்கையும் ரொம்பவே நம்பும் பெண்ணாக வளரும் அனுபமா பரமேஸ்வரன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தன்னை தண்டிக்க வேண்டும் என்றால் தண்டித்து விடுங்கள் என சொல்ல, அவரை கல்லை கட்டி கிணற்றிலேயே தூக்கிப் போடும் காட்சிகள் எல்லாம் பதை பதைக்க வைத்து விடுகிறது. அதன் பின்னர், படத்தின் போக்கு மாறும் விதம் சாதாரணமாக இருந்தாலும், டிராவல் பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் விதத்தில் படத்தை எடுத்து கிளைமேக்ஸில் மீண்டும் அந்த ஊர் மூடநம்பிக்கை விஷயத்தை முறையாக முடித்து இயக்குநர் எடுத்த காரியத்தை கச்சிதமாக நிறைவு செய்துள்ளார்.
பிளஸ்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த ஆண்டு தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து சென்சேஷன் ஆகி வருகிறார். டிராகன், ஜேஎஸ்கே, பரதா என தொடர்ந்து அவர் வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்து பைசன் படத்திலும் தீபாவளிக்கு ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் பேய் படம் போல செல்லும் காட்சிகள் திகிலை கிளப்புகின்றன. அந்த ஊர் செட்டப், ஜுவாலாம்மா கோயில், செட் வொர்க், லைட்டிங், ஒளிப்பதிவு என அனைத்துமே சூப்பர் தான். 2ம் பாதியில் தர்மசாலாவை நோக்கி நகரும் படம் சற்றே காமெடியாக சென்றாலும், விஷுவல் ட்ரீட்டாகவும் டிராவல் படமாகவும் மாறி உலகம் ரொம்ப பெருசு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதீங்க என பழைமை வாதிகளின் முகத்திலேயே பளார் விட்டுள்ளது இந்த பரதா. சங்கீதாவின் நடிப்பு மற்றும் 2ம் பாதியில் வரும் தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பு படத்திற்கு பலமாக உள்ளது. கிளைமேக்ஸில் கேமியோவாக கெளதம் வாசுதேவ் மேனன் வந்து கலக்குகிறார்.

மைனஸ்: முதல் பாதி அளவுக்கு 2வது பாதியை இன்டென்ஸாகாவும் கொஞ்சம் சீரியஸான ஸ்க்ரிப்ட் உடனும் இயக்குநர் கையாண்டு இருந்திருந்தால் இன்னமும் படம் சிறப்பாக இருந்திருக்கும். கிளைமேக்ஸில் ஒரே சீனில் ஒட்டுமொத்த கிராமமும் எடுக்கும் முடிவு எல்லாம் இன்னமும் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. ஆனால், ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிராக சிறகடித்து பறக்கும் பறவைகளாக பெண்கள் உயர பறக்கும் கதையை சொன்ன விதத்தில் ஓடிடியில் கண்டிப்பாக ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம். தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் பரதா உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











