சர்தாருக்கு போட்டியாக மீண்டும் மோதும் பிரின்ஸ்… ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் அதிரடியான முடிவெடுத்துள்ள பிரின்ஸ் டீம், ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

புஸ்வானமான பிரின்ஸ்
சிவகார்த்தியன் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் தரமான வசூல் சாதனையை படைத்தது. இதே எதிர்பார்ப்பில் தீபாவளிக்கு ரிலீஸான பிரின்ஸ் திரைப்படம், ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றியது. தீபாவளி ஸ்பெஷலாக அக் 21ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படத்தை அனுதீப் இயக்கியிருந்தார். முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தும் நெகட்டிவான விமர்சனத்தால் படம் படுதோல்வி அடைந்தது. அதுமட்டும் இல்லாமல், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலில் ரொம்பவே தடுமாறியது.

பிரின்ஸ் பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் 7 முதல் 8 கோடி வரை வசூலித்த பிரின்ஸ், மொத்தமே 50 கோடி ரூபாய்க்குள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், பிரின்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய சர்தார், பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு சிவகார்த்திகேயனின் மோசமான கதை தேர்வே காரணம் என ரசிகர்கள் கூறினர். அதேபோல், தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கேரக்டர்களில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

பிரின்ஸ் ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில், பிரின்ஸ் படத்துக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களால் தியேட்டர்களில் சென்று படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் வரும் 25ம் தேதி (நவ 25) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் சர்தார் இன்னும் திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியும் வசூலித்துள்ளது. ஆனாலும், சர்தார் படத்தை வரும் 18ம் தேதி ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனால், பிரின்ஸ் படத்தையும் உடனடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யவுள்ளார்களாம்.

பிரின்ஸால் மாவீரனில் குழப்பம்
இதனிடையே, பிரின்ஸ் தோல்வியால் மாவீரன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என்றும் மாவீரன் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பிரின்ஸ் தோல்விக்கு சிவகார்த்திகேயன் காரணம் இல்லை, இயக்குநர் அனுதீப் தான் காரணம் என தயாரிப்பாளர் கே ராஜன் குற்றம்சாட்டி இருந்தார். சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களின் வெற்றிக்கு இயக்குநர்களே காரணம். அதுபோல பிரின்ஸ் தோல்விக்கும் இயக்குநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











