»   »  தங்கம் பட விமர்சனம்

தங்கம் பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil
Sathyaraj with Megha Nair

ரொம்ப நாளைக்குப் பிறகு கவுண்டமணி-சத்யராஜ் கூட்டணியில் வந்திருக்கும் படம். சும்மா சொல்லக் கூடாது, இன்னும் எத்தனை புதுப்புது நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், கவுண்டர் கவுண்டர்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் படம் தங்கம்.

அடடா... இந்த மாதிரி திரையரங்கம் சிரிப்பலையில் குலுங்குவதைப் பார்த்து எத்தனை நாளாச்சு!

தங்கம் படத்தின் கதையில் அப்படி ஒன்றும் விசேஷமில்லை. தொன்னூறுகளில் நீங்கள் பார்த்த பல சத்யராஜ், சரத்குமார் பாணி கிராமத்து அண்ணன்-தங்கை பாசக் கதைதான்.

தங்கை கல்லூரி சென்று வருவதற்காக தனி பஸ்ஸையே வாங்கி விடும் அளவுக்கு மகா பாசக்கார அண்ணன் சத்யராஜ் (முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப் தனது மகள் படிப்பதற்காக கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தனி ரயிலே விட்டார் என்பார்கள்).

பெரிய மனிதர் டெல்லி குமாரின் ஒரே மகன் சத்யராஜ். அவரது தாய்மாமன் கவுண்டமணி. (இந்த மாதிரி படங்களில் ஊரில் இரண்டு பெரிய மனிதர்கள் இருப்பார்கள். முதலில் நண்பர்களாக இருந்து பின்னர் பகைவர்களாகிவிடுவார்கள்.... போன்ற வழக்கமான சங்கதிகளை அப்படியே மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்)

திருட்டு மணல் அள்ளும் இன்னொரு பெரிய மனிதரின் மகன் சண்முகராஜனுடன் சத்யராஜூக்கு ஏற்படுகிற பகை, கல்யாணத்தில் முடிகிறது. அதாவது சத்யராஜின் தங்கையை சண்முகராஜன் கெடுத்துவிட, வேறு வழியின்றி அவருக்கே கல்யாணம் செய்து வைக்கிறார்.

முகூர்த்த நேரத்தில் சண்முகராஜனின் சின்ன வீடு வந்து கலாட்டா செய்ய, அவரைக் கொன்று விடுகிறார் சண்முகராஜன் (நட்புக்காக பாணியில்). வேறு வழியின்றி தங்கைக்காக அந்தக் கொலைப் பழியை ஏற்று சிறைக்குப் போகிறார் சத்யராஜ். விடுதலையாகி வந்து பார்த்தால் தங்கை பிணமாகிக் கிடக்கிறார்.

தன் தங்கையின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொன்று சத்யராஜ் பழி தீர்ப்பதுதான் மீதிக் கதை என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா...!

சத்யராஜ் - கவுண்டமணி கூட்டணியின் நக்கல், நையாண்டி, டகால்டி, டகாய்ச்சி, ரவுசு அறிந்து அதற்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கும் கதை என்பதைப் புரிந்து கொண்டு படம் பார்க்க உட்கார்ந்தால் ரொம்ப சீக்கிரம் படத்துக்குள் ஐக்கியமாகி விடுவீர்கள்.

கவுண்டமணியின் அட்டகாச காமெடி தர்பாரில் சத்யராஜே பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். அதிலும் நேரம் பார்த்து காலை வாரும் நகைச்சுவைக் காட்சிகளில் கவுண்டரை மிஞ்ச ஆளில்லை.

இந்தப் படத்தின் சிறப்பு கவுண்டர் என்பதால் சத்யராஜ் தன்னையும் ஒரு ரசிகராக பாவித்து பல காட்சிகளில் வேடிக்கைப் பார்த்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. பல காட்சிகளில் பழைய 'தாய்மாமன்' சத்யராஜைப் பார்க்க முடிகிறது (உருவத்தில்).

சத்யராஜூக்கு ஜோடி மேகா நாயர். புடவை சுற்றிய பழைய கள்ளுப் பானை மாதிரி போதையேற்றுகிறார். இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால், கிளாமர் நாயகியாக கலக்கலாம். சத்யராஜின் தங்கையாக வரும் ஜெயஸ்ரீ நன்றாக நடித்திருக்கிறார்.

டெல்லிகுமார், இளவரசு, சண்முகராஜன், பாலாசிங், மகாதேவன், சூர்யகாந்த் என அனைவருமே நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சுஜாவின் முறுக்கேற்றும் குமுக் ஆட்டமும் உண்டு.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கோட்கும்படி உள்ளன. ஆனால் எங்கேயோ கேட்ட ட்யூன்களாகவும் உள்ளன. 'அப்பா'வுக்கு தப்பாத பிள்ளை!

பொள்ளாச்சியின் அழகை கண்முன் நிறுத்துகிறது டி.சங்கரின் ஒளிப்பதிவு.

படத்தின் மிகப் பெரிய குறை, எடிட்டரின் கத்தரிக்கு அடங்காமல் நீண்டு கொண்டே செல்லும் காட்சிகள். ஓரிரு பாடல் காட்சிகள், தேவையற்ற கோர்ட் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸூக்கு முந்தைய கோயில் காட்சிகள் போன்றவற்றை நீக்கியிருந்தால் படம் பக்கா கிராமத்து மசாலாவாக வந்திருக்கும். அதனாலென்ன, நம்ம ஊர் திரையரங்குகளின் ஆபரேட்டர்கள் இந்த வேலையைக் கச்சிதமாக செய்துவிடப் போகிறார்கள்!

சென்னையில் வெளியாகியுள்ள திரையரங்குகள்: பேபி ஆல்பட், உட்லண்ட்ஸ், பால அபிராமி, சந்திரன், எம்.எம். தியேட்டர், ரோகிணி, மாயாஜால், நங்கநல்லூர் வேலன், குரோம்பேட்டை வெற்றி, பூந்தமல்லி சுந்தர், அம்பத்தூர் ராக்கி (எங்கும் 4 காட்சிகள்).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil