For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சண்டை- பட விமர்சனம்

  By Staff
  |

  Sundar C and Rajini
  சுந்தர்.சியை கமர்ஷியல் நாயகனாக வெற்றிகரமாக நிலை நிறுத்த உதவியிருக்கிறது சண்டை.

  இயக்குநராக இருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ள சுந்தர்.சி கொடுத்துள்ள 3வது வெற்றிப் படம் சண்டை. படம் முழுக்க அடித்துத் துவம்சம் செய்திருக்கிறார் மனிதர்.

  காமெடி, சென்டிமென்ட், லாஜிக்கே இல்லாத சண்டைகள் என படம் முழுக்க ஆக்டிங் மசாலாவை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஆனாலும் நாசியைத் தாக்காத வகையில் நெடி இருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். பி மற்றும் சி சென்டர் ரசிகர்கள் விசிலடித்து ரசித்துப் பார்க்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். இவரே தயாரிப்பாளரும் கூட.

  அந்தக் காலத்து பூவா தலையா, போன காலத்து மாப்பிள்ளை, மன்னன் ஆகிய படங்களின் கதையை எடுத்து கிரைண்டரில் போட்டு ஆட்டி, வடிகட்டியது போல இருக்கிறது சண்டை படத்தின் கதை.

  இதுதான் கதை:

  பாங்காக்கில் வசிக்கும் மகா பணக்காரி தங்கலட்சுமி (நதியா). தனது மகள் அபியை (ராகினி - ஷோக்கா கீறாங்கோ, ஹிஹிஹி) இன்னொரு பெருந்தனக்காரரின் மகனுக்குக் கட்டிக் கொடுக்க நினைக்கிறார். கல்யாணத்தை தனது சொந்த ஊரான கொத்தமங்கலத்தில் நடத்த திட்டமிடுகிறார்.

  இதற்கு காரணம் தனது கணவர் நெப்போலியன் சாவுக்குக் காரணம் என நினைக்கும் தனது சகோதரன் லாலு அலெக்ஸ் மற்றும் உறவுக்காரர்களை பழி தீர்க்கவே சொந்த ஊரில் கல்யாணம் நடத்த ஆசைப்படுகிறார்.

  ஊருக்கும் வந்து சேருகிறார். வந்த இடத்தில் சில ரவுடிகள் தங்கலட்சுமியையும், அவரது மகளையும் தாக்க முயல்கிறார்கள். அந்த நேரத்தில் 'டஹார்' என வந்து காப்பாற்றுகிறார் ஹீரோ கதிர் (சுந்தர்.சி)

  கதிரின் தீரத்தைப் பார்த்து சிலிர்க்கும் தங்கலட்சுமி அவரையே தனது மகளின் பாடிகார்ட் ஆக நியமிக்கிறார். அவருக்கு அசிஸ்டென்ட் மணி (விவேக்).

  இந்த நிலையில் கதிரும், மணியும் சேர்ந்து பாங்காக் மாப்பிள்ளைக்கும், அபிக்கும் நடக்கவிருக்கும் கல்யாணத்தை குளறுபடி செய்து தடுத்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்கலட்சுமியின் ஆசியுடன் கதிர், அபி கழுத்தில் தாலி கட்டுகிறார்.

  தாலி கட்டிய பிறகு கதிர் கூறும் சில உண்மைகள் தங்கலட்சுமியின் வயிற்றில் தகரத்தை காய்ச்சி ஊற்றியது போல உள்ளது. கதரின் முழுப் பெயர் கதிரேசன். தங்கலட்சுமியின் சொந்த சகோதரனின் மகன். அபியின் முறைப் பையன்.

  கொதிப்படையும் தங்கலட்சுமி, மகளுக்கு விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மகளைக் கூட்டிக் கொண்டு பாங்காக் போய் விடுகிறார். கதிர் மீது மகளுக்கு தப்பான அபிப்பிராயம் வர வேண்டும் என்பதற்காக கரகாட்டக்காரி நமீதாவை வைத்து சில சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றுகிறார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை.

  அதன் பிறகு என்ன நடக்கிறது, அபியும், கதிரும் சேருகிறார்களா, தங்கலட்சுமியின் கோபம் தணிகிறதா என்பது மீதக் கதை.

  படத்தின் குறைகளும், நிறைகளும்:

  விவேக் - சுந்தர்.சி. காமெடிக் காட்சிகள், மதமதப்பான கரகாட்டக்காரி நமீதாவின் மகா கவர்ச்சி ரசிகர்களை ஜில்லடிக்க வைத்திருக்கிறது.

  சில நேரங்களில் விவேக் கடுப்படிக்கிறார். குறிப்பாக நாட்டாமையாகவும், மகனாகவும் வரும் காட்சிகள் மகா டென்ஷனைக் கூட்டுகிறது.

  முன்னாள் கவர்ச்சி கலாட்டாக்காரி ஜோதி லட்சுமி, வயதான விவேக்கின் ஜோடியாக வந்து கதிகலங்க வைக்கிறார். ஒரு பாட்டும் பாடி பதைபதைக்க வைத்திருக்கிறார்.

  சுந்தர்.சி. நீட். இன்னும் இரண்டு வருஷங்களில் பிசியான ஆக்ஷன் ஹீரோவாக மாறுவது உறுதி.

  படம் முழுக்க நதியாவின் நாட்டாமைதான். அரக்கத்தனமான, அதேசமயம் கிளாமரான மாமியாராக அதகளம் செய்திருக்கிறார். இதில், சுந்தர்.சியுடன் ஒரு கனவு டூயட் வேறு. நதியாவை விட்டு இளமை ஒரேயடியாக ஓடிப் போய் விடவில்லை.

  நமீதா Too hot! கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை மூச்சுத் திணறடித்திருக்கிறார். சும்மாவே அவருக்கும் டிரஸ்ஸுக்கும் சம்பந்தம் இருக்காது. இந்த நிலையில் கரகாட்டக்காரி வேடம் வேறு, கவர்ச்சி சற்றே ஓவர்தான்.

  ராகினிக்கு இது முதல் படம். நடிக்க வாய்ப்பே இல்லை. நானாச்சு, நமீதாவாச்சு என்று கவர்ச்சிப் போட்டியில் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்.

  இதுபோதாதென்று சுஜாவை வைத்து ஒரு குத்துப் பாட்டு. சண்டைக் களம், அவ்வப்போது சதைக்களமாகவும் மாறியிருக்கிறது.

  தினாவின் இசை ரொம்ப பெரிய இம்சை. இளையராஜாவின் பழைய ஹிட் பாடல்கள் பலவற்றையும் எடுத்து காப்பி அடித்திருக்கிறார். இதில் இரண்டு ரீமிக்ஸ் பாட்டுக்கள் வேறு. அதில் வாடி என் கப்பக்கிழங்கே பாடலை சுந்தர்.சியே பாடியிருக்கிறார்.

  'ஷக்தி மசாலா' வென்றிருக்கிறது!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X