twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அயன்- திரைப்பட விமர்சனம்

    By Staff
    |

    Surya
    நடிப்பு: சூர்யா, பிரபு, தமன்னா, ஜெகன், ஆக்ஷ்தீப் செகால்,
    காமிரா: எம்எஸ் பிரபு
    வசனம்: சுபா
    சண்டைப்பயிற்சி: கனல் கண்ணன்
    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
    கதை, திரைக்கதை, இயக்கம்: கேவி ஆனந்த்
    தயாரிப்பு: சன் பிக்சர்ஸ், ஏவிஎம்

    'தமிழில் இப்படியொரு ஆக்ஷன் படம் பார்த்து எத்தனை நாளாச்சு' என வாய்விட்டுப் பாராட்டுமளவுக்கு வேகம், விறுவிறுப்பு, சுவாரஸ்யம், இளமைக் குறும்புகள், ஜிலீர்க் காதல் என கலக்கலான படம் சன் பிக்சர்ஸின் அடுத்த வெளியீடான அயன்.

    கதையென்று பார்த்தால் கடத்தல் மாபியாக்களின் வழக்கமான மோதல்தான். அதுகூட 'கேட்ச் மீ இஃப் யு கேன்' போன்ற படங்களின் சாயல் நிறையவே தெரிகிறது. ஆனால் காட்சிப்படுத்தியிருக்கும் விதம்தான் 'அடடா' என ஆச்சர்யப்படுத்துகிறது.

    எம்எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த புத்திசாலி 'குருவி' சூர்யா. விதவிதமான பெயர்களில், உருவங்களில், பாஸ்போர்ட்களில் ஏர்போர்ட் கஸ்டம்ஸுக்கு டிமிக்கி கொட்டுவிட்டு தங்கம், வைரம், திருட்டு டிவிடி என கடத்தி வந்து, தனது காட்ஃபாதர் பிரபுவுக்கு விசுவாசமிக்க அடியாள் என்பதற்கும் மேலான அந்தஸ்துடன் வளைய வரும் வடசென்னைக் குருவி.

    இவர்களுக்கு ஒரே தொழில் எதிரி ஒரு மார்வாடி (ஆகாஷ்தீப் செகால்). பிரபுவையும் சூர்யாவையும் மிஞ்சி கள்ளக் கடத்தல் மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக வரத் துடிக்கிறார். அதற்காக சூர்யா போகுமிடமெல்லாம் போய் தொல்லை கொடுக்கிறார்.

    இந்த நேரத்தில்தான் பிரபுவிடம் அடியாள் குருவியாக வந்து சேருகிறார் ஜெகன். அவரது தங்கை தமன்னா. ஜெகனிடம் சூர்யாவுக்கு ஏற்படும் நெருக்கமான நட்பு, பின்னர் அவர் தங்கை தமன்னா மீது காதலாக மாறுகிறது. இந்தக் காதல் நன்கு கனிய முடிந்த வரை உதவுகிறார் ஜெகன். ஆனால் ஒரு கட்டத்தில் மார்வாடி வில்லன் அனுப்பிய உளவாளிதான் இந்த ஜெகன் என்பது தெரிய வரும்போது, தமன்னாவின் காதலைத் தூக்கியெறிகிறார் சூர்யா.

    ஒரு முறை மலேஷிய விமானத்தில் சூர்யாவும் ஜெகனும் ஒன்றாய் பயணிக்க நேர்கிறது. அப்போதுதான் ஜெகன் வயிற்றுக்குள் போதை மருந்து கேப்ஸ்யூல்களை வைத்துக் கடத்திப் போவது சூர்யாவுக்குத் தெரிய வருகிறது. மலேஷிய விமான நிலையத்தில் ஜெகன் இறங்கும்போது, ஒரு கேப்ஸ்யூல் வயிற்றுக்குள் வெடித்துவிட, உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முயல்கிறார் சூர்யா.

    ஆனால் அதற்குள் ஜெகன் கொண்டுவரும் போதை மருந்துக்காக காத்திருப்பவர்கள் அவரைக் கடத்திப் போய், ஒரு பாலத்துக்கு அடியில் வைத்து பிளேடால் வயிற்றைக் கிழித்து போதை மருந்து கேப்ஸ்யூல்களை எடுத்துக் கொண்டு ஜெகனை அப்படியே போட்டுவிட்டு ஓட, அங்கே ஆஜராகி, உண்மை புரிந்து அதிர்ந்து நிற்கிறார் சூர்யா.

    கண்ணெதிரில் நண்பன் துள்ளத் துடிக்க சாகிறார், 'என் உடலை ஊருக்குக் காட்டாமல் எரித்துவிடு' என்ற கோரிக்கையுடன்.

    கனத்த மனதோடு ஊர் திரும்பும் சூர்யாவை, சென்னை போலீஸ் கைது செய்கிறது, மலேஷியாவில் ஜெகனை கொலை செய்து எரித்துவிட்டார் என்ற புகாருடன் (போட்டுக் கொடுப்பவர் மார்வாடி வில்லன்).

    இந்த வழக்கிலிருந்தும், கடத்தல் தொழிலிலிருந்தும் சூர்யா எப்படி மீள்கிறார், தனது தொழில் எதிரியை எப்படி வீழ்த்துகிறார் என்பது மீதிக் கதை.

    முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சிவரை ரசிகர்களை இப்படி அப்படி நகரவிடாமல் கட்டிப் போடுகிறது திரைக்கதையும், சூர்யா - பிரபுவின் பிரமாதமான நடிப்பும்.

    காங்கோவின் ஏழ்மை, நிலையற்ற அரசியல்தன்மை, உள்நாட்டுக் கலவரம், இத்தனையையும் மீறி அந்த மக்கள் இயல்பாக வாழ்வது போன்றவற்றை ஜஸ்ட் ஒரே ஒரு காட்சியில் அழகாகக் காட்டியிருப்பார் கேவி ஆனந்த். சிட்டி ஆப் காட் படத்தின் பாதிப்புதான் என்றாலும், தமிழில் இது ஒரு அரிய பதிவு. அயன் மாதிரி ஒரு கமர்ஷியல் படத்துக்குள் அந்தக் காட்சி கவிதை மாதிரி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

    அதே போல ஆக்ஷன் காட்சிகளில் அயன் ஒரு புதுப் பரிமாணம் என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யா என்ற க்யூட்டான, ரொமான்டிக் ஹீரோவுக்கு இத்தனை ஆக்ரோஷமான இளைஞன் இருக்கிறாரா என பிரமிக்க வைக்கிறது. காங்கோவின் தெருக்களில் டூப் உதவியின்றி சூர்யா செய்துள்ள சாகஸம் ஹாலிவுட் தரம்.

    தமன்னாவுக்கும் அவருக்குமான காதல் காட்சிகள் இளமைக் கவிதைகள். அந்த காதலை கண்டும் காணாமல், சமயத்தில் காதலை வளர்த்தும் விடும் அந்த அண்ணன் பாத்திரம் கொஞ்சம் வித்தியாசம்தான்.

    தமன்னாவிடம் இந்தப் படத்தில் அபார முன்னேற்றம்... நடிப்பில்தான்! இந்த ஆண்டு நம்பர் ஒன் நடிகை கிரீடம் தயாராக இருக்கிறது.

    படத்தின் இனிய ஆச்சர்யம் பிரபு. பத்து நாள் நரைத்த நாடி, ஆனால் பல ஆண்டு பக்குவப்பட்ட நடிப்புடன் அவர் வரும் காட்சிகள் மனதுக்கு நிறைவு.

    கொடுத்த பாத்திரத்தை அழகாகச் செய்துள்ளார் ஜெகன். நெகிழ வைக்கிறார் கருணாஸ். அந்த வில்லன்... ஓகே.

    கஸ்டம்ஸ் அதிகாரியாக வரும் பொன்வண்ணன் நூல் பிடித்தமாதிரி கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளார்.

    இவ்வளவு பெரிய குற்றங்களில் போலீஸின் ரோல் என்னவென்று பார்க்கும்போது நமக்கே வெட்கமாக இருக்கிறது.

    அதேபோல போதை மருந்து கடத்தலின் ஆணிவேர் 'அடப் பாவிகளா..' என குலை நடுங்க வைக்கிறது.

    படத்தின் இன்னொரு நாயகன் ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு. ரசனையான காட்சிப் பதிவுகள். நமீபியா, காங்கோ, தான்சானியா என தமிழ் சினி்மாவின் கேமராக்கள் பார்த்திராத ஆப்ரிக்க தேசங்களின் அழகு, பயங்கரம், அவலங்களை கண்முன் நிறுத்துகிறது. ஆக்ஷன் காட்சிகளில் சூர்யாவுக்கு நிகரான வேகம்!

    முதல் இரண்டு பாடல்கள் ஜிவ், கடைசி இரண்டு பாடல்களோ ஜவ்! இந்த மாதிரி படத்துக்கு இவ்வளவு குறைந்த தரமுள்ள பின்னணி இசை உதவாது ஹாரிஸ் ஜெயராஜ்!

    முழுக்க முழுக்க ஆக்ஷன் படம்... அதில் லாஜிக் மீறல்கள் இருப்பது வாடிக்கைதான். அயனும் அதில் விலக்கல்ல, என்றாலும் எந்த தவறும் துருத்திக் கொண்டு தெரியாத அளவுக்கு சாமர்த்தியமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் கேவி ஆனந்த். கோடைக்கேற்ற சரியான ட்ரீட்தான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X