twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போராளி - விமர்சனம்

    By Shankar
    |

    நடிப்பு: சசிகுமார், அல்லரி நரேஷ், கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி, ஸ்வாதி, வசுந்தரா, ஜெய்ப்பிரகாஷ்

    இசை: சுந்தர் சி பாபு

    ஒளிப்பதிவு: கதிர்

    தயாரிப்பு: சசிகுமார்

    இயக்கம் : சமுத்திரக்கனி

    பிஆர்ஓ: நிகில் முருகன்

    'மனிதன் ஒவ்வொருவனும் ஒரு சமூக விலங்குதான்... சூழல்தான் ஒருவனை போராளியாக்குகிறது' என்ற ஒருவரி தத்துவத்தை, 'போராளி'யாக்கியிருக்கிறார்கள் இயக்குநர் சமுத்திரக்கனியும் சசிகுமாரும்.

    காட்சிகளில் சில நமக்கு ஏற்கெனவே பரிச்சயப்பட்ட மாதிரி தெரிந்தாலும், சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் சொல்ல வந்திருக்கும் செய்தி, அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்க வைக்கிறது.

    ஒரு மனநல காப்பகத்திலிருந்து தப்பி சென்னை வரும் நண்பர்களான சசிகுமார் - அல்லரி நரேஷ் இருவரும் கஞ்சா கருப்புடன் வலுக்கட்டாயமாக தங்குகிறார்கள். அக்கம்பக்கத்தில் வசிப்போர் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெறும் அவர்கள், அப்படியே அருகாமையிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலைக்குச் சேர்ந்து, பின் புதுசாக ஒரு வியாபாரம் ஆரம்பித்து, அப்படியே வளர ஆரம்பிக்கும்போது, அவர்களுக்கும் பிரச்சினை ஆரம்பமாகிறது.

    அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க சசிகுமாரும் நரேஷும் ஓடுகிறார்கள். எவ்வளவு காலத்துக்குதான் ஓடுவது, திருப்பியடிப்போம் என்று அவர்களை நிமிர வைக்கிறது சூழ்நிலை.

    எதற்காக ஒடுகிறார்கள்... பிரச்சினையை வென்றார்களா... என்பது ப்ளாஷ்பேக்காக சொல்லப்பட்டிருக்கிறது.

    அன்றாடம் நாம் எத்தனையோ மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பார்க்கிறோம். ஆனால் இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்று யோசிக்க நேரமோ, மனிதாபிமானமோ நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லை. அவர்களை அந்த சூழலுக்கு தள்ளியது எது? அவர்களின் உலகம் என்ன என்பதை சசிகுமார் வெளிப்படுத்தும் காட்சிகள் மனதைத் தைக்கின்றன.

    இதற்கு முன் சசிகுமார் நடித்த இரு படங்களை விட இந்தப் படத்தில்தான் அசத்தியிருக்கிறார் எனலாம். அப்பாவித்தனம், இயலாமை, மனிதாபிமானம், நட்புக்காக எதையும் தாங்கத் தயாராகும் உன்னத குணம், ஆத்திரம் என அனைத்தையும் இயல்பாக காட்டியிருக்கிறார். காட்சிகளின் தன்மைக்கேற்ப வசனங்களை உச்சரிக்கும் பாங்கில் சசிகுமார் டிஸ்டிங்ஷனே வாங்கிவிட்டார்!

    சூரியும் அவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரகளை.

    சசிகுமாரின் நண்பனாக வரும் அல்லரி நரேஷ், மனநிலை பிறழ்ந்த காட்சிகளில் பார்ப்பவர்களின் இரக்கத்தை மொத்தமாக அள்ளிக் கொள்கிறார்.

    தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த கஞ்சா கருப்புக்கு இந்தப் படம் இன்னொரு லைஃப்!

    கதாநாயகி என்ற கிரீடத்துடன் வரும் ஸ்வாதியை விட, நான்கே காட்சிகளில் வந்தாலும் வசுந்தராவுக்கே அதிக ஓட்டு.

    ப்ளாஷ்பேக்கில் வரும் கொலைவெறிக் காட்சிகள் ஒரு பக்கம் கோபத்தை ஏற்படுத்துவோடு, அது அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருப்பதில் சலிப்புத் தட்டுவதை இயக்குநரும் ஹீரோவும் கவனித்திருக்கலாம்.

    அதேபோல அத்தனை கொடிய ரத்தக்களறியான காட்சிகளுக்குப் பிறகு, ஒரு சந்தோஷ முடிவை காட்ட முயல்வது இயல்பை மீறிய ஒரு திணிப்பாகவே தெரிகிறது.

    வசனங்கள் செம ஷார்ப். வசனங்களுக்காகவே ஒரு படத்தை சிலாகிப்பது இன்றைக்கு ரொம்ப அரிது. அந்த அரிய லிஸ்டில் போராளியும் இடம்பெறுகிறது. குறிப்பாக அந்த சிலோன் பரோட்டா, வாடகைக்கு வீடு தர மறுக்கும் நகரவாசிகளைச் சாடும் வசனங்கள் ('தன் மனைவி, மகளை நம்பாதவன்தான் பேச்சுலருக்கு வீடு தரமாட்டான்') இடம்பெறும் காட்சிகள் கைத்தட்டல்களை அள்ளுகின்றன.

    படத்தின் முக்கிய மைனஸ் இசை. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் கோட்டைவிட்டுவிட்டார் சுந்தர் சி பாபு. ஆனால் இந்தக் குறையை மறந்து காட்சிகளை ரசிக்க வைப்பவர் ஒளிப்பதிவாளர் கதிர். அந்த ஆட்டுக் கிடையும், அதில் நடக்கும் சண்டையையும் அப்படியே நேரில் பார்க்கிற ஒரு உணர்வு.

    நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும், சமூகத்துக்கு தங்கள் படைப்பால் ஒரு சின்ன விழிப்புணர்வாவது வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களுடன் போராடுபவர்கள் சினிமாவில் ரொம்ப ரொம்ப குறைவே.

    அத்தகைய போராளிகளாக நம்முன் நிற்கும் சசிகுமார் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனியின் இத்தகைய படைப்புகளுக்கு முழு ஆதரவு தர வேண்டியதே நல்ல ரசிகனுக்கு அழகு!

    இந்தப் போராளிக்கு வெற்றி கிட்டட்டும்!

    English summary
    Once again Sasikumar - Samuthirakkani 'friendly' combination is back with a bang. Their fourth successful flick Porali is become one of the bold attempts of Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X