For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்கேயும் காதல்- பட விமர்சனம்

  By Shankar
  |

  நடிப்பு: ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி, ராஜு சுந்தரம், சுமன்

  இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

  ஒளிப்பதிவு: நீரவ் ஷா

  திரைக்கதை - இயக்கம்: பிரபு தேவா

  தயாரிப்பு: கல்பாத்தி அகோரம்

  வெளியீடு: சன் பிக்சர்ஸ்

  ஒரு மென்மையான காதல் கதையை முற்றிலும் வெளிநாட்டு லொகோஷனில் கவிதையாய் சொல்ல வேண்டும் என்பது இயக்குநரான பிரபு தேவாவின் ஆசை. அதில் தப்பேதுமில்லை. அதற்காக காட்சியமைப்புகளில் கொஞ்சம் மெனக்கெட்டிருப்பதும் தெரிகிறது. ஆனால் மனதைத் தொடாத திரைக்கதை, ஈர்ப்பில்லாத வசனங்களால், பத்தோடு பதினொன்றாகியிருக்கிறது எங்கேயும் காதல்.

  பெண்களை ருசிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட, காதலை வெறுக்கும் கார்ப்பரேட் ஜாலிப் பேர்வழி ஜெயம் ரவியைப் பார்த்த மாத்திரத்தில் உருகி உருகிக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் பாரீஸ் பெண் ஹன்ஸிகா மோத்வானி. ஆனால் காதலைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார். இருவரும் காதலில் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.

  படத்தின் ஆரம்பம் இளமைக் கவிதை. குறிப்பாக பிரபுதேவாவின் அறிமுகக் காட்சியும், எங்கேயும் காதல் பாட்டுக்கு அவர் ஆடும் நடனமும் 'க்ளாஸ்' ரகம்!

  காட்சிகளை படமாக்கிய விதத்தில் இளமையும் கவிதைத்தனமும் கலந்துகட்டி மயக்குகின்றன. ஆனால் இத்தனை நல்ல விஷயங்களும் அடிபட்டுப்போவது எதிர்ப்பார்க்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமும் இல்லாத ஒரு 'சவ சவ' திரைக்கதையால்.

  படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஏற்ற வேடம்தான். ஆனால் ஏனோ ஒரு முழுமை பெறாத சிலை மாதிரி நிற்கிறது அவரது பாத்திரப் படைப்பு.

  ஹன்ஸிகா மோத்வானிக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வரவில்லை. உடலளவில் சீக்கிரமே இன்னொரு நமீதாவாகிவிடுவார் போலிருக்கிறது.

  ராஜூ சுந்தரம் நகைச்சுவை என்ற பெயரில் காதில் ரத்தம் வர வைக்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் பிரகாஷ் ராஜ் ஈர்க்கிறார். ஹீரோயினுக்கு அப்பாவாக வருகிறார் சுமன்.

  படத்தின் நிஜமான ஹீரோக்கள் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ். முன்னவரின் ஒளிப்பதிவு கண்களைக் கொள்ளையடிக்கிறது. பின்னவரின் 'எங்கேயும் காதல்..' கேட்டதும் காதுகளை விட்டு அகல மறுத்து உதடுகளில் உட்கார்ந்துவிடுகிறது. மைக்கேல் ஜாக்ஸன் பாடலைக் காப்பியடித்து 'நங்கை...'யைத் தந்துள்ளார் என்றாலும்கூட மன்னிக்க வைக்கிறது, அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம். ஆன்டனியின் எடிட்டிங் இந்தப் பாடலில் ஷார்ப்.

  சின்னச் சின்ன விஷயங்களுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்ட இயக்குநர் பிரபுதேவா, மனதை வருடும்படியான ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்கத் தவறியது, எங்கேயும் காதலை, என்ன படம் போங்க என்று கிண்டலடிக்க வைத்துள்ளது.

  சன் வெளியிட்ட படங்களில் இதுவும் ஒன்று... அவ்வளவுதான்!!

  English summary
  Engeyum Kadhal is director Prabhu Deva’s latest romantic musical film but not impressed much due to its predictable screenplay.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X