twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகர் மலை - விமர்சனம்

    By Staff
    |

    RK with Bhanu in Azhagar Malai
    நடிப்பு: ஆர்கே, பானு, வடிவேலு, நெப்போலியன், மணிவண்ணன், லால், சோனா
    இசை: இசைஞானி இளையராஜா
    ஒளிப்பதிவு: கார்த்திக் ராஜா
    கதை திரைக்கதை வசனம் இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்
    தயாரிப்பு: கருமாரி கந்தசாமி
    பிஆர்ஓ: ஜான்

    எல்லாம் அவன் செயல் படத்துக்குப் பிறகு ஆர்கே நாயகனாக நடித்துள்ள படம் அழகர் மலை. முதல் படத்தில் வித்தியாசமான வக்கீலாக வந்து மிரட்டியவர், இந்தப் படத்தில் மதுரைக்கார கிராமத்து இளைஞராக நடித்துள்ளார்.

    கதை அப்படி ஒன்றும் வித்தியாசமானதல்ல. வழக்கமான மசாலா பார்முலாக் கதைதான். ஆனால் வடிவேலுவின் காமெடியும் இளையராஜாவின் இசையும் உட்கார வைத்துவிடுகின்றன.

    அண்ணன் நெப்போலியனின் பாசத்தில் வளர்கிற தம்பி ஆர்கே. அவரது கலாட்டா காமெடி மாமன் வடிவேலு. இருவருக்கும் ஒரே வேலை... குடிப்பது... குடித்துக் கொண்டே இருப்பது.

    ஆனால் குடித்துவிட்டு ஒருமுறை ஆர் கே செய்யும் தவறுக்காக, நெப்போலியன் ஊர் சபையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அந்த ஒரே சம்பவத்தில் மனம் மாறி, குடிப்பதை விட்டுவிடுகிறார் ஆர்கே. அடுத்த காட்சியிலேயே குடிக்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஒருவரைத் திருத்திக் கூட விடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    அப்போதுதான் கிராமத்து திருவிழாவுக்கு வரும் பானுவைச் சந்திக்கிறார் ஆர்கே. கண்டதும் காதலில் விழுகிறார். சில நாட்களுக்குப் பிறகு பானுவும் காதலில் விழுகிறார். அப்படியே இரண்டு டூயட்டுகளைப் பாடி முடிக்க, இரு குடும்பத்து சம்மதத்துடனும் கல்யாணமும் ஏற்பாடாகிறது.

    அப்போதுதான் கிராமத்தில் நெப்போலியனின் பரம்பரை எதிரியாகத் திகழும் லால் இதில் குறுக்கிடுகிறார். ஆளை வைத்து ஆர்கேவைக் கொல்ல முயல்கிறார். அது தோல்வியில் முடிய, நேரடியாக தன் தங்கையை அனுப்பி கல்யாணத்தை நிறுத்துகிறார்.

    அந்த நேரத்தில் நெப்போலியன் - லால் குடும்பத்துப் பகை என்னவென்பது ப்ளாஷ்பேக்காக விரிகிறது. இந்தப் பகையை முடித்து எப்படி பானுவை கரம்பிடிக்கிறார் ஆர்கே என்பதும், அதன் பிறகு வரும் ஒரு மெகா சண்டையும்தான் மீதிப் படம்.

    ஆர்கே இந்தப் படத்தில் தன்னை ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாக நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளார். சண்டைக் காட்சிகளில் பின்னுகிறார். நகைச் சுவைக் காட்சிகளில் வடிவேலுவுடன் சேர்ந்து மின்னுகிறார்.. நடனக் காட்சிகளில் பின் தங்குகிறார்!

    வடிவேலு இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ எனும் அளவுக்கு தூள் கிளப்பியிருக்கிறார். இடைவேளை வரை மாமனும் மச்சானும் ஏக கலாட்டா பண்ணுகிறார்கள்.

    இந்த மாதிரி படத்தில் நாயகிக்கு என்ன வேலை இருக்கும்? அறிமுகக் காட்சி, மூன்று டூயட்டுகள், க்ளைமாக்ஸில் கண்ணைக் கசக்குவது... அதைச் சரியாக செய்திருக்கிறார் பானு!

    வடிவேலு வழக்கம் போல வெடிவேலு... குறிப்பாக இடைவேளை வரை, கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் வடிவேலு நகைச்சுவையில் மற்ற எல்லாம் மறந்துபோகின்றன.

    மணிவண்ணன், நெப்போலியன் சிறப்பாக நடித்துள்ளனர். வில்லன் லால் வழக்கம்போல...

    இளையராஜா இசை படத்துக்கு பெரிய பலம். முன்பெல்லாம் ராமராஜன் படம் எப்படி கதையில் சொதப்பினாலும் இசையில் நிமிர்ந்து நிற்குமோ அப்படி இந்தப் படத்திலும் இசை 'நிற்கிறது!'

    ராஜாவே தோன்றிப் பாடும் ஆரம்பப் பாடல் பல சேதிகளைச் சொல்லும் ஒரு இசை ஆல்பம். சாதனா சர்க்கமுடன் இணைந்து அவர் பாடும் கருகமணி... அருமையான மெலடி. படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் கருகமணியை முணுமுணுத்தபடியே வருவது அந்தப் பாடலுக்குக் கிடைத்த வெற்றி.

    கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது.

    'வடிவேலு காமெடி, ராஜா இசை இருக்கு... அப்புறமென்ன கவலை..' என்று இயக்குநர் எஸ்பி ராஜ்குமார் பெரிதாக மெனக்கெடவில்லை என்பது தெரிகிறது. திரைக்தையில் இன்னும் கொஞ்சம் முறுக்கேற்றியிருந்தால் படம் புதுமெருகுடன் மின்னியிருக்கும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X