twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போட்டா போட்டி 50-50: சினிமா விமர்சனம்

    By Shankar
    |

    Madhu Shalini and Sadagopan Ramesh
    நடிகர்கள்: ஆர் சிவம், ஹரிணி, சடகோபன் ரமேஷ், உமர், மயில்சாமி, அவதார் கணேஷ்

    இசை: அருள்தேவ்

    ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

    தயாரிப்பு: வி முரளிராமன்

    இயக்கம்: யுவ்ராஜ்

    லகான், சென்னை 28 என கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வெற்றி கண்ட படங்களின் பாதிப்பில் வந்துள்ள படம் போட்டா போட்டி.

    உப்பார்பட்டியில் கொடைவாணன் (சிவம்), கொலைவாணன் (உமர்) என இரண்டு பங்காளிகள். இருவரும் கீரியும் பாம்பும்போல. கொடைவாணன் 'பாடி ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்' ரகம். தமாஷ் பேர்வழி. கொலைவாணன் பெயருக்கு ஏற்ற மாதிரியே கொலை செய்யவும் தயங்காத ஆசாமி.

    இந்த இருவருக்குமே ஆசை, மாமன் மகள் ரஞ்சிதத்தை (ஹரிணி) அடைவதுதான். ஆனால் அவளுக்கோ இந்த இருவரையுமே பிடிக்கவில்லை. ஒரு நாள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பெண் கேட்டுப் போகிறார்கள் மாமன் வீட்டுக்கு.

    இந்த சிக்கலை சமாளிக்க, ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்குதான் ரஞ்சிதம் என ஊர் முடிவு பண்ணுகிறது. ஆனால் இருவருக்குமே கிரிக்கெட் அரிச்சுவடி கூட தெரியாது. எனவே ஆளுக்கு ஒரு கோச்சை அழைத்து வர முடிவு செய்கிறார்கள்.

    இதில் கொடைவாணன் அணி சடகோபன் ரமேஷை கடத்தி வருகிறது. கொலைவாணன் அணி டுபாக்கூர் கோச் மயில்சாமியை மடக்கிப் பிடித்து வருகிறது.

    கோச்சிங் என்ற பெயரில் ஏகப்பட்ட தமாஷ் நடக்கிறது. இதற்கிடையே, போட்டிக்கு காரணமான ரஞ்சிதா, கொடை- கொலைவாணன்களை விட்டுவிட்டு, சடகோபன் ரமேஷை லவ்வுகிறார். இறுதியில் யாருக்கு அவர் கிடைத்தார் என்பதை ஒரு முழு கிரிக்கெட் போட்டியை நடத்தி சொல்கிறார்கள்.

    இடையில் அலயன்ஸ் என்ற நிறுவனத்தினர் அங்குள்ள கிரானைட் மலை ஒன்றை விலைபேச வருகிறார்கள். இவர்களிடமிருந்து மலையைக் காக்கப் போராடுகிறது கொடைவாணன் குழு.

    லகான் பாதிப்புதான் படம் என்றாலும், அதை தமிழ் கிராமத்துக்கேற்ப மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஆனால் பட்டிதொட்டியெல்லாம் நீக்கமற உப்பார்பட்டியில் ஒருவருக்கு கூட தெரியாமல் போனதைத்தான் நம்ப முடியவில்லை!

    அதேபோல தேவையே இல்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள 'அவாள்' அரசியல் உள்குத்தை ஏற்க முடியவில்லை. தேசிய கிரிக்கெட்டில்தான் இந்த நிலை என்றால், சினிமாவில், அதுவும் ஒரு கிராமத்தில் நடப்பதாக வரும் கிரிக்கெட்டில் கூடவா... அட போங்கப்பா!

    இயக்குநர் - இணை தயாரிப்பாளர் என்பதற்காக, இப்படியெல்லாம் தேவையே இல்லாமல் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு பயமுறுத்தலாமா யுவராஜ்?

    காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் தட்டிக் கொண்டு போகும் கேரக்டர் சடகோபன் ரமேஷுக்கு. ஆனால் கிரிக்கெட்டை கோட்டைவிட்ட மாதிரியே நடிப்பிலும் அவர் அவுட். அவர் வசனம் பேசும்போது எரிச்சலாக உள்ளது. நல்ல வேளை, பாட்டு, டான்ஸ், பைட் என படுத்தாமல் விட்டார்(கள்)!

    கொடைவாணனாக வரும் சிவம் கலக்கியிருக்கிறார். இந்த மண்ணின் மைந்தர்களை பிரதிபலிக்கும் முகம், தோற்றம், அல்டாப்பு குணம் என அப்படியே உப்பார்பட்டி ஆளாகவே மாறியிருக்கிறார்.

    இவருக்கு எடுப்பாக வரும் அவதார் கணேஷ், 'ராசுக்குட்டி'யில் வரும் செம்புலியை நினைவூட்டுகிறார். மயில்சாமி இருக்க கலகலப்புக்கு பஞ்சமிருக்குமா... கோச் என்ற பெயரில் இவர் அடிக்கும் லூட்டி சரியான காமெடி.

    நாயகி ஹரிணி ஓகே.

    கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் அசல் கிராமத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் அருள்தேவின் இசை படத்தில் ஒன்ற விடாமல் தடுக்கிறது.

    கடைசி காட்சி வரை படத்தை கலகலப்பாக கொண்டுபோன வரையில் இயக்குநருக்கு வெற்றிதான். வசனங்களில் புத்திசாலித்தனமும் கிராமத்து குறும்பும் கொப்பளிக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஒரு முழு 50 ஓவர் மாட்ச் பார்த்த மாதிரி மகா இழுவை!

    மற்றபடி... இரண்டரை மணி நேரத்தைக் கொல்ல சரியான படம்தான்!

    English summary
    Potti Potti is the film based on a cricket match between two local groups that tried to get a girl for their heads. This Yuvaraj directed film is satisfies those who wants to kill the time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X