twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் கடவுள்-பட விமர்சனம்

    By Staff
    |

    Naan Kadavul
    இசை: இசைஞானி இளையராஜா
    பாடல்கள்: வாலி, இளையராஜா
    கதை - திரைக்கதை - இயக்கம்: பாலா
    ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்
    வசனம்: ஜெயமோகன்
    ஸ்டன்ட்ஸ்: சூப்பர் சுப்பராயன்
    எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ்
    மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
    நடிப்பு: ஆர்யா, பூஜா, ராஜேந்திரன், ராஜேந்திரநாத், கோவை கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் விக்ரமாதித்யன்

    -ஷங்கர்

    பாதுகாப்பான வேலை, மாத இறுதியில் சம்பளம், கான்வென்ட் கல்வி கற்கும் வாரிசுகள், தினமும் 'த ஹிந்து'வின் முகத்தில் விடியும் காலைகள் என எல்லா வகையிலும் 'செக்யூர்டான' ஒரு வாழ்க்கையைப் பற்றி யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அந்த வழமையான வாழ்க்கையைத்தான் நிறையப் பேர் வாழ்ந்து கொண்டுமிருக்கிறோம்.

    ஆனால் அழுக்கு, வன்முறை, அடிமைத்தனம், சுரணையை ரத்தம் வழிய வழிய வெட்டியெடுத்துவிட்டு ஜடமாய், மனம், உடல் இரண்டாலும் ஊனப்பட்டு வாழும் ஒரு வாழ்க்கையைப் படமாக எடுக்க துணிச்சல் மட்டுமிருந்தால் போதாது... வாடிய போதெல்லாம் வாடும் நல்ல மனசும் வேண்டும். பாலாவுக்கும், அவரது ராஜவித்வான் இசைஞானிக்கும் இயல்பிலேயே அப்படியொரு மனசு... அதன் விளைவு 'நான் கடவுள்'!.

    திரையில் வெறும் இரண்டு மணிநேரங்கள் கூட காணச் சகியாத ஒரு வாழ்கைகயை, நிஜத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற சக மனிதர்களைப் பற்றிய படம், நான் கடவுள்.

    மூன்று வருடங்கள் அப்படி என்னதான் செதுக்கினார் பாலா இந்தப் படத்தில்...

    பாட்டி வடைசுட்ட கதை மாதிரி இதைச் சொல்லிவிட முடியாது. காரணம் இதுதான் கதையென்ற ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள் குதிரை ஓட்ட முயலாத பாலா!.

    ஒதுக்கி விடப்பட்டவர்கள் அல்லது இந்த உலகின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டவர்கள், ஒரு பாதாள நரகத்துக்குச் சமமான உலகில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அந்த நரகத்திலிருந்து எப்படி விடுபடுவார்கள்... யார் வந்து அவர்களை காப்பாற்றி, குதிரையில் அல்ல, குறைந்தபட்சம் குப்பை வண்டியிலாவது கூட்டிச் செல்வார்கள்?.

    இந்த மாபெரும் மனித சமூகத்துக்குள் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இன்னொரு சமூகம் உள்ளதே... அதை எப்போது மீட்கப் போகிறோம்.... சமுத்திரத்துக்குள் ஒரு சின்ன ஏரியாய் முடங்கிக் கிடக்கும் 'இவற்றை' எப்படி இந்த ஜன சமுத்திரத்துக்குள் கலக்கச் செய்யப் போகிறோம்?.

    இந்த மிகப்பெரும் கேள்விகளை முகத்திலறைந்துவிட்டு அடங்குகிறது, திரைப்படம் எனும் பெயரில் 2 மணிநேரம் திரையில் நாம் பார்த்த 'ருத்ர' தாண்டவம்.

    காசியில் அகோரி பாபாக்களுக்கு மத்தியில் துவங்குகிறது படம். பின்னர் எங்கெங்கோ பயணப்பட்டு, எவற்றிலெல்லாமோ மோதி, மீண்டும் புறப்பட்ட புள்ளியிலேயே வந்து முடிகிறது, ஒரு முழுமை பெறாத வாழ்க்கை போல. எந்த மனிதனின் வாழ்க்கைதான் முழுமைப் பெற்றிருக்கிறது!.

    படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பூடகம் ஏதும் வைக்காமல் நெத்தியடியாக செய்திகளைச் சொல்லுவது பாலாவின் பாணி. இந்தப் படமும் அதற்கு விலக்கல்ல.

    பிச்சைக்காரர்கள் யாரும் பிறவியிலேயே அந்தப் பட்டத்தோடு வருவதில்லை. இந்தப் பட்டத்தை அவர்கள் கழுத்தில் மாட்டிவிட ஒரு குரூரமான தொழிற்சாலையே இயங்கிக் கொண்டிருக்கிறது.மணிமணியாய் வரும் மழலைகளின் கை கால்களை உடைத்து, உடம்பெல்லாம் பிளேடால் கீறி, அதில் உப்புத் தடவி அலறவைத்து பிச்சை எடுக்கச் செய்து, அந்தப் பணத்தில் பிரியாணியும் சீமைச் சாராயமும் குடித்து மகிழும் பாதகர்கள், அவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து மகிழத் தயாராக இருக்கும் அதிகார வர்க்கத்தினர்... இவர்கள்தான் இந்த பிச்சைக்காரர்களை உருவாக்கும் தொழிற் கூடத் தலைவர்கள்.

    நீங்கள் யாரிடம் இதற்காகப் புகார் தர நினைக்கிறீர்களோ... அவர்களே இந்த பாவத்தின் எஜமானர்கள்...

    வாழ வகையின்றி, முழுசாய் உடலுமின்றி எந்த நிமிடமும் விழுந்து நொறுங்கப் போகும் உலகின் விளிம்பில் தொங்கும் இவர்களின் அவலங்களுக்கு எந்த வகையில் தீர்வு காணப்போகிறோம்... தெரியவில்லை.

    படத்தில் ஒரு பக்கம் பாலாவும், மறுபக்கம் இசைஞானி இளையராஜாவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்கள்.

    ஒரு காட்சியை பாலா என்ன நினைத்து உருவாக்கினாரோ, அந்த எண்ணத்தை தன் இசையால் அந்தக் காட்சிக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

    சிவோஹம்..., பிச்சைப் பாத்திரம்... பாடல்கள் கையாளப்பட்டிருக்கும் விதம், ஒரு தமிழனாய் நம் கலைஞர்களை எண்ணி பெருமைப்பட வைக்கிறது.

    அந்நிய விருதுகள் கொடுத்துதான் இளையராஜா என்ற இந்த மகா கலைஞனை மகத்துவப்படுத்த வேண்டுமென்பதில்லை... யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த தேசத்தின் ஒப்பற்ற கோஹினூர் வைரம் நமது இசைஞானி. நாம் ரசித்து, நாம் கேட்டு மகிழ்ந்த அவரது பாடல்களுக்கும் இசைக்கும் நாமே கொடுப்போம் அப்படியொரு உயர்ந்த விருதினை!.

    ஒளிப்பதிவு இயக்குநர் ஆர்தர் வில்சன், ஸ்டன்ட் இயக்குநர் சூப்பர் சுப்பராயன் இருவரும் படத்துக்கு ஒரு விசேஷ நிறத்தைக் கொடுத்து விடுகிறார்கள். ஆக்ஷன் காட்சிகளின் உச்சம் என்றால் இந்தப் படம்தான். கமர்ஷியலாகவே இருந்தாலும் அத்தனை நேர்த்தி, கலையழகு.

    கிருஷ்ணமூர்த்தி என்ற கலை இயக்குநரின் கைவண்ணம் தனித்துத் தெரியாததே இந்தப் படத்தில் அவரது பங்களிப்புக் கிடைத்த பெருமைதானே!.

    இந்தப் படத்தின் இன்னொரு தூணாகத் திகழ்பவர் ஜெயமோகன். அவரது ஏழாம் உலகம் நாவலாக வந்தபோது பெற்ற விமர்சனக் காயங்களை, இந்தக் கடவுள் வரம் தந்து ஆற்றியிருக்கிறார்.

    ஆர்யா, பூஜா இருவருக்கும் ஆயுள் முழுக்க இந்தப் படத்தை பெருமையாய் சொல்லிக் கொள்ளலாம். சில காட்சிகளில் ஆர்யாவின் கண்களில் விளையாட்டுத்தனம் ஓடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால் அதை பிரமாதமாய் சரிகட்டுகிறது அவரது உடல் மொழி.

    கவிஞர் விக்ரமாதியன் வரும் காட்சிகள் நெக்குருக வைக்கின்றன. முருகனாக வரும் கோவை கிருஷ்ணமூர்த்தி, வில்லனாக வரும் ராஜேந்திரன் இருவரும் பாலாவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலிக்கிறார்கள். இவர்களைத் தவிர 175 புதுமுகங்கள். அனைவருமே, உடலால், மனதால் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை முழுமையாய் தயார் செய்து, ஒரு தனி உலகத்தையே சிருஷ்டிப்பது சாதாரண காரியமா...?.

    விமர்சனம் என்று வந்துவிட்டபிறகு குறை சொல்லாமல் போனால் எப்படி... நாம் வளர்ந்த விமர்சனக் கலாச்சாரம் அதுதானே!

    படத்தின் பல காட்சிகள் முழுமை பெறாமல் தொங்குவது போன்ற ஒரு உணர்வு. "வாழ்க்கையில் எந்தக் காட்சிதான் முழுமையானது என்று சொல்ல முடியுமா? ஒரு நாளேனும் முழுமையாய் வாழ்ந்துவிட்டால் அடுத்த நாளின் மகத்துவம் புரியாது. மனசு, வாழ்க்கை எல்லாவற்றிலும் உள்ள குறைகள்தான் இந்தப் படத்திலும் தெரியும். அவற்றை தெரிந்தேதான் அனுமதித்தேன்…", என்ற பாலாவின் பதிலைக் கேட்டபிறகு, குறையென்று எந்தக் காட்சியையும் இங்கே குறிப்பிட முடியவில்லை.

    தமிழ் சினிமாவை புணருத்தாரணம் செய்ய வந்த, எக்கச்சக்க திறமைகளை உள்ளுக்குள் சுமந்து கொண்டிருக்கிற கலைஞன் பாலா, தன் அடுத்த பரிமாணங்களை காட்டிடும் வகையில் அவரைக் கொண்டாட வேண்டிய தருணம் இது.

    ஈராமான கண்களுடன் பாலாவுக்கு 'ஹேட்ஸ் ஆப்'!
    மனதில் இசை 'பாரத்துடன்' இசைஞானிக்கு நன்றி!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X