twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுப்ரமண்யபுரம் - பட விமர்சனம்

    By Staff
    |

    Subramaniapuram movie still
    உள்ளூர் அரசியல் பிரமுகர் அவர். அவரது அண்ணன் மகளைத்தான் ஹீரோ காதலிக்கிறார். அரசியல் பிரமுகரைப் பார்க்க வரும் சாக்கில் காதலியைப் பார்க்கிறான் நாயகன்.

    இருவர் விழிகளும் சந்தித்துக் கொள்கின்றன. அரசியல் பிரமுகரின் கண்களையே ஏமாற்றிவிட்டு அந்த இருவர் உள்ளமும் புது உலகத்தில் சஞ்சரிக்க, பின்னணியில் இசைஞானியின் மயக்கும் குரல், சிறுபொன்மணி அசையும் அதில் சிரிக்கும் புது இசையும்.... என காதலை இன்னும் கவுரவப்படுத்துகிறது...

    அடடா... என்ன இனிமையான காட்சியமைப்பு! எண்பதுகளில் பாரதிராஜா அசத்திய காட்சிப் பதிவுகளை அதே பின்னணி இசையோடு பார்க்கும் போது மனதுக்குள் ஏற்படும் பரவசமே தனி.

    புதிய இயக்குநர் சசிகுமாருக்கு முதலில் பாராட்டுக்களைச் சொல்லிவிடவேண்டும்.

    வழக்கமான கதை, ஆனால் வித்தியாசமான பின்னணியோடு வந்திருக்கிற படம் சுப்பிரமணியபுரம்.

    எண்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. தெருவைப் பெருக்கும் பெல்பாட்டம், காதுகளை மறைக்கும் ஸ்டெப் கட்டிங், முகத்தைப் போர்த்தியிருக்கும் கருகரு தாடி, முறம் அகலத்துக்கு காலர் வைத்த கலர்கலர் சட்டை, டிசைன் லுங்கி.... என டிபிகல் காஸ்ட்யூமில் நான்கு வேலையற்ற இளைஞர்கள் அழகர் (ஜெய்), பரமர் (சசிகுமார்), காசி (கஞ்சா கருப்பு) மற்றும் டும்கான் எனும் பெயரில் வரும் ஊனமுற்ற இளைஞர் மாரி.

    இவர்களில் கடைசி இளைஞர் மட்டும் ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் கிடைத்த வேலையைச் செய்கிறார். மற்ற மூவரும் உள்ளூர் அரசியல் புள்ளி சமுத்திரக் கனியின் அடியாட்களாக (கிட்டத்தட்ட) காலம் தள்ளுகிறார்கள். சமுத்திரக் கனியின் அண்ணன் மகள் ஸ்வாதிக்கும் அழகருக்கும் காதல் அரும்புகிறது.

    உள்ளூர் அரசியல் மோதலில் சமுத்திரக் கனியும் அவரது அண்ணனும் எதிர் கோஷ்டியிடம் பதவியை இழக்கிறார்கள். இழந்த பதவியைப் பிடிக்க தங்களையே நம்பியிருக்கும் இளைஞர்களைப் பகடைக் காயாக்க முயல்கிறார் சமுத்திரக்கனி. அவரது பாச நடிப்பை உண்மையென நம்பும் அழகர், பரமர் மற்றும் காசி மூவரும் எதிர்கோஷ்டித் தலைவரை போட்டுத் தள்ளுகிறார்கள். காசியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அழகரும் பரமரும் போலீசில் சரணடைகிறார்கள், சமுத்திரக் கனி தங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில்.

    ஆனால் மீண்டும் பதவிக்கு வரும் சமுத்திரக் கனி, தனக்காக சிறைக்குப் போனவர்களைக் கைகழுவி விடுகிறார்.

    உண்மைப் புரிந்து கொதிக்கும் அழகரும், பரமரும் சிறையில் உள்ள தாதா ஒருவரின் துணையுடன் ஜாமீனில் வருகிறார்கள். தங்களுக்கு உதவிய தாதாவுக்காக மீண்டும் ஒருமுறை கத்தியெடுக்க, அதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகிப்போகிறது.

    சமுத்திரக் கனியைக் கொல்ல நேரம் பார்க்கிறார்கள் அழகரும் பரமரும். ஆனால் சமுத்திரக் கனியோ தன் அண்ணன் மகளுக்கும் அழகருக்கும் இடையிலான காதலையே பகடைக்காயாக வைத்து அழகரைக் கொன்று விடுகிறார் கொடுரமாய். அந்தக் கொலைக்கு அதைவிட படு கொடூரமாக பரமர் பழிவாங்குவதும், அந்தப் பரமரை அவன் நண்பன் காசியை வைத்தே எதிரிகள் காலி பண்ணுவதும்தான் மீதிக்கதை.

    கத்தியெடுத்தவனுக்கு அந்தக் கத்தியால்தான் சாவு என்ற பழைய கதைதான் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் முதல் படத்திலேயே அபாரமாக ஜெயித்துவிட்டார் இயக்குநர் பரமர்... ஸாரி சசிகுமார்!

    ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக எண்பதுகளின் பின்னணியைத் தத்ரூபமாகக் காட்ட (சுவர் விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், 5 பூ மார்க் பீடி, கடா மார்க் சாராயம், முரட்டுக்காளை திரைப்படம்...) இயக்குநர் எடுத்துக் கொண்ட சிரத்தையில், ஒரு நல்ல சினிமாவைத் தருவதில் அவருக்கிருக்கும் ஆர்வம் புரிகிறது.

    சென்னை -28-ல் பத்தோடு பதினொன்றாக வந்த ஜெய்க்கு இதில் நாயகன் வேடம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். இன்றைய இளம் ஹீரோக்கள் பந்தயத்தில் தாராளமாக இவருக்கும் இடம் தரலாம்.

    பரமராக வரும் சசிகுமார் அசத்தியிருக்கிறார். அந்த முரட்டுத்தனமான முகமும், உணர்ச்சியை மறைத்த அவரது பேச்சுமே அந்தப் பாத்திரத்துக்கு புதிய பரிமாணத்தைத் தருகிறது. நம்பிக்கை தரும் வரவு.

    கஞ்சா கருப்பும் கிட்டத்தட்ட ஒரு நாயகன்தான் இந்தப் படத்தில். அவரது நடிப்பில் தெரியும் பக்குவம் அவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்ல விஷயம்தான்.

    ஊனமுற்ற இளைஞராக வரும் மாரி அசத்துகிறார்.

    ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்கத் தெரிந்த ஒரு நாயகியை, அதிலும் முதல் படத்திலேயே அசத்தும் நடிகையைப் பார்க்க முடிகிறது. அருமையான தேர்வு. கிறங்க வைக்கும் பாவாடை தாவணியும், கவிதை பேசும் கண்களுமாக ஸ்வாதி முதல் படத்திலேயே டிஸ்டிங்ஷனில் தேறி விடுகிறார்.

    சினிமாத்தனமான வில்லனாக இல்லாமல், நிஜத்தைப் பிரதிபலிக்கும் சமுத்திரக் கனி சிறப்பான தேர்வு.

    அந்த சவுண்ட் சர்வீஸ் கடைக்காரர், சின்ன வீட்டில் மாட்டிக்கொண்டு சாக்கடை வழியாகத் தப்பியோடும் கோயில் தர்மகர்த்தா, அரசியல் பிரமுகரின் அண்ணனாக வரும் அரசு அலுவலர்... இவர்கள் எல்லோரையும் எங்கேயோ நிஜத்தில் சந்தித்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

    குறும்புத் தனமும், கிண்டலுமாக முதல் பாதி போகும் வேகம் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் படம் வழக்கமான பழிவாங்கல் டிராக்கில் சற்றே தடுமாறுவது நிஜம்.

    இசை: இளையராஜா என்றே போட்டிருக்கலாம். அந்தளவு ராஜாவின் பின்னணி இசையையும், பாடல்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    ரீமிக்ஸ் எனும் பெயரில் எந்த இசைக் கொலையும் நிகழ்த்தாமல், என்பதுதான் சந்தோஷமே! எண்பதுகளையும் ராஜாவின் இசையையும் பிரித்துப் பார்ப்பது முடிகிற காரியமா...

    மற்றபடி இசையமைப்பாளராக அவதாரமெடுத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தனைக் குறை சொல்ல முடியாது. மதுர... பாடலில் மண் மணக்கிறது. கண்கள் இரண்டா .. பாடல் இதயத்தை வருடிச் செல்கிறது.

    கதிரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம்.

    முதல் படம்... இழைத்து இழைத்து ஒரு அழகான தேர் வடித்திருக்கிறார் இயக்குநர். இந்தத் தேரின் ஊர்வலத்தில் சற்றே ரத்த வாடை அடிப்பது நிஜம்தான். தேரின் ஊர்வலத்துக்கு முன் தமிழன் கொடுக்கும் ரத்தப் படையலாக அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    ரத்தமும், வியர்வையும் பின்னிப் பிணைந்த கலாச்சாரம்தானே தமிழனுடையது.

    --

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X