For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யோகி - விமர்சனம்

  By Staff
  |

  Madhumitha
  நடிகர்கள்: அமீர், தேவராஜ், மதுமிதா, சினேகன்
  இசை: யுவன் ஷங்கர் ராஜா
  திரைக்கதை, வசனம்: அமீர்
  இயக்குநர்: சுப்பிரமணிய சிவா
  தயாரிப்பு: அமீரின் டீம்வொர்க் புரொடக்ஷன்ஸ்
  பிஆர்ஓ: விகே சுந்தர் - நிகில்

  யோகி ஒரு குப்பத்து ராஜா... ஆனால் புதிரான தாதா. எப்போதும் அழுத்தமான மவுனம், ஆளைக் கொல்லும் குரூரம், நெஞ்சுக்குள் சட்டென சுரக்கும் இரக்கம் என கலவையான உணர்வுகளின் வடிவம்.

  ஒரு நாள் வழக்கமாக 'வேட்டைக்குப்' போகும்போது போலீஸில் மாட்ட நேரிடுகிறது. அதிலிருநது தப்பிக்க வழியிலிருக்கும் ஒரு காரை எடுக்கிறான். அதைப் பார்த்துவிட்டு காருக்கு சொந்தக்காரப் பெண் பதறியடித்துக் கொண்டு வர, பின்னாலேயே வந்த போலீஸ் ஜீப்பில் அடிப்பட்டு கோமாவில் விழுகிறாள்.

  இது தெரியாமல் காரை ஒட்டிப் போகும் யோகி, ஓரிடத்தில் வண்டி நின்றுவிட இறங்கி ஓட முயற்சிக்கையில், காருக்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல்...

  திடுக்கிட்டு நிற்கும் யோகி, தன் மனப் போராட்டத்தை வென்று, அந்தக் குழந்தையை தன் குடிசைக்குக் கொண்டு போகிறான். ஆரம்பத்தில் அந்தக் குழந்தையை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் யோகி, பின்னர் அந்த தளிரின் மீது தனி பாசம் கொண்டு தாமே வளர்க்க முற்படுகிறான். அந்த பாசத்துக்கு காரணமாக யோகியின் ப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. அது மனித அவலத்தின் இன்னொரு பக்கம்.

  சில தினங்களில் குழந்தைக்கு சொந்தமான தாய், விபத்திலிருந்து பிழைத்து எழுந்து, குழந்தையைத் தேடுகிறாள். ஆனால் அந்தப் பெண்ணின் கணவனோ, குழந்தை கிடைத்தாலும் கொன்றுவிடத் துடிக்கிறான். காரணம் அந்தக் குழந்தை அவனுக்குப் பிறந்ததல்ல.

  குப்பத்தில் தனது நண்பர்களுக்குக் கூட தெரியாமல் குழந்தையை வளர்க்கிறான் யோகி. அந்தக் குழந்தையைக் கொல்லும் அஸைன்மெண்ட் கூட அவனது நண்பர்களிடமே வருகிறது. ஒரு கட்டத்தில் யோகியிடம் குழந்தையிருப்பது தெரிய வர, போலீஸ், நண்பர்கள் இருதரப்புமே யோகியை நெருக்குகிறது.

  இந்த நெருக்குதலிலிருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறான் யோகி என்பது கிளைமாக்ஸ்.

  யோகியாக வரும் அமீர் எடுத்த எடுப்பிலேயே டிஸ்டிங்ஷன் பெறுகிறார். அசத்தலான அறிமுகம், தேர்ந்த நடிப்பு.

  அழுகிற குழந்தையைச் சமாளிக்க ரஜினி போல, 'ஒரு கூடை சன்லைட்..' பாடி ஆடுவதாகட்டும், குழந்தைக்கு ஆபத்து விளைவிக்க முயலும் நண்பனை சுட்டு வீழ்த்தும் குரூரமாகட்டும்... பின்னிட்டார் மனிதர்.

  குழந்தையின் பசியைத் தணிக்க மதுமிதாவை பால் கொடுக்கச் சொல்லும் காட்சியில், ஒரு முரட்டு மனிதனின் இயல்பை அசத்தலாகப் பிரதிபலிக்கிறார். மனிதனின் உருவத்துக்கும் அவன் மனதிலிருக்கும் மனிதத் தன்மைக்கும் சம்பந்தமில்லை என்பதை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

  சண்டைக்காட்சிகள் மிரட்டலாக வரவேண்டும் என்பதற்காக சில லாஜிக் மீறல்கள் நடந்துள்ளன.

  மதுமிதாவை கதாநாயகி என்று சொல்ல முடியாது. யோகியின் வாழ்க்கையில் வந்துபோகும் ஒரு இயல்பான ஆந்திரப் பெண் வேடத்தில் மனதில் பதிகிறார். அவரது பாத்திரத்தில் நடிக்கும் துணிச்சல் இன்றைய பிற நாயகிகள் யாருக்காவது இருக்குமா தெரியவில்லை.

  அமீருக்கடுத்து படத்தில் மிரட்டியிருப்பவர் பத்திரிகையாளர் தேவராஜ். அமீரின் தந்தையாக வருகிறார். பிச்சைக்காரன் வேடத்தில் வந்து ஒருவரால் இத்தனை பயங்கர வில்லத்தனம் செய்ய முடியுமா? முடியும் முதல் படத்திலேயே என நிரூபித்துள்ள அவரை வாழ்த்தி வரவேற்போம்.

  வின்சென்ட் அசோகனின் வில்லத்தனம் எரிச்சலூட்டுகிறது.

  குழந்தையை கட்டெறும்பு கடிப்பதாகக் காட்டுவதும், பாம்பு சுற்றிப் படர்வதுமான காட்சிகளி்ல் இருக்கையில் உட்கார முடியாமல் நெளிய வேண்டியிருக்கிறது.

  இடைவேளைக்குப் பின் படம் நகர சிரமப்படுகிறது, வின்சென்ட் அசோகன் - ஸ்வாதி தொடர்பான சில காட்சிகளில்.

  ஒளிப்பதிவு படத்தின் உணர்வை சரியாக பிரதிபலிக்கிறது. பின்னணி இசை நெகிழ வைக்கிறது. ஆனால் பாடல்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை.

  சினேகன், சுவாதி, பொன்வண்ணன், திருநா என அனைவருமே உணர்ந்து செய்துள்ளார்கள். இரண்டே காட்சிகளில் வரும் கஞ்சா கருப்பு எடுபடவில்லை.

  அமீர் - சுப்பிரமணிய சிவா ஆகிய படைப்பாளிகளின் இந்த முயற்சியில், ஒரு நல்ல, இயல்பான படம் தரவேண்டும் என்ற நோக்கம் தெரிகிறது. தனிமனித விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, இம்மாதிரி முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதுதான் தரமான படைப்புகளுக்கு வழிவகுக்கும்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X