twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

    By Shankar
    |

    நடிப்பு: பிரஷாந்த், மீரா ஜாஸ்மின், வடிவேலு
    இசை: தமன்
    ஒளிப்பதிவு: ஷாஜி குமார்
    தயாரிப்பு: லஷ்மி சாந்தி மூவீஸ்
    இயக்கம்: தியாகராஜன்

    பிஆர்ஓ: மவுனம் ரவி

    எண்பதுகளில் தியாகராஜன் நடித்து இளையராஜா இசையால் 'க்ளாஸிக்' என்ற அந்தஸ்தைப் பெற்ற மலையூர் மம்பட்டியான் படம், இப்போது பிரஷாந்த் நடிப்பில் மம்பட்டியானாக மறு வடிவம் பெற்று வந்துள்ளது.

    மலையூர் கிராமத்தில் நேர்மையான விவசாய கூலி விஜயகுமார். ஊர்ப் பண்ணையார் கோட்டா சீனிவாசராவ் நிலத்தில் கிடைக்கும் புதையலை அரசாங்கத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என அவர் பிடிவாதம் காட்ட, கோட்டாவின் ஆட்கள் அவரையும் மனைவியையும் கொன்றுவிடுகிறார்கள். இதில் பொங்கியெழும் மகன் மம்பட்டியான் பிரஷாந்த், ஊர்த் திருவிழாவில் கோட்டாவையும் அவரது ஆட்கள் ஏழு பேரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார்.

    பண்ணையாரால் வஞ்சிக்கப்பட்ட சிலரும் அவருடன் சேர்ந்து கொள்ள, காட்டுக்குள் தங்கியபடி, அந்த வழியாக வரும் பெரும்பணக்காரர்களைக் கொள்ளையடித்து, ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். போலீஸ் துரத்துகிறது. ஆனால் மம்பட்டியான் நிழலைக் கூட தொட முடியாமல் தோற்றுக் கொண்டே இருக்கிறது. அப்போது புதிதாக மம்பட்டியானைப் பிடிக்க வருகிறார் போலீசார் அதிகாரி பிரகாஷ் ராஜ்.

    இடையில், பணக்கார கோஷ்டியொன்று காட்டுவழி வருவதாக கேள்விப்பட்டு, அவர்களைக் கொள்ளையடிக்க மம்பட்டியான் குழு முயல்கிறது. ஆனால் வந்தது கல்யாண கோஷ்டி என்பதும், அவர்கள் மணப்பெண்ணை (மீரா ஜாஸ்மின்) மட்டும் அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டதையும் அறிந்து, அந்தப் பெண்ணிடமே அனைத்து நகைகளையும் கொடுத்து தன் தம்பியை துணைக்கனுப்பி வைக்கிறார் மம்பட்டியான். ஆனால் அடுத்த நாள் திருமணம் நடக்காததால் மம்பட்டியானை நினைத்தபடி மலையூரிலேயே தங்கிவிடுகிறாள் அந்தப் பெண். ஊருக்கு அளக்கும் படியில் ஒரு படி அவளுக்கும் தரச் சொல்கிறார் மம்பட்டியான்.

    போலீஸ் துரத்தல் தொடர்கிறது. மம்பட்டியானின் ஓட்டமும் தொடர்கிறது. ஆனால் கடைசி வரை போலீசின் கையில் சிக்காத மம்பட்டியான், இறுதியில் என்னவாகிறார்... அவரை நம்பி வந்த பெண்ணின் கதி என்ன என்பது க்ளைமாக்ஸ்.

    ஏற்கெனவே பார்த்த கதைதான் என்றாலும், பிரஷாந்த் மற்றும் காமிராமேன் ஷாஜி குமார் மூலம் புதிய வர்ணம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன். காட்சிகளில் பிரமாண்டம், நேர்த்தியான படமாக்கம் என ஒரு மரியாதையை வரவைத்திருப்பது தியாகராஜனின் இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி.

    குறிப்பாக படத்துக்காக தேர்வு செய்த லொகேஷன்கள் அற்புதம். சீறிவிழும் அருவிகள், பச்சைப் பசேல் மலைத் தொடர்கள், காலைத் தழுவி ஓடும் ஓடைகள், இயல்பு மாறாத மலைக் கிராமங்கள் என மனதை ஈர்க்கிறது.

    ஏற்ற வேடத்துக்கு நூறு சதவீதம் நேர்மையாய் பாடுபடும் நடிகர்களுள் ஒருவர் பிரஷாந்த். இந்தப் படத்தில் இன்னும் பத்து சதவீதம் கூடுதல் உழைப்பைத் தந்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது பாடி லாங்குவேஜை இன்றைக்கு எதற்கெடுத்தாலும் பஞ்ச் டயலாக் விட்டுக் கொண்டிருக்கும் புதிய நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அத்தனை பர்ஃபெக்ஷன்!

    கண்ணாத்தாளாக வரும் மீரா ஜாஸ்மின், முந்தைய படங்களை விட அழகாக இருக்கிறார். திருமணம் செய்து கொள்ள மறுக்கும் மணமகனை வெளுக்கும் இடத்தில் மட்டும் அவருக்கு நடிக்க வாய்ப்பு. மற்ற காட்சிகளில் 'நடக்க' மட்டுமே வாய்ப்பு.

    ஒரு சின்ன இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வைகைப் புயல்...

    ஒரிஜினல் படத்தில் கவுண்டமணி செய்த அதே சின்ன பண்ணையார் வேடம். காட்சிகளில் கூட பெரிதாக மாற்றமில்லை. ஆனாலும் வடிவேலு வரும்போதை முகம் மலர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ரசிகர்கள் (காட்சிகளில் பெரிதாக காமெடி இல்லாவிட்டாலும்!). குறிப்பாக கோபு பாபு என இரு நாய்களை அவர் மம்பட்டியானிடம் இழக்கும் இடத்திலும், பிரகாஷ் ராஜிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் காட்சியிலும் சிரிப்புக்கு உத்தரவாதம்!

    மம்பட்டியானைப் பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ். இந்த வேடமெல்லாம் அவருக்கு ஒன்றுமே இல்லை... அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார்.

    சொர்ணாவாக வரும் முமைத் கான் சொன்ன வேலையைச் செய்துவிட்டு செத்துப்போகிறார்.

    என்னதான் படம் விறுவிறுப்பாகப் போனாலும், ஒரிஜினல் படத்தோடு ஒப்பீடு செய்வதை மட்டும் தவிர்க்க முடியவில்லை. காரணம் மலையூர் மம்பட்டியான் படத்தில் எந்த பிரமாண்டமும் இல்லை. தொழில் நுட்ப ரீதியாகக் கூட அதில் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ஆனால் எளிய காட்சிகள், மண்ணோடு இயைந்த மனிதர்கள், இதயத்தை இளக வைத்த இசை என்று அந்தப் படம் தந்த உணர்வை, இந்த புதிய மம்பட்டியானால் தரமுடியவில்லை என்ற உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும்.

    ரீமிக்ஸ் என்ற பெயரில் இளையராஜாவின் 'காட்டு வழி', 'சின்னப் பொண்ணு' ஆகிய அற்புதமான இரண்டு பாடல்களை வீணடித்திருப்பதை மன்னிக்கவே முடியாது. இதைவிட அந்த ஒரிஜினல் பாடல்களை அப்படியே பயன்படுத்தியிருக்கலாம்!

    தமனின் பின்னணி இசை ஓகே. ஷாஜி குமார் காமிரா இயக்குநருக்கு வலக்கரம் மாதிரி. கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்!

    பழைய மம்பட்டியான் படம் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு, பிரஷாந்தின் இந்த மம்பட்டியான் ஒரு விஷுவல் ஆக்ஷன் விருந்தாக இருக்கும்!

    English summary
    Mambattiyan is Prasanth’s remake of his father Thiagarajan’s classic Malayur Mambattiyan released in 80's, is a typical Robinhood style movie, but a complete entertainer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X