For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அறை எண் 305ல் கடவுள்- பட விமர்சனம்

  By Staff
  |

  Arai En 305il Kadavul movie still
  நடிப்பு: பிரகாஷ்ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு, ராஜேஷ், இளவரசு
  இசை: வித்யாசாகர்
  இயக்கம்: சிம்புதேவன்
  தயாரிப்பு: ஷங்கர்

  ஒருவேளை தாங்க முடியாத கஷ்டத்தில் எழும் மனிதக் குரல் கடவுளின் காதில் விழுந்தால்...

  ஒருவேளை அந்தக் கடவுள் பூமிக்கே வந்துவிட்டால்...

  ஒருவேளை அந்தக் கடவுள், தன் கடவுள் தன்மையை இழந்து மனிதனைப் போலவே திருவல்லிக்கேணி மேன்ஷனில் பத்துக்குப் பத்து இருட்டறையில் கஷ்டப்பட நேர்ந்தால்....

  அடடா... 'ஒருவேளை' என்ற இந்த வார்த்தைதான் ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது பாருங்கள்!

  இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இயக்குநர் சிம்புதேவன் விளையாடி இருக்கும் 'சிலம்பாட்டம்தான்' அறை எண் 305-ல் கடவுள். இந்த சிலம்பத்தில் வேகம் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிற விவேகம் உள்ளது.

  கடவுள், அறை எண் 305-க்கு வந்த கதை:

  ராசுவும் (சந்தானம்), மொக்கையும் (கஞ்சா கருப்பு) அறை எண் 305ல் இரண்டு மாத வாடகை மற்றும் மெஸ் பாக்கியுடன் காலம் தள்ளி வரும் வேலையில்லா இளைஞர்கள். ஒருபக்கம் காதலிக்கு வாடகை ரோஜா கொடுக்க முயற்சித்தபடியே, மறுபக்கம் சீரியஸாக தனது பி.பி.ஏ. படிப்புக்கேற்ற வேலை தேடுகிறான் ராசு. மொக்கையோ திருட்டு டிவிடி விற்றுக்கொண்டே தனது பத்தாம் வகுப்பு தகுதிக்கேற்ற சின்ன வேலையைத் தேடுகிறான்.

  ம்ஹூம்... பரந்து விரிந்து இந்த ஐ.டி. நகரில்.. அதாங்க சென்னை, இவர்களுக்கு ஒரு வேலையும் கிடைக்காமல் போகிறது. தப்பித் தவறி 'பீட்ஸா ஹட்'டில் கிடைத்த ஒரு வேலையையும் காதலியைப் பார்த்த ஆர்வக் கோளாறில் பறிகொடுத்துவிட்டு நிற்கிறான் ராசு.

  ஒருநாள் மேன்சன் மேனேஜர் சொட்டை (எம்.எஸ்.பாஸ்கர்) வாடகை பாக்கிக்காக தாறுமாறாகப் பேசிவிட, சோகத்தில் பீர் அடித்துவிட்டு மொட்டை மாடிக்குப் போய் கடவுளைத் திட்டுகிறார்கள் ராசும் மொக்கையும்.

  அதைத் தாங்க முடியாத கடவுள் (பிரகாஷ்ராஜ்) நேராக திருவல்லிக்கேணி மேன்சன் மாடிக்கே வந்து ராசு, மொக்கை எதிரில் நிற்கிறார், வெள்ளை வெளேர் உடையில்! முதலில் நம்ப முடியாமல் தடுமாறும் அவர்களுக்கு 'பாபா' ரஜினி பாணியில் அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டுகிறார், தன்னிடம் உள்ள 'கேலக்ஸி பாக்ஸ்' உதவியுடன். இதில்தான் கடவுளின் அத்தனை சக்தியும் அடங்கியுள்ளதாக விளக்குகிறார். பின்னர் அவர்களுடனே தங்கியிருந்து அவர்கள் படும் கஷ்டங்கள் எதனால் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, அதிலிருந்து அவர்களாகவே விடுபட உதவுவதாகக் கூறுகிறார்.

  இதை எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறார் அந்த மேன்சன்வாசியான இளவரசு. இருந்தாலும் ரகசியத்தைக் காப்பதாக உறுதி தருகிறார்.

  மொக்கைக்கும் ராசுவுக்கும் கடவுள் எவ்வளவோ போதனைகளைத் தருகிறார். நேர் வழியில் முன்னேற எடுத்துக்காட்டுகளுடன் சொல்லித் தருகிறார். ஆனால் மனிதனுக்கு திருட்டு மாங்காய்தானே ருசிக்கிறது! கடவுள் தன் பணி முடிந்து தன் உலகுக்குத் திரும்பும் நாளன்று அவரது கேலக்சி பவர் பாக்ஸை களவாடி விடுகின்றனர் ராசுவும் மொக்கையும். இப்போது அவர்கள் கடவுளாகிவிட, கடவுள் சாதாரண மனிதனாக அறை எண் 305-ல் தங்கிவிட நேர்கிறது.

  இருந்தாலும், இதற்காக வருத்தப்படாமல் அந்த அனுபவத்தையும் தாங்கத் தயாராகிறார் சக்தியைப் பறிகொடுத்த 'கடவுள்'.

  நாயர் கடையில் டீ ஆத்தி, கடலை வண்டி தள்ளி, கக்கூஸ் கழுவி, கடைசியில் ஜோதிர்மயி மெஸ்ஸில் வேலையாளாகச் சேர்ந்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னுக்கு வருகிறார் கடவுள். இடையில் அவரைக் கடவுள் என்று அறியாத ஜோதிர்மயி, அவர்மீது காதல்வயப்பட்டு ஒரு டூயட்டும் பாடுகிறார்.

  புதிய கடவுள்களான மொக்கையும் ராசுவும் தங்கள் புதிய வாழ்க்கையை நிலாவில் பீர் குடித்துக்கொண்டே பெண்களுடன் டிஸ்கொத்தே ஆடியபடி என்ஜாய் பண்ணுகிறார்கள்! நிறைய பணத்துடன் சொந்த பந்தங்களைப் பார்க்கப் போனால் அங்கே அவர்கள் எதிர்பார்த்த மரியாதையும் நிம்மதியும் கிடைக்கவில்லை.

  ஆசைக் காதலியும் கூட குறுக்குவழியில் வந்த பணத்தை மறுத்துவிட, உழைப்பின் அருமை புரிகிறது. தங்களிடம் உள்ள கேலக்ஸி பவர் பாக்ஸை குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறார்கள். ஆனால் முழுசாகத் திருந்துவதற்குள் தங்கள் பழைய எதிரியிடம் மாட்டிக்கொள்ள, கடவுள் வந்து ரவுடிகளுடன் சண்டைபோட்டுக் காப்பாற்றுகிறார்.

  அந்த நேரம் பார்த்து குப்பை அள்ளும் ஊழியரான இளவரசுவிடம் கேலக்சி பாக்ஸ் கிடைக்கிறது. அவரும் இரண்டு நாள் கடவுள் வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, வேண்டாம்டா சாமி என்று 'பவரை' கடவுளிடமே திரும்ப ஒப்படைத்துவிடுகிறார்.

  இதையடுத்து மனிதப் பாடு போதும்பா என்று தன் உலகம் திரும்புகிறார் கடவுள்.

  ஆனால் மறுபடியும் வேறு இரு வாலிபர்களின் வேதனைக் குரல் கேட்டு பூமிக்கு வருகிறார். ஆனால் இம்முறை தன் பவர் பாக்ஸை ஸேஃப்டி லாக்கர் போட்டு பத்திரமாகக் கொண்டு வருகிறார்....என முடிகிறது படம்.

  சந்தேகமில்லாமல் ஒரு சுவாரஸ்மான கதையைத்தான் கையிலெடுத்திருக்கிறார் சிம்புதேவன். ஆனால் அதை இன்னும்கூட விறுவிறு சம்பவங்களுடன் கொண்டு செல்லாமல் விட்டது படத்தின் பலவீனம்.

  அதேபோல நாத்திகரான ராஜேஷின் கேள்விகளுக்கு பிரகாஷ்ராஜ் தரும் பதில்கள் ஒரு புத்திசாலித்தனமான மழுப்பலாகத் தெரிகிறதே தவிர நெத்தியடியாக இல்லை.

  படத்தின் பல காட்சிகளில் ஜிம் கேரியின் புரூஸ் அல்மைட்டி பாதிப்பு தெரிகிறது.

  கஞ்சா கருப்பும் சந்தானமும் கதையின் நாயகர்களாக இருந்தாலும், மனதைக் கொள்ளை கொள்பவர்கள் கடவுள் பிரகாஷ்ராஜூம், அவருக்கு துணையாக நிற்கிற இளவரசுவும்தான்.

  மதுமிதா, ஜோதிர்மயி இருவருக்கும் பொருத்தமான பாத்திரம் என்று சொல்ல முடியாது.

  ராஜேஷ், தலைவாசல் விஜய், வி.எஸ்.ராகவன், பெரியார் தாசன், வி.எம்.சி. அனிபா என நிறைய பாத்திரங்கள். அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் நெஞ்சில் பதியத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை அறிமுகப்படுத்த இயக்குநர் கையாண்டிருக்கும் உத்தி ஆரம்பத்தில் புதுமையாக இருந்தாலும் போகப்போக போர்.

  வித்யாசாகரின் இசை இதம். ஒளிப்பதிவு மிகப் பிரமாதம்.

  இம்சை அரசனில் கோலா நிறுவனங்களின் ஆதிக்கத்தை நைசாக வாரியிருந்த சிம்புதேவன், இந்தப்படத்தில் 'கொள்ளையாசிஸ்' எனும் பெயரில் ஐ.டி. நிறுவனங்களை ஒருபிடிபிடித்திருக்கிறார்.

  எல்லா காட்சியிலும் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சார நெடி இருந்துகொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

  மற்றபடி, இந்த கோடையில் குடும்பத்துடன் பார்த்துமகிழ விரசமில்லாத இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்ததற்காக சிம்புதேவனைப் பாராட்டலாம்!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X