For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  24 - விமர்சனம்

  By Shankar
  |

  Rating:
  3.0/5
  Star Cast: சூர்யா, சமந்தா, சரண்யா
  Director: விக்ரம் குமார்

  எஸ் ஷங்கர்

  நடிகர்கள்: சூர்யா, சமந்தா, சரண்யா, நித்யா மேனன்

  ஒளிப்பதிவு: திரு

  இசை: ஏ ஆர் ரஹ்மான்

  தயாரிப்பு: சூர்யா

  இயக்கம்: விக்ரம் குமார்

  டைம் மெஷின்... சினிமா உலகில் எவர்கிரீன் களமிது. ஹாலிவுட்டில் அடிக்கடி இந்தக் களத்தில் படங்கள் வரும். தமிழில் அரிதாக எப்போதாக ஒன்றிரண்டு.

  வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட ஈடுபாடு இருந்தால் மட்டும்தான் '24' மாதிரி கதைகளைப் படங்களாக்க முடியும். அந்த வகையில் ஹீரோ சூர்யாவைவிட தயாரிப்பாளர் சூர்யா பாராட்டுக்குரியவர்.

  24 Review

  படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன்... குழந்தைகளுக்கான சேனல்களில் டோரிமான் என்று ஒரு தொடர் கார்ட்டூன் சீரியல் ஒளிபரப்பாவதைப் பார்த்திருக்கிறீர்களா... அதை நினைவூட்டிக் கொண்டால் இந்தக் கதையோடு எளிதில் உங்களால் ஒன்ற முடியும்!

  ஆதி அந்த மில்லாத காலவெளியில் தொடங்கும் பேன்டசி டைப் கதை மாதிரி ஆரம்பிக்கிறது படம்.

  விஞ்ஞானி சூர்யா ஒரு மகா புத்திசாலி. டைம் மெஷின் வாட்ச் ஒன்றை பெரும்பாடுபட்டுக் கண்டுபிடிக்க, அதை அபகரிக்க அடியாட்களுடன் வருகிறார் அவரது உடன் பிறந்த அண்ணன் இன்னொரு சூர்யா. கொடூர மனம் படைத்த இந்த அண்ணன் தம்பி மனைவியைக் கொன்று, தம்பியையும் அந்த கடிகாரத்துக்காக கொல்கிறான். குழந்தையையும் அந்த கடிகாரத்தையும் ரயிலில் பயணிக்கும் சரண்யாவிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறக்கிறார் விஞ்ஞானி சூர்யா. குண்டு வெடிக்கப் போகிறது என நினைத்து அதே ரயிலிலிருந்து குதிக்கும் வில்லன் சூர்யா, அடிபட்டு கோமாவில் மூழ்கிவிடுகிறார்.

  24 Review

  26 ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தை வளர்ந்து இளம் சூர்யாவாகிறார். விஞ்ஞானி உருவாக்கிய கடிகாரம், அந்தக் கடிகாரத்துக்கான சாவி எல்லாம் தற்செயலாக இளம் சூர்யாவிடம் வந்து சேர்கிறது. ஒரு நாள் கடிகாரத்தைத் திறந்து திருக, அது காலத்தை முன்னுக்கும் பின்னுக்குமாக நகர்த்தும் அற்புத டைம் மெஷின் என்பதை உணர்கிறார் சூர்யா. இதே வேளையில், கோமாவிலிருந்த சூர்யாவுக்கும் உணர்வு வருகிறது.

  இந்த டைம் மெஷின் வாட்சை உருவாக்கி, தான் கோமாவில் மூழ்கிய 26 ஆண்டைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்குகிறார் வில்லன் சூர்யா. அது தோல்வியில் முடிய, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வாட்சைத் தேடும் முயற்சியை ஆரம்பிக்கிறார்கள்.

  24 Review

  வாட்ச் அவருக்குக் கிடைத்ததா... இளம் சூர்யா தன் தந்தை விஞ்ஞானி சூர்யாவைக் கொன்ற வில்லன் சூர்யாவைக் கண்டுபிடிக்கிறாரா? அந்த டைம்மெஷின் எப்படி உதவுகிறது என்பதெல்லாம் விறுவிறு இரண்டாம் பாகம்.

  இந்த மாதிரி டைம் மெஷின் சமாச்சாரக் கதைகளில் சர்வசாதாரணமாக குழப்பங்கள் வரும். காட்சிகள் பிசகும். ஆனால் விக்ரம் குமாரின் தெளிவான திரைக்கதை குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும்படி படத்தை உருவாக்கியுள்ளது.

  26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாவி சூர்யாவின் கைக்குக் கிடைக்கும் விதம், கொஞ்சம் விட்டலாச்சாரியா ரகம் என்றாலும், வேறு வழியில்லை அந்த முடிச்சை அவிழ்க்க.

  நேரத்தை உறைய வைத்து மழையை அந்தரத்தில் நிறுத்துவது, கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் புகுந்து மேட்ச் முடிவை மாற்றுவது, காதலியைக் குழப்புவது... என சுவாரஸ்யக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

  படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சூர்யாவின் அபார உழைப்பு. அதுவும் அந்த வில்லன் சூர்யா.. இதுவரை வந்த சூர்யா பாத்திரங்களிலேயே அல்டிமேட். வில்லத்தனத்தின் கொடூரத்தை அப்படிக் காட்டியிருக்கிறார். ஆனால் ஏன் இத்தனை விரோதம்?

  விஞ்ஞானி சூர்யா அந்த கடைசி காட்சியில் துப்பாக்கியின் இலக்கைத் திருப்பி வைப்பதில் ஸ்கோர் செய்கிறார்.

  24 Review

  இளம் சூர்யா 'வாட்ச் மெக்கானிக்குக்கு இதெல்லாம் சாதாரணங்க..' என்ற வசனத்தை எத்தனை முறை உச்சரிக்கிறார் என்று போட்டியே வைக்கலாம். காதல், ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் கூட சுவாரஸ்யம் இருந்திருக்கலாம்.

  நித்யா மேனன் சில காட்சிகளில் விஞ்ஞானியின் மனைவியாக வந்துபோகிறார்.

  இளம் சூர்யாவின் காதலியாக வரும் சமந்தா, கோபால சமுத்திரம் கிராமத்துக் காட்சியில் மட்டும் ஸ்கோர் பண்ணுகிறார்.

  அம்மாவாக வரும் சரண்யா, இளம் சூர்யா தான் யாரென்பதை கண்டு கொள்ளும் காட்சியில் அழ வைக்கிறார்.

  இந்தப் படத்தின் அதிமுக்கிய பாத்திரம் ஒளிப்பதிவு. கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ. அந்த லைட்டிங்கும், காட்சிப் பதிவும் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காதது. பாராட்டுக்கள் திரு.

  இன்னொரு ஹீரோவாக இருந்திருக்க வேண்டிய ஏ ஆர் ரஹ்மான், எந்த வகையில் சோபிக்கவில்லை. பாடல்கள் எதுவும் கேட்கும்படியில்லை.

  2.40 மணி நேரம் படம் ஓடுகிறது. காதல் காட்சிகளில் சிலவற்றுக்குக் கத்தரி போட்டிருக்கலாம். ஆனால் இந்த கோடையில் குழந்தைகளோடு தைரியமாகப் பார்க்கப் போகலாம் என்பது ஒரு ஆறுதல்.

  English summary
  24 is made on a different story line and the director's smart script and Surya's excellent performance make to watch the movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X