For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யாரடி நீ மோகினி-பட விமர்சனம்

  By Staff
  |

  Dhanusha with Nayanatara
  மீண்டும் ஒருமுறை செல்வராகவனின் கதை வென்றுள்ளது. அனைத்து வகுப்பினரும் பார்த்து ரசிக்கும்படியான அழகான ஒரு கதையை படமாகக் கொடுத்துள்ளார் செல்வராகவன்- இயக்குநர் ஜவஹர் மூலம்.

  கோடை விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க விரும்புபவர்களுக்கு யாரடி நீ மோகினி ஒரு இதமான இனிய அனுபவம்.

  தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய அடவரி மடலுகு அர்த்தலே வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. செல்வராகவனின் கதையை தமிழுக்கேற்றபடி அருமையாகக் கொடுத்துள்ளார் புதுமுக இயக்குநர் ஜவஹர்.

  இதுதான் கதை:

  கட்டுப்பாடான பள்ளி ஆசிரியரின் (ரகுவரன்) பொறுப்பற்ற மகன்தான் வாசு (தனுஷ்). ஒரு நாள் கீர்த்தியை (நயனதாரா) சந்திக்கிறார் வாசு. சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கான இன்டர்வியூவுக்குப் போன இடத்தில் வாசுவை இன்டர்வியூ செய்கிறார் கீர்த்தி.

  கீர்த்தியின் அழகும், அறிவும் வாசுவைக் கவர்ந்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக அதே நிறுவனத்தில் அவருக்கு வேலையும் கிடைத்து விடுகிறது. கீர்த்திக்குக் கீழ் வேலை பார்க்கும் வாய்ப்பு வாசுவுக்கு.

  புராஜெக்ட் விஷயமாக ஆஸ்திரேலியா செல்ல நேரிடுகிறது. அந்த பயணத்தின்போது தான் கீர்த்தியுடன் மிகவும் நெருங்கி விட்டதாக உணர்கிறார் வாசு. இதையடுத்து தான் அவர் மீது கொண்டுள்ள காதலைச் சொல்ல இதுதான் சரியான நேரம் என முடிவு செய்கிறார்.

  ஆனால் அவருக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாகி விட்டதும், விரைவில் கல்யாணம் நடக்கவிருப்பதும் தெரிய வந்து அதிர்கிறார்.

  உடைந்த மனதுடன், அப்செட் ஆன வாசுவை, அவருடைய தந்தை ஆறுதல்படுத்துகிறார். கீர்த்தியை சந்தித்து தனது மகனின் எண்ணத்தையும், நிலையையும் விளக்குகிறார். ஆனால் கீர்த்தியோ, ரகுவரனை அவமானப்படுத்தி விடுகிறார்.

  இதனால் வாசுவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் வாசுவை, தனது கல்யாணத்திற்காக ஊருக்கு அழைக்கிறார் நண்பர் கார்த்திக். வாசுவும் ஊருக்குப் போகிறார். அங்கு போன பின்னர்தான் தெரிகிறது, கார்த்திக்கின் மனைவியாக வரப் போவது கீர்த்தி என்று.

  போன இடத்தில் வாசுவின் தந்தை இறந்த செய்தியை அறிகிறார் கீர்த்தி. வருத்தப்படுகிறார். வாசுவிடம் தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது, கார்த்திக் - கீர்த்தி கல்யாணம் நடக்கிறது, வாசு என்ன ஆகிறார் என்பதுதான் மீதிக் கதை.

  முதல் பாதிக் கதை நகரத்தில் நகருகிறது. காமெடியும், கலாட்டாவுமாக கதை போகிறது. தந்தைக்கும், மகனுக்குமான பாச உறவை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். சில நேரங்களில் 7ஜி ரெயின்போ காலனியைப் பார்ப்பது போல உள்ளது.

  மறைந்த ரகுவரன் நடிப்பில் வழக்கம் போல கலக்கியிருக்கிறார். அவரது காட்சிகளைப் பார்க்கும்போது சே, எப்படிப்பட்ட நடிகர், அதற்குள் இறந்து விட்டாரே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  தனுஷுக்கும், நயனாதாராவுக்கும் ஜோடிப் பொருத்தம் அமோகம். படு பாந்தமாக பொருந்தியிருக்கிறார்கள் கேரக்டரில். 'கெமிஸ்ட்ரி' டெஸ்ட்டில் பாஸ் ஆகியுள்ளனர்.

  தனுஷுக்கேற்ற கதை. அடுத்த வீட்டுப் பையன் போன்ற முகம் வேறு தனுஷுக்கு, சொல்லவா வேண்டும், அல்வாவை அள்ளிச் சாப்பிடுவது போல நடித்திருக்கிறார்.

  கோபம், விரக்தி, ஜாலி, கலாய்ப்பு என சகலகலைகளிலும் கலக்கியிருக்கிறார்.

  நயனதாரா படு அழகாக இருக்கிறார். தனது கேரக்டருக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அழகாக நடித்திருக்கிறார்.

  நயனதாராவின் சகோதரி ஆக வரும் சரண்யாவும் கவருகிறார் - நடிப்பிலும், அழகிலும். கருணாஸின் காமெடி சிரிக்க வைக்கிறது.

  படத்திற்குப் பெரிய பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. பாடலிலும், பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார் இளைய இசைஞானி. குறிப்பாக எங்கேயோ பார்த்த, ஓ பேபி ஆகிய பாடல்களில் அசத்தியிருக்கிறார்.

  சித்தார்த்தின் கேமரா இன்னொரு பிளஸ்.

  இரண்டாவது பாதியில் சில காட்சிகள் தேவையற்றதாக தோன்றுகிறது. கிளைமாக்ஸிலும் சற்று குழப்பம் தெரிகிறது. இதுதான் படத்தின் குறைகள். இதையும் சரி செய்திருந்தால் மோகினி இன்னும் பயமுறுத்தியிருப்பாள்.

  இந்த மோகினி - ஒரு அழகிய தேவதை.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X