For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யுவன் யுவதி - சினிமா விமர்சனம்

  By Shankar
  |

  நடிப்பு: பரத், சந்தானம், ரீமா கல்லிங்கல், சம்பத்

  இசை: விஜய் ஆன்டனி

  ஒளிப்பதிவு: கோவி ஜெகதீஸ்வரன்

  கதை வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்

  இயக்கம்: ஜிஎன்ஆர் குமரவேலன்

  தயாரிப்பு: பைஜா

  பிஆர்ஓ: மவுனம் ரவி

  இந்தியாவே வேண்டாம், எப்படியாவது அமெரிக்கா போய் செட்டிலாகிவிட வேண்டும் என்பது பரத்தின் கனவு. ஆனால் அவரது கோடீஸ்வர கிராமத்து அப்பா சம்பத்தோ உள்ளூர் ஜட்ஜ் மகளுடன் திருமணத்துக்கு நாள் குறித்துவிடுகிறார்.

  அமெரிக்க விசா பெறுவதற்காக தூதரக வாசலில் காத்திருக்கும்போது ரீமா கல்லிங்காலை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பில் முட்டிக் கொள்கிறார்கள். அந்த மோதல், அவர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தொடர்கிறது. அதுவே பரத்துக்குள் காதலாக உருவெடுக்கிறது. பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்ட ரீமாவுக்கு ஒருகட்டத்தில் பரத் உதவ, அப்போதுதான் ரீமா பரத்துடன் நட்பாகிறார்.

  ரீமா மீதான தன் காதலைச் சொல்லிவிட பரத் முயலும்போதுதான், ரீமா விசா பெற்றதே அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகத்தான் என்ற உண்மை தெரிகிறது.

  அப்பா பார்த்த பெண்ணை பரத் கட்டினாரா? அமெரிக்க மாப்பிள்ளையை ரீமா மணம் முடித்தாரா? என்பதெல்லாம் இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள்.

  ரொம்ப சிம்பிளான காதல் கதை. அதன் பெரும்பகுதியை சீஷெல்ஸ் தீவின் அழகிய லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் நச்சென்று சொல்லத் தவறியிருக்கிறார்கள்.

  படத்தின் மிகப்பெரிய ஆறுதல் சந்தானம். பின்னி பெடலெடுத்துவிட்டார் மனிதர். அவர் தோன்றும் காட்சிகளில் அப்படியொரு அதிர்வெடி சிரிப்பு. ஆனால் சீஷெல்ஸில் அந்த நீக்ரோக்களைப் பார்த்து அவர் பேசும் வசனம் கொஞ்சம் ஓவர்தான். "மச்சான் போதைல பாத்ரூம்னு நெனச்சி ப்ரிஜ்ஜுக்குள்ள ஒண்ணுக்குப் போயிட்டேன்," எனும் போது அக்மார்க் குடிகாரன் தோற்றான்!

  பரத் ரொமான்டிக்காக நடிக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பாஸ்போர்ட்டுக்காக வரும் ரீமாவை வேண்டுமென்றே அவர் ஈசிஆரில் இழுத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

  ஆனால் பிள்ளைப் பாசத்தில் நல்ல விஷயங்களைச் செய்யும் தந்தையுடன் பரத் முறைத்துக் கொண்டு நிற்கும் காட்சிகளில் பரத் மீது எரிச்சல்தான் வருகிறது.

  கோதுமை நிற அழகி ரீமா கல்லிங்கால் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளார்.

  ஒரேயொரு காட்சியில் வரும் சத்யன் கலகலக்க வைக்கிறார்.

  எந்த வேடமென்றாலும் அப்படியே 100 சதவீதம் பொருந்திப் போகிறார் சம்பத். அந்த கிராமத்து தாதா வேடத்தை இவரைவிட சிறப்பாக செய்ய முடியாது.

  கோவி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், சீஷெல்ஸுக்கே போய் வந்த உணர்வு. அதேபோல, உசிலம்பட்டி என படத்தில் காட்டப்படும் இடங்களும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு.

  விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி பாடல்கள் கேட்க வைக்கின்றன. வசனங்களில் எஸ் ராமகிருஷ்ணனை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக கிராமத்தில் மகனிடம் சம்பத் பேசும் காட்சிகள்.

  படத்தின் பின்பாதியில் நிறைய சம்பவங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றன. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது கூட புதுப்புது பாத்திரங்கள். அதேபோல க்ளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது. இதைத் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்கும் யுவன் யுவதி!

  English summary
  Yuvan Yuvathi is a romantic film starring Bharath - Reeman Kallingal in lead roles. It is an enjoyable love story shot in the beautiful locations of Seychelles island.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X