twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையன்-பட விமர்சனம்

    By Staff
    |

    Malayan
    நடிப்பு: கரண், ஷம்மு,உதயதாரா, சரத்பாபு, கஞ்சா கருப்பு, மயில்சாமி.
    இசை: தினா.
    தயாரிப்பு: சி.பாலசுப்பிரமணியன், பி.கே.ரகுராம்.
    இயக்கம்: எம்.பி.கோபி.

    சரக்கே இல்லாமல் சவுண்ட் விடுவதில் தமிழ் சினிமாக்காரர்கள் கில்லாடிகள். "இந்தப் படம் இப்படியாக்கும்... அப்படியாக்கும்... நிஜக் கதையாக்கும்' என சென்னையிலிருந்து சிவகாசி வரை சரவெடி கொளுத்துவார்கள், படம் வெளியாகும் முன். வெளிவந்த பிறகுதான் தெரியும், ஒரு வெடிக்காத ஓலைப் பட்டாசுக்காக, இவர்கள் டென் தவுஸண்ட்வாலா கொளுத்திய லட்சணம்!

    அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் வரவு கரண் நடித்து வெளியாகியுள்ள மலையன். எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல், சவசவவென்று காட்சிகள், ஓவர் சென்டிமெண்ட், கரணின் ஓவராக்டிங் என ஒரு மோசமான படத்துக்குரிய அத்தனை தகுதிகளோடும் வந்துள்ளது இந்தப் படம்.

    சிவகாசி பட்டாசு தொழிலதிபர் சரத்பாபுவின் விசுவாசமிக்க ஊழியர் கரண். சின்ன வயதிலிருந்தே தன்னையும், தன் அம்மாவையும் ஆதரித்துக் காப்பாற்றியவர் என்பதால் சரத்பாபு மீது அப்படியொரு பிணைப்பாம்.

    இவருக்கும் கிராமத்து 'ஓட்ட வாய்' பொண்ணு ஷம்முவுக்கும் காதல். ஒரு நாள் பட்டாசு ஆலையில் நடக்கும் தீ விபத்தில் காதலியையும் உடன் பணியாற்றியவர்களையும் இழக்கிறார். வில்லன்கள்தான் தீ வைத்ததாக செய்தி கிடைக்க, அவர்களை போட்டு புரட்டி எடுத்து ஜெயிலுக்குப் போகிறார். திரும்பி வந்தவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தொழிற்சாலைக்குத் தீ வைத்தவரே முதலாளிதான் என்பதே அந்த அதிர்ச்சி.

    ஏன் அப்படிச் செய்தார் என்பதைக் கரண் கண்டுபிடிப்பது மீதிக் கதை ப்ளஸ் க்ளைமாக்ஸ்.

    அண்டர்வேர் தெரிய வேட்டி அல்லது லுங்கி கட்டியபடி நடந்து போவதுதான் கிராமத்து ஹீரோவுக்கு இலக்கணம் கரணுக்கு யாரோ சொல்லிக் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. படுத்துகிறார். பல காட்சிகளில் இயல்பாக நடிப்பதாக இவரே நினைத்துக் கொண்டு ஓவர் ஆக்டிங் செய்து கடுப்பேற்றுகிறார்.

    ஷம்முவுக்கு குறும்புத்தனம் நன்றாகக் கைவந்தாலும், கரணுக்கு பொருத்தமான ஜோடியாக அவர் எடுபடவில்லை.

    சரத்பாபு சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் எல்லோரையும் விட அதிகமாக ஸ்கோர் செய்திருப்பவர் மயில்சாமி. இத்தனை பெரிய திறமையாளரை துக்கடா ரோல்களில் வீணடிக்கிறார்கள்... விட்டால் வடிவேலு ரேஞ்சுக்கு பின்னுவார் மனிதர்.

    கஞ்சா கருப்பு காமெடி எடுபடவில்லை. இரண்டாவது நாயகியாக வரும் உதயதாரா, இடைவேளைக்குப் பிறகு வந்து ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டுப் போகிறார்.

    தொழில்நுட்ப ரீதியாக சொல்லிக் கொள்ள படத்தில் ஒன்றுமில்லை. தினா கொஞ்சநாள் ஹோம் ஒர்க் செய்துவிட்டு இசையமைக்க வருவது நல்லது.

    இந்த விமர்சனம் வெளியாகும்போது தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருந்தாலே பெரிய விஷயம்தான்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X