»   »  7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ்.ஷங்கர்

நடிப்பு: சூர்யா, ஸ்ருதி ஹாஸன், ஜானி ட்ரை நூயென்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து - இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ: ஜான்சன்

இந்தியாவையே கலக்கிய சூப்பர் ஹிட் படமான கஜினி டீம் உருவாக்கிய படைப்பு என்பதால் '7 ஆம் அறிவு'க்கு ஏக எதிர்ப்பார்ப்பு. இப்படியொரு எதிர்ப்பார்ப்பு கொண்ட படம் அதை நிறைவேற்றத் தவறினால் என்ன நிகழுமோ அது 7-ஆம் அறிவுக்கும் நேர்ந்திருக்கிறது!

5-ம் நூற்றாண்டு...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து கொள்ளை நோய் உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதி தர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதி தர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதி தர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதி தர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதி தர்மன்.

இருங்க... இருங்க... இது முதல் 20 நிமிடக் கதைதான். மீதி? 21-ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.

சென்னையில் மரபணு ஆராய்ச்சி மூலம் மீண்டும் போதி தர்மனை உருவாக்கும் முயற்சியில் சுபா (ஸ்ருதி) என்ற பெண் இறங்க, அது சீனாவுக்கு தெரிந்து விடுகிறது. இந்தியா மீது 'பயோ வார்' எனும் விஷக் கிருமி பரப்பும் போரை சீனா தொடங்கத் திட்டமிடுகிறது. போதி தர்மனால் விரட்டியடிக்கப்பட்ட கொள்ளை நோய்க் கிருமியை இதற்காக மீண்டும் உருவாக்குகிறது சீனா. அந்த பயோ வாரின் முடிவில் இந்தியாவே நோய் கிடங்காக மாறிவிடும். அதற்கான மருந்து சீனாவில் மட்டுமே (போதி தர்மன் கண்டுபிடித்த மருந்து) கிடைக்கும். எனவே சீனாவிடம் பொருளாதார ரீதியாக இந்தியா மண்டியிட வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு சுபாவின் ஆராய்ச்சி தடையாக இருக்கும் என்பதால் அவளைக் கொல்ல டாங் லீ என்ற ஜெகஜ்ஜால வில்லனை இந்தியாவுக்கு அனுப்புகிறது சீனா. இவன் போதி தர்மன் கற்பித்த தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் மிக்கவன். பார்வையாலே ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவன்.

இங்கே, போதி தர்மனின் சந்ததியைத் தேடும் சுபா, அவர்களில் ஒருவனான சர்க்கஸ் கலைஞன் அரவிந்தை (சூர்யா) கண்டுபிடிக்கிறார். அவனைக் காதலிப்பது போல நடித்து தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். போதி தர்மனின் மரபணுவில் 80 சதவீதம் அரவிந்துக்குப் பொருந்துவதை அறிகிறார்.

ஒரு கட்டத்தில் சுபா தன்னைக் காதலிக்கவில்லை, 'பரிசோதனைக் கூட குரங்காகத்தான்' பயன்படுத்துகிறார் என்பது தெரிந்து உடைந்து போகும் அரவிந்துக்கு, போதி தர்மனின் மகத்துவம், இந்தியாவுக்கு வரும் ஆபத்து பற்றி சொல்லி புரிய வைக்கிறார். அதற்குள் சுபாவை தேடி சென்னைக்கு வரும் வில்லன் டாங் லீ, அவளைக் கொல்ல துரத்துகிறார். உடனடியாக போதிதர்மனாக மாற சம்மதிக்கிறான் அரவிந்த்.

டாங் லீ முயற்சி வென்றதா? சுபாவின் ஆராய்ச்சி ஜெயித்ததா? அரவிந்த் போதி தர்மனாக மாறினானா? என்பது க்ளைமேக்ஸ்.

-கேட்பதற்கு கதை நன்றாக இருக்கிறதல்லவா... உண்மைதான். ஆனால் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள 5-ம் நூற்றாண்டு போதி தர்மன் கதையை மட்டும் அழகாக எடுத்த இயக்குநர் முருகதாஸ், தன்னைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு மீதி இரண்டரை மணி நேரமும் பெரும் சோதனையைத் தந்துவிட்டார் என்பதுதான் உண்மை.

முதல் 20 நிமிடக் காட்சிகளுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!

பல்லவ காஞ்சியைச் சித்தரித்துள்ள விதம், சீனப் பயணத்தில் சூர்யா கடந்து போகும் இமயமலைப் பகுதிகள், இரவிலும் ஸ்படிகமாய் மின்னும் ஆறுகள், அந்த சீனக் கிராமம்... என அப்படியே நம்மை இழுத்துக் கொள்கிறது படம். நோய் பாதித்த குழந்தையை காப்பாற்றி தன் போர்வைக்குள் மறைத்து வைத்து, அந்தக் குழந்தையின் தாய் கண்ணெதிரே போதி தர்மன் காட்டும்போது, அந்த சீனப் பெண் உணர்ச்சிக் குவியலாய் கதறியபடி தரையில் விழுந்து வணங்குமிடம்... நெஞ்சைத் தொட்டுவிடுகிறது.

ஆனால் அதன் பிறகு ஒரு காட்சி கூட அந்த அளவு உணர்ச்சிமிக்கதாக, துடிப்பானதாக இல்லை என்பதே உண்மை. போதி தர்மன் கதையை மட்டும் 2.30 மணி நேரம் வர்ணித்திருந்தால் கூட ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும், தமிழ் ரசிகர்களுக்கு.

ஒரு சர்க்கஸ் கலைஞனான சூர்யா - மரபணு ஆராய்ச்சி மாணவி ஸ்ருதி காதலில் எந்த ஈர்ப்பும் இல்லை. அப்படி ஈர்ப்பே இல்லாத காதலில் வரும் டூயட்டுகள் மட்டும் எப்படி ரசிக்கும்படி இருக்கும்?.

ஸ்ருதி ஹாஸன் சில காட்சிகளில் பரவாயில்லை. பல காட்சிகளில் ஐயகோ. அதுவும் அவரது உடைந்த தமிழ் கொடுமை. டிஎன்ஏ ஆராய்ச்சி பற்றிய செமினாரில் தமிழ் பற்றி எழும் சர்ச்சை பொருத்தமற்ற காட்சியாக, பார்ப்பவர் உணர்வைத் தூண்டும் மலிவான உத்தியாக அமைந்துள்ளது. இன்னும்கூட அதை நம்பகத் தன்மையுடன், அழுத்தமாக பொருத்தமான காரணங்களுடன் அமைத்திருக்கலாம்.

சர்வ பலம் பொருந்திய வில்லன் டாங் லீ (Johnny Tri Nguyen) நோக்கு வர்மம் என்ற பெயரில் சும்மா சும்மா 'நோக்கிக் கொண்டே' இருப்பதில் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டுகிறது.

படத்தின் பின் பகுதியில் வரும் நிறைய காட்சிகளை தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பல ஆங்கிலப் படங்களில் பார்த்துவிட்டதால், 'யு டூ முருகதாஸ்' என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

படத்தின் நாயகன் சூர்யா, அந்த ஆரம்ப காட்சிகளுக்காகவும், க்ளைமாக்ஸ் காட்சிக்காகவும் அபாரமாக உழைத்திருப்பது தெரிகிறது. இடையில் வரும் காட்சிகளில் அவரது கெட்டப்பை இன்னும் கூட நன்றாகக் காட்டியிருக்கலாம். அதேபோல நாயகி ஸ்ருதியுடன் ஒட்டுதலின்றியே அவர் நிற்பது போலிருப்பதால், அந்த காதல் சோகப்பாட்டு பெரிய ஸ்பீட் பிரேக்கர் மாதிரியாகிவிடுகிறது.

படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'முன் அந்தி...' உள்ளிட்ட பாடல்களில் குறையில்லை.. ஆனால், பேக்கிரவுண்ட் மியூசிக்கில் சறுக்குகிறார். பின்னணி இசையில் டாங் லீ வரும் போது சீன சப்தம் ஒன்றை அலற விட்டு கடுப்பேற்றுகிறார்.

பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

தமிழன் பெருமை என்னவென்று உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்ற முருகதாஸின் ஆவலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம் மூலம் போதி தர்மனைத் தெரியாத தமிழனே இருக்க முடியாது என்ற நிலை இப்போது உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சிதான். ஆனால் நிறைய இடங்களில் தமிழர் பெருமை பற்றி உணர்த்த அவர் வசனங்களை மட்டுமே நம்பிவிட்டதுதான், பிரச்சார நெடியைக் கிளப்பிவிட்டது. அதற்கு தோதான அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் முருகதாஸ் நோக்கம் நிறைவேறியிருக்கும்.

படத்தில் நிறைய குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது நமது நோக்கமல்ல. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதில் பாதிக் கிணறு தாண்டி விழுந்ததில் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்!.

ஒரு தமிழ்ப் படைப்பாளி என்ற முறையில் அவரை கடுமையாக விமர்சிக்கவும் முடியாத, அதே நேரம் திறமையுள்ள இந்த இளைஞரை விட்டுக் கொடுக்கவும் மனமில்லாத தர்மசங்கடத்தை முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் ஏற்படுத்திவிட்டார் என்பதே உண்மை!.

விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற தமிழ் மந்திரம், மீண்டும் ரமணாக்கள், கஜினிகள் படைக்கும் உத்வேகத்தை முருகதாஸுக்கு தரட்டும்!

English summary
7 Aum Arivu is the new movie from the team of Gajini. The expectations about the movie is so high, but sadly the Gajini Team have failed to recreate the old magic, due to a weak plot and a uninteresting screenplay.
Please Wait while comments are loading...