»   »  49 ஓ விமர்சனம்

49 ஓ விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கவுண்டமணி, திருமுருகன், ராஜேந்திரன், சாம்ஸ், பாலாசிங்

ஒளிப்பதிவு: ஆதி கருப்பையா

இசை: கே

தயாரிப்பு: டாக்டர் சிவபாலன்

எழுத்து - இயக்கம்: பி ஆரோக்கியதாஸ்

கொஞ்சம் லேட்தான் என்றாலும் ரொம்பவே லேட்டஸ்டாக வந்திருக்கிறார் கவுண்டமணி, 49ஓ மூலம்.

படத்தின் கதை.. காதல், அடிதடி குத்துவெட்டு, விரச நகைச்சுவை போன்ற எதுவுமில்லாத ஒன்று. பல கிராமத்து விவசாயிகளின் இன்றைய யதார்த்தம்.

49 O Review

'இங்கே நான்கு வழிச் சாலை வருது, மேம்பாலம் வருது, பேக்டரி வருது' என அரசுத் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் எம்எல்ஏ மகன், ஆண்டுக்கு முப்போகம் விளையும் வளமான வயல்களை வளைத்துப் போட்டு, வீட்டு மனைகளாக்கி விற்கிறான். பணத்துக்கு ஆசைப்பட்டு விளைநிலங்களை விற்றுவிடும் விவசாயிகள், அதற்கான பணத்தையும் முழுசாகப் பெறாமல், வேறு வேலையும் தெரியாமல் தற்கொலை முடிவுக்குப் போகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும் கவுண்டமணி, இனி ஒரு விவசாயியும் சாகக் கூடாது என்று முடிவெடுத்து இரு வழிகளைக் கையாள்கிறார். ஒன்று, எம்எல்ஏ மகன் செய்த அதே ரியல் எஸ்டேட் வழி. இன்னொன்று தேர்தல் பிஸினஸ்... இந்த இரண்டின் மூலமும் எப்படி இழந்த நிலங்களைப் மீட்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக அடிக்கடி கவுண்டமணியை நடக்கவிட்டு, அவர் பின்னாள் நூறுபேர் போவது, தேர்தல் பிரச்சாரத்தை மகா நீளமாகக் காட்டுவதைக் குறைத்திருக்கலாம்.

49 O Review

கவுண்டமணி யார், அவருக்கு ஊரில் ஏன் இந்த முக்கியத்துவம் என்பதைச் சொல்லியிருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

இன்னொன்று அந்த இடைத் தேர்தல் என்பது ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல.. சுற்றுப் புற ஊர்களையும் கவுண்டமணியின் பிரச்சாரம் எந்த அளவு தாக்கத்துக்குள்ளாக்கியது என்று காட்டியிருக்க வேண்டும்.

அந்த ஆறடி தாய்மடி திட்டத்தை அம்போவென்று விட்டுவிட்டு தேர்தல் பக்கம் திரும்பிவிடுகிறது திரைக்கதை.

ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு படத்தை தனி ஆளாக இழுத்துச் செல்கிறார் கவுண்டமணி.

49 O Review

ஒவ்வொரு வசனமும் நெத்தியடி. அந்த வசனங்களில் உள்ள உண்மை புரிந்ததால்தானோ என்னமோ, மவுனமாக அவற்றை அனுமதித்திருக்கிறது சென்சார் சென்சார்.

'அரை டஜன் படம் நடிச்சவன் எல்லாம் சிஎம்-மாகி நாட்டை ஆளணும்னு நினைக்கிறான்...'

'49 ஓ -க்கு எதுக்கு நான் ஓட்டுப் போடணும்... அதுக்கு ஓட்டுப் போட்டா என்ன பலன்?'

'கையிலிருக்கிற மண்ணுதான்யா ஒவ்வொரு விவசாயிக்கும் மானம்.. அதையும் வித்து திண்ணுபுட்டா வாழ்றதுல அர்த்தம் என்னய்யா...'

இப்படி நச் வசனங்கள் படம் முழுக்க...

காமெடி என எந்தக் காட்சியையும் திணிக்காமல், கவுண்டரை அவர் இயல்புக்கேற்ப 'ஆட' விட்டிருக்கிறார்கள். கலக்கிவிட்டார் மனிதர். என்னவொரு எள்ளல், எகத்தாளம். சவுண்டு!

குறிப்பாக 49-ஓவுக்கு அவர் தரும் விளக்கம், இனி யாராவது 'என் ஓட்டு 49-ஓவுக்கு' என்று சொல்வார்களா என்பது சந்தேகம்தான்!

பெரிய பெரிய ஹீரோக்கள் செய்திருந்தால் கூட எடுபடாமல் போயிருக்கக் கூடிய கதை இது. கவுண்டரின் இமேஜால் கவனிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

ஒளிப்பதிவு மிக இயல்பாக உள்ளது. எந்த மிகைப்படுத்தலும் இல்லாத எளிமையான கிராமத்து வாழ்க்கையை, விவசாயத்தைப் படம் பிடித்திருக்கிறார் ஆதி கருப்பையா.

கே இசையில் அம்மா போல அள்ளித் தரும் மழைதான்... பாடல் பிரமாதம். தேனிசை செல்லப்பா குரலில் இன்னும் எத்தனை காலம்... நன்றாக உள்ளது. ஆனால் ஒலித் தரத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பின்னணி இசை காதுகளைப் பதம் பார்க்கிறது.

முதல் படத்திலேயே நாட்டின் ஜீவாதாரமான விவசாயப் பிரச்சினையை கையிலெடுத்த, அதை யார் சொன்னால் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரும் என்று கணித்ததற்காக இயக்குநர் ஆரோக்கியதாசுக்கு ஒரு சபாஷ். ஆனால் கிடைத்த பெரும் வாய்ப்பை அவர் இன்னும் நன்றாகப் பயபடுத்தியிருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட், உருவாக்கத்துக்கு 2 ஸ்டார்தான்... கவுண்டருக்காக அந்த மூன்றாவது ஸ்டார்!

English summary
Goundamani's comeback movie 49O is really a meaningful movie based on the state farmers present pathetic situation. Legend Goundamani steals the entire show and made the movie enjoyable.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil