»   »  ஆர்யா - விமர்சனம்

ஆர்யா - விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சூடான மசாலா பால் போல அனைத்து அம்சங்களும் நிறைந்த விருந்தாக அமைந்துள்ளது, லவ் டுடே, துள்ளித் திரிந்த காலம் புகழ் இயக்குநர் பாலசேகரனின் ஆர்யா.

தனது முந்தையப் படங்களிலிருந்து நிறையவே விலகி வந்து, வேறுபட்ட, வித்தியாசமான படமாக ஆர்யாவைக் கொடுத்துள்ளார் பாலசேகரன். மாதவன், பாவனா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

தீபிகா (பாவனா), பணக்காரப் பெண். சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். அவர்தான் கல்லூரியின் தாதா. இவரது அண்ணன் தாதா காசி (பிரகாஷ் ராஜ்). கல்லூரியில் தீபிகா சொல்வதுதான் நடக்க வேண்டும். அவரைக் கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் மட்டுமல்ல, கல்லூரி டீனே வெலவெலக்கிறார்கள்.

தீபிகா கல்லூரிக்குள் நுழைந்ததே திரில்லான ஒரு விஷயம். தீபிகா இடத்திற்குத் தேர்வாகியிருந்த ஒரு மாணவனைக் கொன்று விட்டுத்தான் அந்த இடத்தில் தனது தங்கையைச் சேர்க்கிறார் காசி. அதுவும் கல்வி அமைச்சர் முன்னாலேயே அந்த மாணவனைக் கொலை செய்கிறார் காசி.

அந்தக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவன் ஆர்யா (மாதவன்). கோவை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த அவர் இடமாறுதலாகி சென்னை கல்லூரிக்கு வருகிறார். மென்மையான குணம் கொண்ட ஆர்யா, பேசுவதற்கும், பழகுவதற்கும் இனிமையானவர்.

கல்லூரிக்கு வரும் முதல் நாளிலேயே ஆர்யாவுக்கும், தீபிகாவுக்கும் உரசிக் கொள்கிறது. தீபிகாவுக்கு வழக்கமாக அத்தனை பேரும் காலையில் குட்மார்னிங் சொல்லி விட்டுத்தான் செல்வது வழக்கம். அதேபோல அவரது காருக்குப் பக்கத்தில் வேறு யாரும் தங்களது வண்டிகளை நிறுத்தக் கூடாது.

இந்த இரண்டையும் மீறுகிறார் ஆர்யா. இந்தக் கோபத்தில் ஆர்யாவின் சகோதரியைக் கடத்திச் சென்று விடுகிறார் தீபிகா. அவரது அடாவடியை சமாளிக்கிறார் ஆர்யா. ஆர்யாவுடன் மோதித் தோல்வி அடையும் தீபிகா, ஒரு கட்டத்தில் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். எப்படியாவது நான் ஆர்யாவைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என தனது அண்ணனிடம் கூறுகிறார்.

ஆனால் ஒரு ரவுடியின் தங்கையைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று ஆர்யா மறுத்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதக் கதை.

திரைக்கதையில் நல்ல வேகம் உள்ளது. கதையை சிறப்பாக கொண்டு சென்றிருக்கிறார் பாலசேகரன். 3 மணி நேரமும் பொழுது போவதே தெரியாத வகையில் படம் விறுவிறுப்பாக போகிறது. வடிவேலுவின் காமெடி வயிறு வலிக்கச் சிரிக்க வைத்துள்ளது. குறிப்பாக பாவனா, வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன, ரகளையாக உள்ளன.

மாதவன் அசத்தலாக நடித்துள்ளார். ரன் படத்திற்குப் பிறகு அவர் நடித்துள்ள சிறந்த ஆக்ஷன் படம் இதுதான். பாவனா, கிட்டத்தட்ட விஜயசாந்தி ரேஞ்சுக்கு நடித்துள்ளார். மன்னன் படத்தில் ரஜினியுடன் மோதும் விஜயசாந்தியை இப்படத்தில் அவர் நினைவுபடுத்துகிறார்.

கடினமான ரோல் என்றாலும் கூட லாவகமாக சுமந்திருக்கிறார் பாவனா. காதல் காட்சிகளில் காதல் ரசம் சொட்டுகிறது.

ஆனால் மாதவன், பாவனாவை விட பிரகாஷ் ராஜ்தான் கவர்ந்திழுக்கிறார். கில்லியில் வந்தது போல இதிலும் காமெடி கலந்த வில்லத்தனத்தில் ஜொலித்திருக்கிறார். தேவனும், தேஜாஸ்ரீயும் தங்களது பங்கை உணர்ந்து செய்துள்ளனர்.

மணிசர்மாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக டைட்டில் பாடலில் பின்னி எடுத்திருக்கிறார். கூடவே தேஜாஸ்ரீயின் தித்திக்கும் நடனமும் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

ஜில்லென்ற தீயே பாட்டில் ரொமான்ஸும், மெலயிடும் கை கோர்த்து கலக்கியுள்ளன.

லாஜிக் எதையும் எதிர்பார்க்காமல், கவலைப்படாமல் படம் பார்க்கப் போனால் ரசித்து விட்டு ஜாலியாக திரும்பி வரலாம்.

ஆர்யா - ஆறிப் போகாத சூடான, கரம் மசாலா பால், சுவையாகவும் இருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil