»   »  அதிகாரத்திற்கு எதிராக சாட்டை சுழற்றும் 'அறம்' - படம் எப்படி?

அதிகாரத்திற்கு எதிராக சாட்டை சுழற்றும் 'அறம்' - படம் எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாராவின் அறம் விமர்சனம்- வீடியோ

நயன்தாரா, ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லக்‌ஷ்மி, விக்னேஷ், ரமேஷ், அனந்தகிருஷ்ணன், அம்பேத் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'அறம்'. கோபி நயினார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகி இன்று வெளியாகியிருக்கிறது 'அறம்' திரைப்படம்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நயன்தாரா. மக்களுக்குச் சேவை செய்வதே தன் பணி என இருக்கும் நேர்மையான ஆட்சியர். அரசியல்வாதிகளின் இடையூறுக்கு மத்தியில் தான் மேற்கொண்ட பணியை அறம் வழுவாமல் செய்து முடித்தாரா, அதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நயன்தாரா சொல்லும் விதமாக பின்னோக்கித் தொடங்குகிறது கதை.

Aramm movie review

உலகளாவிய அளவில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைச் சுட்டிக்காட்டியவாறு தொடங்குகிறது படம். 'இப்ப தண்ணி இருக்கிற ஒரே இடம் வாட்டர்கேன் கம்பெனி மட்டும் தான். உலகத்துல யாருக்குமே குடிக்க தண்ணி இல்ல... ஆனா, அவங்களுக்கு மட்டும் எப்படி தண்ணி கிடைக்குது..?' என இந்தப் படத்தில் எளிமையான நீரரசியல் பேசும் பாமரர்களின் கேள்வி நம் எல்லோருக்கும் எழ வேண்டிய கேள்வி. ஒரு புறம் வளர்ச்சியின் குறியீடாக ராக்கெட் ஏவப்படும் ஶ்ரீஹரிகோட்டா... இன்னொரு புறம் புறக்கணிக்கப்பட்டவர்களின் குறியீடாக அத்தியாவசியத் தேவைகளற்ற ஒரு கிராமம். இவை இரண்டுக்கும் இடையே அதிக தூரமில்லை. ஆனால், இரண்டிற்குமான வித்தியாசங்களின் தொலைவு அந்த ஆகாய அளவு.

Aramm movie review

குடிக்கும் நீரே உப்பு நீராகிப் போன பகுதியில் சிப்பி அள்ளும் தொழில் செய்யும் மனிதர்கள், விவசாய நிலங்கள் அழிந்து ரியல் எஸ்டேட்களாக மாறியதை உணர்த்தும் வகையில் ரியல் எஸ்டேட் கற்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்யும் ராமச்சந்திரன் துரைராஜ், அவரது மனைவியாக கூலி வேலை செய்யும் சுனு லக்‌ஷ்மி. அவர்களது மகனாக 'காக்கா முட்டை' ரமேஷ். சுனு லக்‌ஷ்மியின் தம்பியாக 'காக்கா முட்டை' விக்னேஷ் இவர்களைச் சுற்றி வருகிறது நயன்தாராவின் அறம்.

Aramm movie review

மைக்கேல் பெல்ப்ஸ் கனவுகளுடன் நீரில் மூச்சுப் பிடிக்கும் ரமேஷ், ராமச்சந்திரன் துரைராஜ் போன்ற ஏழைக் கூலித் தொழிலாளியின் வீட்டில் பிறந்தால் அவர்களது கனவுகள் கண்ணீராகத்தான் கசியும் என ஆங்காங்கே சென்டிமென்ட் டச் கொடுத்திருக்கிறார் இயக்குநர். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கூல்ட்ரிங்ஸ் கொடுக்கும் நர்ஸ் வினோதினி, குடிநீர் பஞ்சத்தால் நெடுதூரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியிருப்பதால் பள்ளிக்குப் போகாத பெண்கள், வானம் பார்த்த பூமியாகிப் போன சீமைக்கருவேலமும், பொட்டல் காடுகளுமென வறட்சிக்கான அத்தனை குறியீடுகளும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

குடிநீர் பிரச்னையைப் பேசியபடிச் செல்லும் படம் அதன் தாக்கத்தில் உருவாகும் இன்னொரு பிரச்னைக்குத் திரும்பி வேகம் பிடிக்கிறது. ஒரு சுனு லக்‌ஷ்மி தன் 4 வயது குழந்தையை சீமைக்கருவேல மரங்கள் வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்கிறார். குழந்தை சில நிமிடங்கள் காணாமல் போக, பதட்டத்தோடு அதைத் தேடி அலைகிறார். அந்தக் குழந்தை மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தக் கிணற்றின் பாதி வழியில் சிக்கிக்கொண்ட குழந்தையைக் காப்பாற்ற அரசாங்க உதவிகளை நாடுகிறார்கள் மக்கள். அதற்குள் கிராமத்து இளைஞர்களே செல்போனில் கயிற்றைக் கட்டி உள்ளே விட்டு குழந்தையின் குரலை வைத்து எத்தனை அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கிறார்கள்.

Aramm movie review

குழந்தையைக் காப்பாற்ற கிராமத்து இளைஞர்கள் செய்யும் முயற்சிகள், அந்த நேரத்தின் பரபரப்புக் காட்சிகளை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும். பதட்டத்தில் வண்டியை ஸ்டார்ட் செய்வது, வண்டியைப் போட்டுவிட்டு ஓடுவது என காட்சிக்குக் காட்சி அசல் தன்மை. அரசின் தீயணைப்பு உதவி வண்டி வராததால் அவர்கள் அடுத்தடுத்த மீட்பு நடவடிக்கைகளில் இறங்கத் தாமதமாகிறது. இந்தக் குழந்தையை மீட்க நேரடியாகக் களத்தில் இறங்குகிறார் கலெக்டர் நயன்தாரா. அதிகாரிகளை முடுக்கிவிட்டு பணிகளைத் துரிதப்படுத்துகிறார்.

ஆனால், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற அரசிடமும் வேறு எந்த உபகரணங்களும் இல்லை. கயிற்றை இறக்கி குழந்தையை வெளியே கொண்டுவரும் கடினமான முயற்சி ஒன்றுதான் சாத்தியம். ஒரு பக்கம் ராக்கெட் ஏவப்படக் காத்திருக்கிறது.. இன்னொரு பக்கம் பூமிக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்றக் கூட வசதியில்லை என்கிற உண்மையை பொட்டில் அடித்தாற்போல உணர்த்துகிறது 'அறம்'.

வேறு வாய்ப்பே இல்லாத நிலையில், அந்தக் குழந்தையை கயிற்றை உள்ளே அனுப்பித் தூக்க முயற்சிக்கிறார்கள். சிறு குழந்தையால் எவ்வளவு நேரம் கயிறைப் பிடித்து மேலே வர முடியும்? பாதி வழியில் மீண்டும் உள்ளே விழுந்து விடுகிறது. இந்த முறை 90 அடி. வேறு காப்பாற்றும் முறைகள் எதுவும் இல்லாத நிலையில், பொறியியல் மாணவர் உருவாக்கிய ரோபோவை வைத்து எடுக்கலாம் என ஐடியா தருகிறார்கள். ஆனால், அவரைத் தொடர்பு கொள்ளவே ஒரு நாளாகும் அளவுக்கு இருக்கிறது நிலைமை. மக்கள் மீதான அரசின் அலட்சியத்தை உணர்த்த பல காட்சிகளையும், வசனங்களையும் வைத்திருக்கிறார் இயக்குநர்.

Aramm movie review

இந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்புக் காட்சி காட்சிப்படுத்தப்பட்ட விதம் நம்மை சீட் நுனிக்கு நகர்த்துகிறது. ஒரு உண்மையான மீட்புக் காட்சியில் நிலவும் சிக்கல்களை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறது இந்தப் படம். இத்தனைக்கும் இடையே, ஆழ்துளைக் கிணற்றுக்குச் சொந்தமானவர் ஆளுங்கட்சி கவுன்சிலர் என்பதால் அவரைக் கைது செய்யக்கூடாது என அதிகார வர்க்கத்தினர் கலெக்டருக்கு கொடுக்கும் குடைச்சல்கள், தொகுதி எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தியின் மிரட்டல், அரசுக்கெதிராகக் கொந்தளிக்கும் மக்கள் என அத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் நிதானமாக ஒற்றை ஆளாகச் சமாளிக்கிறார் நயன்தாரா.

குழந்தையைக் காப்பாற்ற முடியாத சூழலில், அடுத்தகட்டமாக மிகப்பெரும் ரிஸ்க் எடுக்கத் தயாராகிறார் நயன்தாரா. அரசுக்கு எதிராக மக்களே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கிளர்ச்சிக்காக இந்த முடிவென்றாலும் இதற்குப் பின்னால் ஏற்படும் விளைவுகளை இயக்குநர் கொஞ்சம் யோசித்துப் பார்த்திருக்கலாம். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க, ஒரு கலெக்டரே இன்னொரு குழந்தையை பயன்படுத்துவதை ஏற்க முடியவில்லை.

பல ஆண்டுகளாக செய்திகளில் வரும் 'ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த சோகம்' என்பதையே கதையாக்கி அரசைக் கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். "மக்களுக்கு எது தேவையோ அதுதான் சட்டமாக்கணும். சட்டத்தை போட்டுட்டு அதற்கான மக்களை உருவாக்கக்கூடாது", "ஓட்டுக் கேட்க வரும்போது உங்களுக்கு தூரம் தெரியாது; ஆனா பிரச்னைன்னு சொன்னா மட்டும் தூரம் தெரியுதுல்ல" என நறுக் நறுக் வசனங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கின்றன.

குழந்தை மீட்பு முயற்சிக்குப் பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நயன்தாரா மீண்டும் பணியில் சேராமல், எது உண்மையான அதிகாரம் என்பதைப் புரிந்துகொண்டு அதை நோக்கி அடியெடுத்து வைப்பதாக முடிந்திருக்கிறது படம். ஆனால், அதிகாரத்தால் அவர் செய்யவிருக்கும் மாறுதல்கள், திட்டங்கள் என எந்த முன்வரைவுகளும் இடம்பெறாதது உறுத்தல். குழந்தையை மீட்கும் காட்சிக்கு இடையிடையே விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக நுழைக்கப்பட்ட தொலைக்காட்சி செய்தி, விவாதக் காட்சிகள் பரபரப்பைக் கூட்டுவதற்குப் பதிலாக அயர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. அவற்றைக் கொஞ்சம் குறைத்திருந்தால் 'அறம்' இன்னும் ஷார்ப்பாக வந்திருக்கும். அறம் - நிச்சயம் பார்க்கப்படவேண்டிய நமக்கான சினிமா.

English summary
'Aramm' movie lead by Nayanthara, released today . This film was directed by Gopi Nainar. 'Aramm' talks about water scarcity and their subjects. Nayanthara played against the power politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X