»   »  அருவி... சிறு ஊற்றாகத் தொடங்கிப் பெருகும் காட்டாறு! #AruviReview

அருவி... சிறு ஊற்றாகத் தொடங்கிப் பெருகும் காட்டாறு! #AruviReview

By Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil
Rating:
4.0/5
Star Cast: அதிதி பாலன், லக்ஷ்மி கோபால்சாமி, அஞ்சலி வரதன்
Director: அருண் பிரபு புருஷோத்தமன்

சமூக வலைதளங்களிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சமீப சில வாரங்களாக 'அருவி' படத்தைப் பற்றித்தான் பேச்சு. படம் வெளிவருவதற்கு முன்பான ப்ரிவியூ ஷோக்களில் படம் பார்த்தவர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டித் தள்ளிக்கொண்டிருந்தார்கள். அருவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், படம் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. பொதுவாக, விமர்சகர்கள் மத்தியில் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்ட, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதை அள்ளிக் குவித்த பல படங்கள் தியேட்டரை விட்டு மிக விரைவில் ஓடியது கண்கூடு. 'அருவி' படம் அற்புதம் என்கிற ரீதியிலான பாராட்டுகளே பலருக்கு அயர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இத்தனை பாராட்டுகளுக்கும், எதிர்பார்ப்புக்கும் தகுதியான படம்தானா 'அருவி'?

அருவி படம்

அருவி படம்

பாலுமகேந்திரா பட்டறையில் மாணவராகவும், கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்த அருண் பிரபு புருஷோத்தமன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதிதி பாலன் எனும் புதுமுகம் இந்தப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். அவரைத் தவிர ஹீரோ என படத்தில் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்கள் மிக மிகச் சொற்பம். அந்தப் படங்களும், பெண்ணடிமை, ஆணாதிக்கம் எனப் பேசி பொதுச் சமூகத்தின் விமர்சனத்துக்குள்ளாகி, பெரும் வெற்றியைப் பெறுவது கேள்விக்குறியாகிவிடுகிறது. 'அருவி' அப்படி எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடைக்க முடியாத மனிதம் சார்ந்த ஒரு படம்.

அதிதி பாலன்

அதிதி பாலன்

அருவியாக நடித்திருக்கும் அதிதி பாலன் தமிழ் சினிமாவுக்கு செமத்தியான புதுவரவு. அலட்டல் இல்லாத யதார்த்தமான நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். 'அருவி' என்கிற பெண், கையால் வாய் பொத்திச் சிரிக்கும் அப்பாவி அழகு... அதற்குள் நிறைந்திருக்கும் குறும்புத்தனம்... ஏ ஜோக்குக்கு கண்ணை மூடி வெட்கத்தோடு சிரிக்கும் யதார்த்தம்... அன்புக்கு ஏங்கி வெடித்தழுகிற ஒரு பெண்... நம்பிக்கைக்குரியவர்கள் கைவிட்டால் தாங்கமாட்டாமல் துவண்டு போகிற இளம்பென். இந்த கேரக்டர்களுடன் நம் வாழ்வில் பல பெண்களைச் சந்தித்திருக்கலாம். அத்தனை பெண்களையும் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறாள் இந்த 'அருவி'. படத்தை தனி ஒருத்தியாகத் தாங்கும் கருவியும் இவள்தான். சிரிப்பு, சோகம், ஏக்கம் என அடுத்தடுத்த ஃப்ரேமில் அசலாக முகம் மாற்றும் அருவி ரொம்பவே ஈர்க்கிறாள்.

அருவி கதை

அருவி கதை

தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு அழகான கிராமத்தில் அன்பான குடும்பத்தில் பிறந்தவள் அருவி. அப்பா, அம்மா, தம்பி என அவளது உலகம் நேசத்தால் கட்டப்பட்டது. குறும்புத்தனமும், விளையாட்டும் நிறைந்த அவளது வாழ்க்கை அப்பாவின் ட்ரான்ஸ்ஃபரால் சென்னைக்கு குடிபெயர்கிறது. பள்ளிக்கூடப் பெண்களுக்கே உரிய துடுக்குத் தனமும், பிரமிப்பும் நிரம்பியிருக்கிற அவளது வாழ்வில் விபத்தாக ஒரு பெரும் புயல் வீசுகிறது. அதன் விளைவால் அந்த அழகான குடும்ப அமைப்பிலிருந்து திடீரென நிராகரிக்கப் படுகிறாள் அருவி. பாசத்தால் கட்டப்பட்ட கூட்டிலிருந்து வீசியெறியப் படுகிறாள். நிர்க்கதியாகத் தனது தோழியின் வீட்டில் தஞ்சமடைந்தவள் அங்கும், சூறையாடப்பட்டு வெளியேறுகிறாள். அருவியை நிர்க்கதியாக்கியது எது, அவள் நிரூபிக்க விரும்புவது என்ன என்பதெல்லாம் இரண்டாம் பாதி.

திருநங்கையுடன்

திருநங்கையுடன்

திருநங்கை அஞ்சலி வரதனுடன் சேர்ந்து ஒரு மேன்ஷனில் வசிக்கிறாள் அருவி. மகிழ்ச்சிக்கு மட்டுமே பழகிப்போன அருவி எல்லா இடங்களிலும் தான் மகிழ்வாயிருப்பதற்கான காரணங்களையே தேடிச் சரணடைகிறாள். அவளது வாழ்க்கையில், சூழல்களால் நிகழ்ந்தவைதான் எல்லாம். ஆனால், தனிப்பட்ட எவர் மீதும் அவளுக்குத் துளிக் கோபமில்லை. சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட குடும்ப அமைப்பின் மீது அதிருப்தி அடைந்தவள் பெண்களின் மீது ஏவப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை கேள்வி கேட்கிறாள். இந்தச் சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதென்பது எது என நேர்மையான பதில்களைப் பெற முடியாத கேள்விச் சாட்டைகள் வீசுகிறாள்.

சமூக நையாண்டி

சமூக நையாண்டி

படத்தில் காமெடி என தனியாக ட்ராக் இல்லை. ஆனால், பல இடங்களில் குலுங்கிச் சிரிக்க வைக்கிறார் இயக்குநர். நக்கலாகவும், நையாண்டியாகவும் சமூகத்தை, அரசியலை, அமைப்பை கலாய்க்கிறார். வசன மாடுலேஷன்களின் மூலமே சிரிக்கவும் வைக்கிறார். டி.வி ப்ரோகிராம் ஷூட்டிங்கில் நிகழ்பவற்றை சிம்பிளான காமெடிகளாக்கி கைதட்டல் அள்ளுகிறார். அதில், 'ரோல்ல்லிங் சா...ர்' என கேமராமேன் சொல்லும் காட்சிகளில் சீரியஸ் தாண்டி சிரிப்பால் குலுங்குகிறது தியேட்டர். மேன்ஷனில் அஞ்சலி வரதன் பச்சை ஜட்டி தேடும் காட்சிகளும், அவர் சொல்லும், 'நான் உண்டு என் ஜட்டி உண்டுனு இருக்கேன்..' போன்ற வசனங்களும் பகடியாகவும் பச்சையாகவும் மொத்தச் சமூகத்தையும் சிந்தனைக்கு உள்ளாக்குகின்றன.

டி.வி ஷூட்டிங்

டி.வி நிகழ்ச்சி டைரக்டராக அதகளம் செய்திருக்கும் கவிதா பாரதி, தொகுப்பாளினியாக நடித்திருகும் லட்சுமி கோபால்சாமி, உதவி இயக்குநர் பீட்டர், டெக்ஸ்டைல்ஸ் முதலாளியாக நடித்திருப்பவர், தீட்சிதராக நடித்தவர், டீ வாங்கி வரும் பையன் சுபாஷ், வெகுளியாகப் பேசும் செக்யூரிட்டி தாத்தா, அருவியின் தோழியாக நடித்திருக்கும் பெண் என அத்தனை பேரின் நடிப்பிலும் அவ்வளவு யதார்த்தம். அருவியின் அப்பாவாக நடித்தவர் பெண்ணுக்குத் தகப்பனாக, சமூகத்திற்கும், மானத்திற்கும் பயந்து வாழும் நடுத்தரக் குடும்பத்தின் தலைவனாக வாழ்ந்திருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஷூட்டிங் காட்சிகள், டி.ஆர்.பி-க்காக நிறுவனங்கள் நடத்தும் நாடகங்களை அசலாக மேடையேற்றுகின்றன. அருவி, இன்டர்வல்லுக்கு முன்பு மூச்சு விடாமல் பேசும் அந்த வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல் தெறிக்கிறது.

திருநங்கை எமிலி

திருநங்கை எமிலி

எமிலி கேரக்டரில் நடித்திருக்கும் திருநங்கை அஞ்சலி வரதன் கலங்கும்போதும், சிரிக்கும்போதும், பேசும்போதும் ரசிக்க வைக்கிறார். ஆதரவற்ற அருவியை அவர் அரவணைத்த போதே ரசிகர்கள் மனதிலும் நெருக்கமாக இடம்பிடித்து விடுகிறார். டி.வி நிகழ்ச்சிக்கு பதைபதைப்புடன் செல்லும்போதும், அருவி மருத்துவமனையில் இருக்கும்போது அவளுக்கு ஆறுதல் சொல்லும் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். திருநங்கைகளையும், பாலியல் நோயாளிகளையும் இழிவாகப் பார்க்கும் சிலரது எண்ணங்களை கொஞ்சமேனும் மாற்றும் அளவுக்கு 'அருவி' இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

சிறப்பான திரைக்கதை

சிறப்பான திரைக்கதை

படம் தற்போது நடப்பதையும், ஃப்ளாஸ்பேக் கதை சொல்வதாகவும், சிறுவயதில் விளையாடிய அழகான மான்டேஜ் நாட்களை அசைபோடுவதாகவும் தொடர்ந்து விரிகிற ஒரு நான் -லீனியர் டைப் கதை. அனைத்தையும், சிக்கல் இல்லாமல் அடுத்தடுத்து கதம்பம் போல சேர்த்துக் கட்டியிருக்கிறார் இயக்குநர். சமூகமும், அவள் சார்ந்த குடும்பமும், ஒரு பெண்ணின் மீது கொண்டிருக்கும் மதிப்பீடுகள் இப்படித்தான் இருக்கிறது என நடைமுறை யதார்த்தத்தையும், பெண் என்பவளை எந்தச் சூழலிலும் சமூகம் இப்படித்தான் பார்க்கும் என எள்ளி நகையாடும் வசனங்கள் ஆங்காங்கே தெறிக்கின்றன. பெண்ணை கார்னர் செய்வதற்கான வழியாக சமூகம் கடைசியாக நாடுவது அவளது கேரக்டரைத்தான் என்பதை சில காட்சிகளின் மூலம் நறுக்கென காட்டியிருக்கிறார்கள்.

இசை - ஒளிப்பதிவு - எடிட்டிங்

இசை - ஒளிப்பதிவு - எடிட்டிங்

பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் ஆகியோர் அருவிக்கு இசையமைத்திருக்கிறார்கள். பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிகளின் தெளிவைக் கூட்டிக் கொண்டே இருக்கின்றன பாடல்கள். பாடல்களே படத்தை தன்னிச்சையாக நகர்த்தவும் செய்கின்றன. படத்தின் வேகத்துக்கு தடையாக இல்லாமல், கதை சொல்லும்படி பாடல்களே செயல்படுவது அருமை. ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு படத்திற்கு மெருகூட்டியிருக்கிறது. குழந்தை அருவி வரும் பசுமையான காட்சிகள், ஷூட்டிங் செட்டை அதற்குரிய லைட்டிங்கோடு படம்பிடித்திருக்கும் காட்சிகள் என படத்தில் பயணத்தில் தடங்கல் இல்லாத கேமரா உழைப்பு. ரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டாவின் எடிட்டிங்கில் சிக்கல் இல்லாமல் அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது நாந்லீனியர் திரைக்கதை.

அருவி - கடல்

அருவி - கடல்

அருவி - தன்னை நிராகரித்த சமூகத்திற்கும், தன்னைப் பயன்படுத்திக் கொண்டவர்களுக்கும் ஒரு நிலவைப் போலக் குளுமையான மன்னிப்பை அருளுகிறாள். டி.வி செட்டின் இறுதிக் காட்சியில் மது அருந்தும்போது தன்னை வஞ்சித்தவனிடம் எவ்விதச் சினமுமின்றி சியர்ஸ் காட்டும் காட்சியில் மனிதத்தைச் சாரலாகத் தெளிக்கிறாள். அருவி, வீடியோவில் பேசும் அந்தச் சில நிமிடக் காட்சி நெகிழ்ச்சி. மனதை உலுக்கும் அந்தக் காட்சிகளை கலங்காமல் பார்ப்பது ரொம்பவே கடினம். உடல் இளைத்து, நடுங்கி, வாழ ஏங்குபவளாக வரும் கடைசி சில நிமிடங்களுக்காகவே அருவியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

மெலிதான புன்னகையோடும் , ஆற்ற முடியாத சோகத்தோடும் நிறைகிறது அருவி. இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்கள் வரிசையில் நிச்சயம் இடம் பிடிப்பதற்குத் தகுதியான ஒரு படம் இது. இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், அதிதி பாலன் இருவருக்கும் இந்த 'அருவி' வெகு சிறப்பான விசிட்டிங் கார்டு. 'அருவி' சிறு ஊற்றாய்த் தொடங்கிப் பெருகும் காட்டாறு. கண்ணீரோடு நனையுங்கள், மூழ்குங்கள், திளையுங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Read 'Aruvi' movie review here. Debut Aditi balan plays lead role in 'aruvi' directed by Arunprabhu purushothaman. Aruvi is a non-linear story that tells social message to all.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more