»   »  அழகிய தீயே: சினிமா விமர்சனம்-சுரேஷ்

அழகிய தீயே: சினிமா விமர்சனம்-சுரேஷ்

Subscribe to Oneindia Tamil

குத்து, அடிதடி, அருவா, என்று படத்தலைப்பிலேயே இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கும் படங்களும், ஒல்லி கதாநாயகன் பத்து,பதினைந்து பேரைத் தூக்கிப் போட்டு பந்தர்டும் நம்பகத்தன்மை அறவே இல்லாத காட்சிகளும், கதாநாயகியின் மார்பு, தொப்புள்ஆகியவைகளையே உண்டியலாக்கி குலுக்கி, ரசிகர்களிடம் பிச்சை கேட்கும் இயக்குநர்களும் .... என்று தமிழ் சினிமாவே மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மெல்லிய உணர்வுகளால் எழுதப்பட்ட ஒரு நல்ல கவிதை போல் வந்திருக்கும்திரைப்படம் அழகிய தீயே

விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் அநேகமாக அனைத்து இயக்குநர்களும், உதவிஇயக்குநர்களும் இப்படித்தான் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்திருப்பார்கள். நாலு பசங்க இருக்காங்க சார், தடால்னுஅவங்க வாழ்க்கைல குறுக்க வரா ஒரு பொண்ணு.... இப்படி எடுத்த சில படங்கள் குருட்டு அதிர்ஷ்டத்தால் ஓடிவிட, பல படங்கள்மயிலை பார்த்து ஓடின வான்கோழி போல தோற்றுப் போயின.

இந்தப் படத்தின் இயக்குநர் ராதாமோகனும் இப்படியே கதையை ஆரம்பித்திருந்தாலும், கதையை சொல்லியிருக்கிறவித்தியாசத்திலும் காட்சியமைப்புகளிலும் தனித்து நிற்கிறார். பல ஆண்டுகளாக மனதில் ஊறப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாககாட்சிகளை யோசித்து வைத்திருந்தால்தான் இப்படிப்பட்ட படத்தை எடுக்க முடியும். ஏனெனில் இயக்குநர் படத்தை எந்தவொருஇடத்திலும் தடங்கலின்றி, குழப்பமில்லாமல் எடுத்துச் சென்றிருப்பதே அதற்குச் சான்று.

சுருக்கமான கதைதான். தன் பணக்கார (வில்ல) அப்பா ஏற்பாடு செய்யும் திருமணத்தை தடுக்க சந்திரனின்(பிரசன்னா) உதவியைநாடுகிறாள் நந்தினி(நவ்யா நாயர்). சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் அவன் தன் படைப்பாளியின் மூளையை பயன்படுத்தி,தானும் அவளும் 5 வருடங்களாக காதலிப்பதாக அவளை மணக்கவிருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையிடம் (பிரகாஷ்ராஜ்) மிகஉருக்கமாக சொல்கிறான்.

அவன் சொன்ன முறையில் இதை தெய்வீக காதல் என்று நம்புகிற பிரகாஷ்ராஜ் இருவரையும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் பதிவுத்திருமணம் செய்ய வைத்து அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து விட்டு அமெரிக்கா சென்று விடுகிறார்.

இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு எலியும் பூனையுமாக இருப்பதும் பிறகு மெல்ல நண்பர்களாவதும், எப்போதுஅவர்களுக்குள் காதல் நுழைந்தது என்பதே தெரியாமல், படம் முடிய ஒரு விநாடி இருக்கும் போது தம் காதலை வெளிப்படுத்திக்கொள்வதும்..... சுபம்.

சில கிளிஷேவான விஷயங்களை தவிர்த்திருக்கலாம். நான்கு இளைஞர்கள் என்கிற போது ஏற்னெவே எப்படி முந்தைய படங்களில்காட்டப்பட்டதோ அதே மாதிரியான பாத்திர அமைப்புகள். கதாநாயகன் மாதிரியான ஒருத்தன் (பிரசன்னா), அவனின் நண்பன்மாதிரியான பாதி ஹீரோ (ஜெய்வர்மா - பழைய நடிகர் ஆனந்தனின் மகன்), பார்க்கும் பெண்களையெல்லாம் சளைக்காமல்காதலிக்கும் வித்தியாசமாக குணாதியசத்தை உடைய ஒருவன் (கூத்துப் பட்டறை நடிகர்), காமெடிக்கென ஒருவன் (மாஜிக் லேண்டன்குழுவைச் சேர்ந்தவர்), அதே போல் பணக்கார மற்றும் வில்ல அப்பா. அமெரிக்க மாப்பிள்ளை. (வழக்கமாக கிளைமாக்சில்வருபவர் இதில் அம்மாதிரி செய்யாதது ஒரு ஆறுதல்)

சினிமாவில் சேர்ந்து வெற்றி பெற துடிக்கும் இளைஞர்கள். அவர்களிடம் வாடகை வாங்க பாடுபடும் ஆனால் அவர்களுக்குஉதவும் வீட்டுக்காரர். ஹீரோ தன் கஷ்டகாலத்தில் விற்காத சைக்கிளை ஹீரோயின் பரீட்சைக்கு பணம் கட்ட விற்று விடும்காரியம். லோ-பட்ஜெட்டினால் சில இடங்களிலேயே மாற்றி மாற்றி வருகிற காட்சியமைப்புகள். இப்படி சில. ஆனால்சுவாரசியமான திரைக்கதையினால் இந்தக் குறையெல்லாம் மறைந்து போகிறது.

பிரசன்னா அந்த அப்பாவி உதவி இயக்குநர் பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்துகிறார். கதை மிகவும் பலமாக இருக்கும்பட்சத்தில் இது போல பிரபலமாகாதவைரையே தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவர் அந்த கதாபாத்திரமாக நம் கண்முன்நிற்பார். பிரகாஷ்ராஜிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் போதெல்லாம் நன்றாக செய்திருக்கிறார். நாயகியிடம், நாம் நண்பர்களாகஇருக்கலாம் என்று சொல்லும் காட்சியமைப்பில் சிறப்பாக செய்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் - இந்த அபார மனிதருக்கு சரியான தீனி போடும் பாத்திரங்கள் இன்னும் அமையவில்லை என்றுதான்தோன்றுகிறது. பிரசன்னாவை கேவலமாக பார்க்கும் அந்த முதல் காட்சியில் வெளிப்படுத்தும் சில முகக்குறிப்புகள் அவர்திறமைக்கு சான்று. அதே போல் பிரசன்னா சொல்லும் பொய்யை நம்பி அனுபவித்து கேட்பது சிறப்பான நடிப்பு.

நவ்யா நாயர் - வழக்கமாக தொப்புளாட்சியாக வரும் நாயகிகளுக்கு மத்தியில் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார். இவர்பிரசன்னாவை காதலிப்பதாக எந்தவொரு காட்சியிலும் குறிப்பால் உணர்த்தாமல் கிளைமாக்சின் போது அவரின் மீது சாய்ந்துகொள்வது அபத்தமாய் இருந்தாலும் கவிதைத்தனமாய் இருக்கிறது.

விஜய்யின் வசனங்கள் மிக யதார்த்தமான நகைச்சுவையுடன் இருக்கிறது. சில உதாரணங்கள்: "ஏம்ப்பா, புரொடக்ஷன் மேனஜர், அந்தடாக்டர் வேஷத்துக்கு கமலாம்மாவை கூட்டிகினு வரச் சொன்னேனே, போய்ப் பாத்தியா?"

"ஒண்ணுக்குப் பத்து தரம் போனேன்............."

"நீ ஒண்ணுக்குப் பத்து தரம் போனியன்னா அது டயாபடீஸா இருக்கும். போய் அந்தம்மாவ வரச் சொல்லு;"

----

"ஏம்ப்பா உன் காதலை அவ கிட்ட சொல்ல மாட்டேன்ற. சினிமால காதல சொல்லாத முரளி கூட இப்பல்லாம் தன் காதலைடக்குன்னு சொல்லிடறார்."

----

"500 ரூபா கொடுத்தா செல்போன் கொடுத்தாலும் கொடுத்தடறாங்க... இவன்க தொல்ல தாங்கல"

ரமேஷ் விநாயகத்தின் பாடல் இசைகளில் ரோஜா ரஹ்மானின் Freshness தொந்கிறது. பின்னணி இசையும்மோசமில்லை. அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும். பல லாஜிக் ஒட்டைகள் இருந்தாலும் சாமர்த்தியமான வசனங்களின்மூலம் மெழுகி விடுகிறார்கள். பனிப்புகையில் பார்த்த தன் கனவுக் காதலியை, நிஜத்தில் கொசுமருந்துப் புகையின்நடுவில் பார்க்கும் காட்சிகளில் இயக்குநரின் திறமை தெரிகிறது.

ஆபாசப் படங்கள் என்று சொல்லப்படுகின்றவற்றை தியேட்டரில் மெனக்கெட்டுப் பார்த்துவிட்டு குய்யோமுறையோ என்று அலறிக் கொண்டும், இந்த மாதிரியான நல்ல படங்களை திருட்டி வி..சி.டியிலோ (படத்தில்இதைப்பற்றியும் ஒரு கமெண்ட் வருகிறது) தொலைக்காட்சியில் பண்டிகை நேரங்களில் பார்த்துக் கொள்ளலாம்என்று இருப்பதும் இன்னும் பல நல்ல சினிமாக்கள் வருவதை நாசமாக்கும்.

அழகிய தீயே: மூச்சுத்திணறும் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு ஆக்சிஜன் சிலிண்டர்

Read more about: azhakiyatheeye, cinema, jore, review
Please Wait while comments are loading...