Bad Girl Review: பேட் கேர்ள் விமர்சனம்.. வெற்றி மாறன் பட்டறையில் வளர்ந்த வர்ஷாவின் முதல் படம் எப்படி இருக்கு?
சென்னை: அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி, பெரும் போராட்டத்திற்கு பின்னர் வெளியாகியுள்ள படம் பேட் கேர்ள். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்க, அனுராக் உடன் இணைந்து வழங்கி உள்ளார். படம் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
படத்தின் கதை, ஒரு பெண் தனது டீன் ஏஜில் இருந்தே சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறார். அதற்கு அவரது குடும்பமும் இந்த சமூகமும் எப்படி எல்லாம் தடைகள் விதிக்கிறார்கள், அந்த தடைகளை எல்லாம் அவர் எப்படி உடைக்கிறார் என்பது போல வழக்கமான திரைக்கதையில் காட்டாமல், தனக்கான சுந்தந்திரத்தை தான் அடைய வேண்டும் என்றால் தனது சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பவர்களைக் விட்டு விட்டு வெளியேற வேண்டும் என முடிவெடுத்து வெளியேறுகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.

படத்தின் முதல் ஃபேர்மில் இருந்து கடைசி ஷாட் வரை ஒரு பெண்ணின் உலகத்தை, மனதை அப்பட்டமாக காட்டியுள்ளது. மொத்த படமும் பெண்ணின் சுதந்திரத்தை மட்டுமே பேசும் படமாக உள்ளது. பருவத்தில் வரும் காதல், அதன் பின்னர் பாலியல் ரீதியான உணர்வுகளை தனது காதலனுடன் பூர்த்தி செய்து கொள்வது என மொத்த படத்தையும் பெண்ணின் பார்வையில் இருந்து படம் பிடித்துக் காட்டுகிறது, பிரின்ஸ் ஆண்டர்சன் மற்றும் ப்ரீதா ஜெயராமனின் கேமரா.
எது சுந்ததிரம்: நிர்பந்திக்கப்படுகிற வாழ்க்கையில் சுந்தந்திரமும் மகிழ்ச்சியும் கொஞ்சம் கூட இருக்காது. அதில் இருந்து வெளியேறினால் தான் நிம்மதியும் சுந்தந்திரமும் கிடைக்கும் என மொத்த படத்தின் கதையையும் ஒரு குழந்தை காட்சியை வைத்து பளிச்சென சொல்லிவிட்டார் இயக்குநர் வர்ஷா. சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஆணுக்கு கொடுக்கும் சுந்தந்திரத்தை பெண்ணுக்கு தர மறுக்கிறது. அதை பெண்ணே எடுத்துக் கொண்டால் அவளை குற்றவாளியாக்கி விடுகிறது.

பெண்ணின் பார்வை: ஒரு ஆண் பெண்களை விரட்டி விரட்டி காதலித்த பல படங்கள் வெளியாகியுள்ளது. ஒரு பெண் தனது காதலை வெளிப்படுத்தும் படங்களும் வெளியாகியுள்ளது. ஆனால் இவையெல்லாம் ஒரு ஆண் இயக்குநரால், ஒரு ஆண் கதாசிரியரின் பார்வையில் இருந்து விளக்கப்பட்ட காட்சிகள். பேட் கேர்ள் படம் அப்படி இல்லை. வர்ஷா தான் பார்த்த வளர்ந்த உலகத்தை படமாக்கியுள்ளார். அதுதான் முதலில் இந்த படத்திற்கான பிளஸ் பாய்ண்ட். இவர் வேறு ஒரு பெண்ணின் உலகத்தை புரிந்து கொண்டு படமாக்கி இருந்தால் படம் இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்.
மொத்தத்தில் படம்: படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றால் அது அஞ்சலி சிவராமனின் அட்டகாசமான நடிப்பு. அதேபோல் பிரின்ஸ் ஆண்டர்சன் மற்றும் ப்ரீதா ஜெயராமனின் கேமரா மற்றும் அமித் திருவேதியின் இசை. ஒரு உலக சினிமா பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது. படத்தை பார்த்துவிட்டு இதுதான் வர்ஷாவின் முதல் படமா என்று கேட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தனது திரைக்கதையில் அவ்வளவு நேர்த்தி. சமத்தாக எல்லாம் இருக்க முடியாது என முடிவெடுத்த பின்னர் எதார்த்தம் என்ற சங்கிலியை நோக்கி சம்மட்டியால் அடிப்பதால் இவர் பேட் கேர்ள். சுதந்திரத்தை பறித்துக் கொண்டு சமத்து என்ற சர்ட்ஃபிகேட் கொடுக்க தயாராக இருப்பவர்களுக்கு எல்லாம் இவள் பேட் கேர்ளாகவே இருந்துவிட்டு போகட்டும்.


Click it and Unblock the Notifications











