»   »  பாகுபலி.. பேசித் தீராத பிரம்மாண்டம்!

பாகுபலி.. பேசித் தீராத பிரம்மாண்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
4.5/5

பாகுபலி... இந்த ஆண்டு முழுவதும் பேசினாலும் தீராத பிரமிப்பு இந்தப் படம்.

டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும் செய்நேர்த்திக்கும் ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது.


இதோ.. நம்மிடமே ஒரு அழுத்தமான அற்புதமான உதாரணம் இருக்கிறது... ராஜமவுலியின் பாகுபலி!


Bahubali.. Grandeur Unlimited!

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனையோ மகா சாகசக் கதைகள் புதைந்து கிடக்கின்றன. கரிகாலன்கள், ராஜராஜன்கள், மருது சகோதரர்கள், மகாபலிகள், புலிகேசிகள், அசோகர்கள், கனிஷ்கர்கள் என வம்சங்களைத் தோண்டத் தோண்ட கிடைக்கும் கதைகளுக்கு நிகராக எத்தனை அதியுச்சக் கற்பனைகளும் இருக்க முடியாது. அந்த அழுத்தமான நம்பிக்கைதான் இந்த பாகுபலி.


ஈர்ப்பான காட்சிகள், சம்பவங்களற்ற பிரம்மாண்டத்துக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. ஆனால் பாகுபலியில் ராஜமவுலி காட்டியிருக்கும் பிரம்மாண்டம் கதையோடும் காட்சிகளோடும் இயல்பாகப் பொருந்திப் போவதால் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறோமே தவிர, பிரம்மாண்டத்தை மட்டும் தனித்துப் பார்க்க முடியவில்லை.


Bahubali.. Grandeur Unlimited!

உலகிலேயே பிரமாண்டமானது, அழகு மிக்கது இயற்கைதான். அந்த இயற்கையை இன்னும் பேரழகுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள் ராஜமவுலியும் அவரது ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரும். அதிரப்பள்ளி அருவியை நேரில் பார்த்தபோது கூட வராத ஆச்சர்யமும் ஆனந்தமும் இந்தப் படத்தில் கிடைத்தது.


கோட்டையும் கொத்தளமும் போர்க் கருவிகளும் போர்ப் படைகளும்... ஒரு கால எந்திரத்தில் பயணித்து பாகுபலியின் காலத்துக்கே போன உணர்வைத் தந்தன. எங்கும் சிறு பிசிறு கூட தெரியாத அளவுக்கு அத்தனை நேர்த்தியாக காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார்கள் ராஜமவுலி அன்ட் டீம். ஏ.. அப்பா.. எத்தனை தத்ரூபமான ரத்தமும் சதையும் தெறிக்கும் மாபெரும் யுத்தகளம்!


Bahubali.. Grandeur Unlimited!

இந்தப் படத்தில் நடித்த யாரும் அந்தப் பாத்திரத்தை மீறி இம்மியளவுக்குக் கூட மிகையாக நடிக்கவில்லை. பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாஸர், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருவருமே வாழ்நாளில் சொல்லிக் கொள்ளும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். தமன்னாவின் அழகையும் நடிப்பையும் பாராட்டி இன்னும் நாலு பாரா எழுதலாம்.


ஒளிப்பதிவாளரின் தோளில் கைபோட்டுக் கொண்டே வேலை வாங்கியிருப்பார் போலிருக்கிறது இயக்குநர். ஒவ்வொரு காட்சியிலும், இப்படி ஒரு கோணத்திலும் இதைப் பார்க்க முடியுமா என்ற பிரமிப்பு மேலோங்குகிறது. எம்எம் கீரவாணியின் இசை இந்தப் படத்தின் காட்சிகளுக்கு இன்னும் உயிரோட்டம் தருகிறது.


Bahubali.. Grandeur Unlimited!

2.40 மணி நேரப் படம்... ஆனால் 'என்னங்க.. படம் அதுக்குள்ள முடிஞ்சிருச்சே... அந்த இன்னொரு பார்ட் காட்சிகளையும் சேர்த்தே ரிலீஸ் பண்ணிருக்கலாம்!' என்று சிலர் அடித்த கமெண்ட்தான் இந்தப் படத்துக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டாக இருக்கும் என நம்புகிறேன்.


நூறாண்டு கண்ட இந்திய சினிமாவுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் எஸ் எஸ் ராஜமவுலி.


அடுத்த பாகம் எப்போது வரும்? ஆவலுடன் காத்திருக்கிறது இந்திய சினிமா!

English summary
SS Rajamouli's Bahubali is not just a movie, it is a visual extravaganza with perfect making that makes everyone unforgettable experience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil