Balti Review: பல்டி விமர்சனம்.. ஷேன் நிகாமின் ’கில்லி + சுப்ரமணியபுரம்’.. படம் வொர்த்தா? வேஸ்ட்டா?
சென்னை: மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் திரைப்படம் ஷேன் நிகாமுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அவரது 25வது படமாக உருவாகியுள்ள பல்டி திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகி உள்ளது.
இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகாம், ப்ரீத்தி அஸ்ரானி, சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பல்டி இன்று திரையரங்குகளில் வெளியானது. பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் திடீரென சோடா பாபு எனும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளாரே என ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்காகவே படத்தை பார்க்க கிளம்பியுள்ளனர்.

ஷேன் நிகாமின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பல்டி திரைப்படம் அடுத்த லப்பர் பந்து போல வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எப்படி வந்துள்ளது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
பல்டி கதை: பல்டி அடித்து கபடி போட்டியில் கில்லியாக விளையாடும் உதயன் (ஷேன் நிகாம்), அவருடைய உயிர் நண்பர்கள் 4 பேர். அதில் பஞ்சமி கபடி அணியின் கேப்டனாக வரும் குமார் (சாந்தனு) காசுக்கு ஆசைப்பட்டு சோடா பாபு (அல்போன்ஸ் புத்திரன்) அணிக்காக விளையாட தனது நண்பர்களிடம் கேட்கிறார். ஆனால், முதல் போட்டியில் தோற்ற விரக்தியில் பொற்தாமரை டீமை சேர்ந்தவர்கள் இவர்கள் 4 பேரையும் ஹோட்டலில் வைத்து தீர்த்துக் கட்ட நினைக்க, இந்த 4 பேரும் சேர்ந்து அங்குள்ளவர்களை பந்தாடுகின்றனர்.
ஸ்பீடு வட்டி, ஜம்போ வட்டி என பொற்தாமரை பைரவன் (செல்வராகவன்) அந்த ஏரியாவையே ஆட்சி செய்து வருகிறார். 3 மடங்கு அதிக பணம் தருகிறேன் என்னோட அணிக்காக விளையாடுறீங்களா என கேட்டதும், ஷாந்தனுவின் பணத்தாசை காரணமாக அவர்கள் அந்த அணிக்காக விளையாட அல்போன்ஸ் புத்திரன் காண்டாகிறார்.
இதனால், ஏற்படும் பிரச்னை காரணமாக ஏகப்பட்ட சூழ்ச்சிகள் உருவாகின்றன. கடைசியாக, காதலிக்காகவும் அவரது குடும்பத்துக்காகவும் ஹீரோ உதயன் பைரவனையே எதிர்க்க கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் பல்டி படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஷேன் நிகாம் ஹீரோவை போல எந்தவொரு பந்தாவோ, பில்டப்போ இல்லாமல் அப்படியே உதயன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் கருப்பு மை பூசிக் கொண்டு பணக்கார வீட்டு ஒன்றில் டொனேஷன் கேட்க செல்ல தெரியாமல் தடுக்கி விழும் போது, கை தவறி அந்த வீட்டின் சுவற்றில் பட்டு விட, பிச்சைக்கார நாய்ங்களா என திட்டியதும், சிறுவர்கள் பதிலுக்கு திட்ட பணம் கொடுக்காமல் அவர்களை அடித்து விரட்டுகின்றனர். அதனை தட்டிக் கேட்கும் சமூக போராளி ஹீரோ போல அறிமுகமாகும் உதயன் அதன் பின்னர் அந்த ஏரியா பக்கமே போகாமல் கதை கபடி களத்திற்கும், செல்வராகவனின் அடியாளாக மாறும் டிராக்கிலும் பயணிக்கிறது.
கிஸ் படத்தில் கலர்ஃபுல் நாயகியாக வந்த ப்ரீத்தி அஸ்ரானி பல்டி படத்தில் கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு பூக்கார பெண்ணாக வந்து போகிறார். அவருக்கு படத்தில் ஒரே ஒரு நல்ல சீன் தான் இருக்கு. அங்கே தான் ஹீரோவுக்கும் செல்வராகவனுக்கும் பகை உண்டாகிறது. சாந்தனு காசுக்காக ஆசைப்பட்டாலும், கடைசி வரை தனது நண்பர்களுக்கு துரோகம் செய்யக் கூடிய சூழ்நிலையிலும் அவர் என்ன செய்கிறார் என்கிற விதத்தில் கொண்டு சென்றதும் அதற்கு அவர் கொடுத்த நடிப்பும் படத்துக்கு பெரிய பலம்.
அதிகா வட்டியை ஏற்றிவிட்டு பணம் தராதவர்களை அம்மணமாக்கி அசிங்கப்படுத்தும் கொடூர வில்லனாக செல்வராகவன் வருகிறார். கடைசியில், அவருக்கே இந்த கதியா என்பது ரொம்பவே ஷாக்கிங்காக இருந்தாலும், படத்திற்கு பக்காவாக உள்ளது.
பிளஸ்: சாய் அபயங்கரின் முதல் படமாக பல்டி அமைந்துவிட்டது. ஏகப்பட்ட பட்ங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இதுதான் அவரது இசையில் வெளியாகி உள்ள முதல் படம். வித்தியாசமான பின்னணி இசைகளை அமைத்துள்ளார். ஜாலக்காரி, மாயா ஜாலக்காரி பாடல் அருமை. கடைசி வரை படத்தின் டெம்போ குறையும் இடத்தில் கூட அதை காப்பாற்றிக் கொண்டு செல்லும் வேலையை செய்து படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளார் சாய் அபயங்கர்.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே. புல்லிக்கலின் கேமரா வொர்க் பிரமாதம். ஹெவியாக லைட்ஸ் பயன்படுத்தாமல் இயல்பாகவே காட்சிகளை கடத்திய விதம் அருமை. சண்டைக் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக உள்ளது. ஆரம்பத்தில் கில்லி படம் போல ஆரம்பிக்கும் படம் அப்படியே கொஞ்சம் சுப்ரமணியபுரம் போல மாறி கடைசியில் வழக்கமான படமாகவே முடிவடைகிறது.
மைனஸ்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்போன்ஸ் புத்திரனின் சோடா பாபு பெரிதாக சோபிக்கவில்லை. ஜி மா என வரும் நடிகை எதுக்கு இப்படி டபுள் கேம் ஆடுகிறார். அவருடைய நோக்கம் என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆங்காங்கே காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்திவிட்டு அப்படியே விட்டு அடுத்த சீனுக்கு தாவி விடுவது ஏன்? என்கிற குழப்பம் நிலவுகிறது. படத்தின் கதை இடைவேளை வரை தொடங்காமல் கொடுக்கப்பட்ட கேரக்டர்களுக்கான பில்டப் எல்லாம் வீணாக போனது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது. சினிமா ஃபைனான்ஸர் யாராவது ஸ்பீடு வட்டிக்கு பணம் கொடுத்து தொல்லை செய்கிறார்களா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
சோடா கம்பெனி சண்டைக் காட்சியும் அல்போன்ஸ் புத்திரனிடம் ஹீரோ ஷேன் நிகாம் பேசும் அந்த நாய் வசனமும் நச்சென இருக்கு. ஆனால், அந்தளவுக்கு மெயின் வில்லன் செல்வராகவனுடன் எந்தவொரு வலுவான காட்சியும் இல்லாமல் முடிவடைவது வருத்தம் தான். ஆனால், படம் முழுக்க பரபரவென கடைசி வரை கொண்டு சென்று ரசிகர்களை பார்க்க வைத்து விடும் இடத்தில் பல்டி அடித்து பாஸ் ஆகிறது படம்..


Click it and Unblock the Notifications











