twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பில்லா 2 - ஸ்பெஷல் விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம்.

    மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது.

    படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள்.

    படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!

    கதையின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் ஈழத்து அகதியாக அறிமுகமாகும் அஜீத்துக்கு, ஒரே ஒரு அக்கா. ஆனால் அவருக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. ஒரு சர்ச்சில் மகளுடன் வசிக்கிறார்.

    அகதி முகாமில் அஜீத்துக்கு தொடர்ந்து தொல்லை தருகிறார் ஒரு இன்ஸ்பெக்டர். நாயகனில் வரும் போலீஸ்காரர் ரேஞ்சுக்கு அவர் இம்சை தொடர்கிறது. ஒரு வைரக் கடத்தலில் அஜீத்தை சிக்க வைத்து போட்டுத் தள்ளப் பார்க்கிறார். ஆனால் சுதாரித்துக் கொள்ளும் அஜீத்தும் அவர் நண்பரும் போலீஸ்காரர்களை போட்டுத் தள்ளிவிட்டு, வைரத்தை உரிய நபரிடம் (இளவரசு) ஒப்படைக்க, இவர்களின் தொழில் நேர்மையைப் பாராட்டி தொடர்ந்து வேலை தருகிறார்.

    ஆனால் அடுத்த கட்டத்துக்குப் போக முயலும் அஜீத், போதை மருந்து கடத்தல், சட்ட விரோத ஆயுத பிஸினஸ் என்று போகிறார். மும்பை தாதா சுதன்ஷாவுடன் சேருகிறார். அடுத்த சீனிலேயே மும்பையிலிருந்து ஜார்ஜியாவுக்கு பயணமாகிறார்... (கடத்தல் பிஸினஸை (?) அடுத்த லெவலுக்கு கொண்டு போறாங்களாம்!)

    அங்கே அட்டகாசமான வில்லன் வித்யூத் ஜம்வாலுடன் முதலில் நட்பாகி பின்னர் விரோதியாகிறார். விரோதிகள் அனைவரும் இவரை போட்டுத் தள்ள முயல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், மற்றவர்களை டப் டப்பென்னு சுட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் ஒரு இந்திக்கார எதிரி தானே முன்வந்து என்னை சுட்டுக் கொல்லு என்கிறார், நல்ல தமிழில்! இனி சுட எதிரிகளே இல்லை என ரசிகர்களே முடிவு கட்டிக் கொண்டு எழ தயாராகும்போது, நல்ல வேளை படமும் முடிந்து போகிறது!

    இந்தப் படத்தின் தவறுகளுக்கு பெரும்பான்மைப் பொறுப்பாளி இயக்குநர் சக்ரி டோலெட்டிதான். படம் முழுக்க அத்தனை ஓட்டைகள். லாஜிக் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறது திரைக்கதை.

    அதிலும் அஜீத் ஒரு ஆயுத அசைன்மென்டை போலீசாரிடமிருந்து மீட்கும் காட்சி அபத்தத்தின் உச்சம்.

    பார்வதி ஓமணக்குட்டனை எதிரிகள் தூரமாய் நிற்கவைத்துவிட்டு, புல்வெளியில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விர்விர்ரென்று வருகின்றன பத்து கார்கள். பார்வதியை சுற்றிச் சுற்றி வர, அஜீத் சர்வ சாதாரணமாக கதவைத் திறந்து பார்வதியை உள்ளே உட்கார வைத்துக் கொண்டு போய்விடுகிறார். நீட்டிய துப்பாக்கி நீட்டியபடி, அடியாட்கள் தேமே என்று நிற்கிறார்கள். படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறது!

    இரண்டு காட்சிகளை உருப்படியாக எடுத்திருக்கிறார்கள். ஒன்று மராட்டிய முதல்வரும் அஜீத்தும் பேசிக் கொள்ளும் இடம்.

    அடுத்து, அந்த பாட்டில் ஃபைட்!

    அஜீத் நடந்து வந்தாலே போதும்... தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, நிதா....னமாக வசனம் சொன்னால் போதும்... சூப்பர் டான் என்று யாரோ தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டான்களின் உலகம் என்ற உட்டாலக்கிடி கற்பனையை மறந்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் உலகத்தைப் பாருங்கப்பா. கோட் சூட், ஏறி மிதிக்க பிகினி பெண்கள் என்த பந்தா இல்லாமல் குடிசையில் கூட ஒரு கொடிய டான் குடியிருப்பான். சொந்த அக்கா செத்துப் போய்விட்டதாக போனில் செய்தி வர, ஏதோ சன்நியூஸில் செய்தி கேட்டமாதிரி அவர் பாட்டுக்கு தேமே என்று போகிறார் அஜீத்!

    ஆனால், அந்த ஹெலிகாப்டர் சேஸிங் சான்ஸே இல்லை. அஜீத்துக்கு மகா தைரியம்!

    பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாம். எண்ணி நாலே முக்கால் சீன்கள் எட்டிப் பார்த்துவிட்டு இடைவேளையில் செத்துப் போகிறார். அந்த வகையில் இன்னொரு ஹீரோயின் புருனா அப்துல்லா பரவாயில்லை. க்ளைமாக்ஸ் வரை தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில் வத்தலாக வந்து கடைசியில் சாகிறார்.

    அஜீத்துடன் நண்பராக வரும் நடிகர் அம்சமாக நடித்திருக்கிறார். அதேபோல சுதன்ஷு, வித்யூத் ஜம்வால் இரண்டு வில்லன்களுமே பின்னி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சுதன்ஷுவின் பாடி லாங்குவேஜ், நடிப்பு அனைத்துமே அபாரம்!

    தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் உழைப்பு அபாரம். குறிப்பாக ஜார்ஜியா காட்சிகள் கண்களுக்கு வேறு உலகைக் காட்டுகின்றன.

    மகா நிதானமாக நகரும் காட்சிகளை வேகப்படுத்த யுவனும் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருக்கிறார். அந்த பின்னணி தீம் மியூசிக் உண்மையிலேயே நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஒன்றுகூட நினைவில் இல்லை.

    எடிட்டரும் இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு சொதப்பியிருக்கிறார்கள்.

    அடுத்தமுறை அஜீத்திடம் கதை சொல்பவர்கள் தயவு செய்து அந்த 'கோட்'டை சலவைக்கும், துப்பாக்கிகளை பழைய காயலான் கடைக்கும் போடுவது போல ஒரு சீன் வைத்தால் சூப்பராக இருக்கும்!

    English summary
    Amidst of highest expectation, Ajith's Billa 2 fails to impress even the hardcore fans of Ajith Kumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X