»   »  பில்லா- பட விமர்சனம்

பில்லா- பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil
Ajith with Nayanthra
நடிப்பு - அஜீத், நயனதாரா, நமீதா, பிரபு
இசை - யுவன் ஷங்கர் ராஜா
கேமரா - நீரவ் ஷா
இயக்கம் - விஷ்ணுவர்த்தன்
தயாரிப்பு - ஆனந்தா பிலிம் சர்க்யூட் எல்.சுரேஷ்

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற ஜாம்பவன்களின் சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்யும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னாகும்? பில்லா படத்தைப் பார்த்தால் புரியும்.

அஜீத்தும், விஷ்ணுவர்த்தனும், அந்த வித்தையை சரியாக தெரிந்து கொள்ளாமல் பில்லாவில் சறுக்கியுள்ளனர்.

ரஜினியின் பில்லாவை ரீமேக் செய்யப் போய், ஒரிஜினல் பில்லாவில் இருந்த அந்த வேகம், மேஜிக், விறுவிறுப்பு அஜீத்தின் பில்லாவில் மிஸ் ஆகியுள்ளது. மொத்தத்தில் பெரிய 'மெஸ்' ஆகியுள்ளது.

எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ரஜினியின் பில்லாவில் இருந்த அழகு, நேர்த்தியான சீன் வடிவமைப்பு, நடிப்பு, வித்தியாசமான ஐடியாக்கள், எதிலும் அஜீத்தின் பில்லாவில் இல்லை.

பில்லாவின் கதையை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. அமிதாப் பச்சனின் டான் படத்தின் ரீமேக்தான் பில்லா. ஆனால் அமிதாப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிக அழகாக ரீமேக் செய்திருந்தனர் பில்லாவை. ரஜினி, ஸ்ரீபிரியா, தேங்காய் சீனிவாசன், பாலாஜி, மேஜர் சுந்தரராஜன், பிரவீனா ஆகியோரின் ஒப்புமைக்கு அப்பாற்பட்ட நடிப்பு, பில்லாவன் பெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் அஜீத்தின் பில்லா, ரசிகர்களைக் கவரத் தவறியுள்ளது.

அழகாக இருக்கிறார் அஜீத். இருப்பினும் சிறப்பான பாடி லாங்குவேஜை காட்டத் தவறியுள்ளார்.

அமிதாப், ரஜினி, ஷாருக்கான் என மிகப் பெரிய கலைஞர்கள் செய்த கேரக்டரை சரியாக செய்ய முடியாமல் தடுமாறியுள்ளார். காரணம் அந்த கேரக்டர் ஏற்படுத்தி வைத்து விட்ட கனம்.

படம் முழுக்க அங்கும் இங்கும் நடக்கிறார் அஜீத். கூடவே அரை குறை ஆடைகளுடன் நயனதாரா.

டீக்காக டிரஸ் அணிந்து, துப்பாக்கியும், கையுமாக நடை போட்டால் டான் ஆகி விடாது என்பதை விஷ்ணுவர்த்தன் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட டான் போல இல்லாமல் ஒரு மாடல் அழகன் போலவே படம் முழுக்க அஜீத் வருகிறார்.

ஸ்ரீபிரியா செய்த ரோலா இது என்று வெறுப்பேற்றும் வகையில் வந்து போயிருக்கிறார் நயனதாரா. அவரது ஆடைக் குறைப்பு ரசிக்க வைக்க மறுக்கிறது. ஸ்ரீபிரியாவிடம் இருந்த அந்த மெஜஸ்டிக்கான கவர்ச்சியும், நடிப்பும் நயனதாராவிடம் சுத்தமாக வெளிப்படவில்லை.

எந்த இடத்திலிலும் நயனதாராவிடமிருந்து நடிப்போ, டீசன்ட்டான கவர்ச்சியோ வெளிப்படவில்லை. ரசிக்க வைக்கும் வகையிலும் அவரது கேரக்டர் செப்பனிடப்படவில்லை.

நமீதா ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல அவர் வந்து போகிறார். பிரவீனாவின் நடிப்பில் பாதியைக் கூட காண முடியவில்லை.

பாலாஜி செய்த டி.எஸ்.பி. ரோலில் பிரபு. சுத்தமாக பொருந்தி வரவில்லை.

மேஜர் சுந்தரராஜன் ரோலில் ரஹ்மான். அதேபோல அனிலும் இருக்கிறார். இருவரும் சரியாக செய்துள்ளனர். ஆனால் காமெடி ரோலில் சந்தானம் சொதப்பியுள்ளார்.

படத்தின் உண்மையான ஹீரோக்களாக யுவன் ஷங்கர் ராஜாவும், கேமராமேன் நீரவ் ஷாவும்தான் உள்ளனர். இசையில் அசத்தியிருக்கிறார் யுவன். ஆனால் ரஜினி ரசிகர்களின் வேத மந்திரமாக விளங்கும் மை நேம் இஸ் பில்லா பாடலின் ரீமிக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

மொத்தத்தில், ஒரிஜினல் பில்லாவில் இருந்த பல கேர்கடர்கள், நல்ல அம்சங்கள், விசேஷங்கள் அஜீத்தின் பில்லாவில் இல்லை. இருந்திருந்தால் ஒரு வேளை நன்றாக இருந்திருக்கும்.

ஷோலே என்ற மாபெரும் படத்தை ரீமேக் செய்கிறேன் பேர்வழி என்று குத்திக் குதறிய ராம் கோபால் வர்மாவின் நிலையில்தான் விஷ்ணுவர்த்தனும் இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

ரஜினி படம் ஒன்றின் முதல் ரீமேக் இது. ஆனால் அதைச் சொல்லி சந்தோஷப்பட முடியாத அளவுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

மிகச் சிறந்த திறமையும் பெரும் ரசிகர் பட்டாளமும் விடாமல் போராடும் குணமும் மிக்க மிகச் சில நடிகர்களில் ஒருவர் அஜீத். அவரை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் இயக்குனர். இனி நல்ல டைரக்டர்களை தேர்வு செய்வதில் அஜீத் கவனம் செலுத்துவது முக்கியம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil