Bomb Movie Review: ’பாம்’ விமர்சனம்.. அர்ஜுன் தாஸ் அசத்தல் நடிப்பு.. காளி வெங்கட் தான் ஹைலைட்!
சென்னை: இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட் நடிப்பில் இன்று 'பாம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணனுக்கு குரல் கொடுத்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த ஆண்டு அஜித் குமாருக்கே வில்லனாக டபுள் ஆக்ஷனில் குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த நடிப்பு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. ஒரு பக்கம் வில்லனாக நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் அசத்தி வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான பாம் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

'பாம்' படத்தின் கதை என்ன?: இரண்டாகப் பிரிந்த ஒரே கிராமத்தில் இருக்கும் மக்கள், தங்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்கிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் ஒருவர், இந்தப் பிரிவினையை நீக்கி, கிராமத்திற்கு நல்லது செய்ய விரும்புகிறார். ஆனால், அவரது ஆசை நிறைவேறும் முன் அவர் இறந்துவிடுகிறார்.
நள்ளிரவில் கிராமமே ஒன்று கூடி அவரது உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுகிறது. அப்போது, அந்த உடல் "பாம்" போடுகிறது. ஆம், அந்த உடல் வாயு பிரிக்கிறது. கிராம மக்கள் ஆச்சரியப்பட, அவர் உண்மையில் இறந்துவிட்டாரா இல்லையா என்ற குழப்பம் எழுகிறது. இந்தச் சூழலில், ஊர் பூசாரியின் உளறலால், அவருக்கு சாமி வந்திருப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.
ஊர் திருவிழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், வந்திருக்கும் இந்த 'சாமி'யால் கிராமம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதே 'பாம்' திரைப்படத்தின் மையக் கரு.
அர்ஜுன் தாஸ் நடிப்பு எப்படி?: 'பாம்' படத்தில் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அர்ஜூன் தாஸ் தனது வழக்கமான ஆக்சன் பாணியிலிருந்து விலகி, அப்பாவி கதாபாத்திரத்தில் புதுமையாக களமிறங்கியுள்ளார். அவரது நடிப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது.
காளி வெங்கட் பற்றி புதிதாகப் பாராட்டத் தேவையில்லை என்றாலும், இந்தப் படத்தில் அவர் பெரும்பாலான நேரம் பிணமாகவே தோன்றுகிறார். இருப்பினும், உயிருடன் இருக்கும் காட்சிகளில் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாசர் மற்றும் அபிராமி சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
சிங்கம்புலி வில்லத்தனமான சாயலுடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக வரும் ஷிவாத்மிகாவும் சிறப்பான நடிப்பைப் பதிவு செய்துள்ளார். படத்தில் தோன்றிய புதிய நடிகர்களில் ஒரு சிலரைத் தவிர, அனைவரும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
பிளஸ்: இயக்குநர் விஷால் வெங்கட் மீது சினிமா ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அவரது முந்தைய படமான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பலரை ரசிக்க வைத்தது. இந்தப் படத்தில் அவர் பேச நினைக்கும் விஷயம் பாராட்டுதலுக்குரியது. ஆரம்பம் முதல் இறுதி வரை, தான் சொல்ல நினைத்த கருத்திலிருந்து விலகாமல், கமர்ஷியலை அதிக அளவில் புகுத்தாமல் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். இதற்காக அவருக்குப் பாராட்டுகள்.
மைனஸ்: இருப்பினும், கதை சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், அந்த 'பிணத்தின்' மர்மத்தைத் தாண்டி, கதையில் விறுவிறுப்பை சேர்க்க வேறு எதுவும் இல்லாதது படத்தைக் கொஞ்சம் பலவீனப்படுத்துகிறது. களக்களம் சுவாரசியமாக இருந்தாலும், நடக்கும் நிகழ்வுகள் சற்று சத்தில்லாமல் நகர்கின்றன.
கிராமத்தை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், நிலப்பரப்பைத் தெளிவாகக் காட்டாதது, கிராம மக்கள் பிரிவினையால் படும் வேதனைகள் மற்றும் இழப்புகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தத் தவறியது போன்ற காரணங்களால், படம் அதன் முழு வீச்சையும் பெறத் திணறுகிறது. மக்களுக்குள் இருக்கும் வேற்றுமையின் இறுக்கத்தைக் காட்டத் தவறியது, பார்வையாளர்கள் அந்த மக்களுக்காக வருந்த முடியாமல் செய்துவிடுகிறது. சில குறைகளை கடந்து பார்த்தால் இந்த புதிய முயற்சி ரசிகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











