»   »  பிரம்மன் - விமர்சனம்

பிரம்மன் - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சசிகுமார், லாவண்யா, சந்தானம், சூரி, நவீன் சந்திரா, ஜெயப்பிரகாஷ், பத்மப்ரியா

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: ஜோமோன் டி ஜார்ஜ்

தயாரிப்பு: கே மஞ்சு & ஆன்டோ ஜோசப்

இயக்கம்: சாக்ரடீஸ்

'நண்பன் ஜெயிச்சா நாமே ஜெயிச்ச மாதிரி' - இந்த ஒன்லைனை வைத்து சசிகுமார் டீம் படைத்துள்ளதுதான் பிரம்மன்.

எவ்வளவு மொக்கையான காட்சிகள் என்றாலும்... நட்பு, நட்புக்காக விட்டுக் கொடுத்தல், அந்த விட்டுக் கொடுத்தலை கவுரவித்தல் என்று வரும்போது மனசு நெகிழ்ந்துவிடும். பிரம்மனும் இப்படித்தான்.. மொக்கை - நெகிழ்ச்சிக் காட்சிகள் கலந்து கட்டிய சினிமா!

சசிகுமாருக்கும் அவர் நண்பன் நவீன் சந்திராவுக்கும் சின்ன வயசிலிருந்தே சினிமாதான் ஆதர்சம். நான்காவது படிக்கும்போது திருட்டுத்தனமான ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வரும் இருவரையும் போலீஸ் பிடிக்கிறது. இனி சசிகுமார் சகவாசம் வேண்டாம் என்று மகனை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் போகிறார்கள் நவீனின் பெற்றோர். பின்னர் தெலுங்கில் பெரிய இயக்குநராகிவிடுகிறார் நவீன்.

அப்பாவிடம் உதவாக்கரை பட்டம் பெற்றுவிட்ட சசிகுமார், கோவையில் ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து, நண்பன் சந்தானத்துடன் சேர்ந்து நஷ்டத்தில் நடத்தி வருகிறார். இடையில் சசிகுமாருக்கும் கல்லூரி மாணவி லாவண்யாவுக்கும் காதல் மலர்கிறது.

சசிகுமாரின் தியேட்டர் வரிப் பிரச்சினையில் சிக்கி இழுத்து மூடப்படுகிறது. பணம் தர ஆளில்லை. அப்போதுதான் மதன்குமார் என்ற பெயரில் பெரிய இயக்குநராக இருக்கும் நண்பனின் நினைவு வருகிறது சசிகுமாருக்கு. சென்னையில் இருக்கும் நண்பனைச் சந்தித்து பண உதவி கேட்க புறப்படுகிறார் சசி. போன இடத்தில் நண்பனைச் சந்திக்க முடியவில்லை.

அப்போது பரோட்டா சூரி கொடுத்த யோசனைப்படி நண்பன் அலுவலகத்துக்குப் போகிறார். ஆனால் தவறுதலாக ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்துக்குப் போய்விட, அங்கே டைரக்டர் மதன்குமார் உதவியாளர் என்று தப்பாக நினைத்து சசிகுமாரிடம் கதை கேட்கிறார் தயாரிப்பாளர். சசியும் தன் சொந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆஹா அருமையான கதை என்று கூறி, அட்வான்ஸ் தருகிறார் தயாரிப்பாளர்.

சரி, வாய்ப்பை விடுவானேன் என்று நினைத்து இயக்குநராக ஒப்புக் கொள்கிறார் சசிகுமார். ஆனால் பின்னர், இவர் மதன்குமார் உதவியாளர் இல்லை என்ற உண்மை தெரிய வர, வாய்ப்பு பறிபோகிறது. ஆனால் அதே கதையை தன் முதல் தமிழ் படமாக எடுக்க விரும்புகிறார் மதன்குமார். அதை நேரில் வந்து கேட்கிறார். தான்தான் அந்த சின்ன வயசு நண்பன் என்ற உண்மையை மறைத்து, கதையை தாரை வார்க்கிறார் சசி. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தன் காதலியையும் தாரை வார்க்கிறார்.

நட்புக்காக இவ்வளவு தியாகம் செய்த சசிகுமாருக்கு, அந்த தியாகத்துக்கான கவுரவம் கிடைத்ததா.. இயக்குநர் மதன்குமார் தன் பால்ய நண்பன் சசிகுமாரை அடையாளம் தெரிந்து கொண்டானா? என்பது க்ளைமாக்ஸ்.

விட்டால் மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போகிற கதை. ஆரம்பக் காட்சிகள் பல அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளன. சசிகுமார் படங்கள் சினிமாத்தனமாக இருந்தாலும், அதில் யதார்த்தத்தின் கலவை சரிபாதியாக இருக்கும். அதுதான் அவரது வெற்றிக்கான பார்முலா. இந்தப் படத்தில் சினிமாத்தனம் ரொம்பவே அதிகம்.

அதே நேரம், சூரியின் பாத்திரப் படைப்பு. நண்பனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை கொண்டாடாமல், எப்படியெல்லாம் ஏகடியம் செய்வார்கள், சொதப்பி வைப்பார்கள் என்பதை மிகையின்றி காட்டியிருக்கிறார்கள். இன்று நம் கண்முன்னே நடமாடும் பல சினிமா மனிதர்களுக்கு ஒரு சாம்பிள் இந்த கோ டைரக்டர் சூரி!

சசிகுமார் தன்னை ஒரு யூத்புல் நாயகன் என்று காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. நண்பனுக்காக அவர் விட்டுக் கொடுக்கும் காட்சிகளில் அத்தனை இயல்பாக நடிக்கிறார். நட்பை நேசிக்கும் மனிதர். க்ளைமாக்ஸுக்கு முன் தங்கைக்கும் அவருக்குமான அந்த ஒரு காட்சி.. அருமை, அழகு, அத்தனை பாந்தம்!

லாவண்யா பார்க்க அம்சமாக இருக்கிறார். ஆனால் நடிக்க வாய்ப்பில்லை. அதுவும் க்ளைமாக்ஸில் அவர் நிலைமை அந்தோ பரிதாபம். காதலனுக்கும் கட்டிக்கப் போகும் கணவனுக்கும் இடையே ஒன்றுமே புரியாமல் அல்லாட வைத்திருக்கிறார்கள்.

வேண்டா வெறுப்பாக நண்பனுடன் சேர்ந்து தியேட்டர் நடத்தும் பாத்திரம் சந்தானத்துக்கு. அவர் காமெடியும் வேண்டா வெறுப்பாகத்தான் இருக்கிறது. பின் பாதியில் வரும் சூரி பரவாயில்லை. இருவரிடமுமே ஒரு வஞ்சம் இருந்து கொண்டே இருப்பதால், அவர்களின் நகைச்சுவை எடுபடவே இல்லை!

ஜெயப்பிரகாஷ், தங்கை பாத்திரத்தில் வரும் மாளவிகா, நண்பனாக வரும் நவீன் சந்திரா, வனிதா, ஞானசம்பந்தம் என அனைவரின் நடிப்பும் மிகையின்றி இருப்பது சிறப்பு.

இன்று திரையரங்குகள் உள்ள பரிதாப நிலையை காட்சிப்படுத்திய விதம் மனசை பாரமாக்குகிறது. அந்த இறுதிக் காட்சியில் குசேலன் வாடை!

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஆனால் இன்னும் சச்சின் வாடை மிச்சமிருக்கிறது. புதுசா ப்ரெஷ்ஷா ஏதாவது பண்ணுங்க டிஎஸ்பி! ஜோமோனின் ஒளிப்பதிவு பிரமாதம். அதுவும் அந்த வெளிநாட்டு லொகேஷன்கள் செம ச்சில்!

படத்தில் ஒரு காட்சி. சூரியிடம் கதை கேட்க வருவார் ஒரு தயாரிப்பு மேலாளர். 'கதை எப்படி இருக்கணும்னா... முதல் பாதி சிட்டி சார்... அப்படியே வில்லேஜ் போயிடறோம். அதுல காதல் இருக்கணும், நல்ல ஆக்ஷன் வரணும்.. அப்படியே கொஞ்சம் காமெடி... ப்ரெண்ட்ஷிப்.. ஸாங்கெல்லாம் பாரின்ல... அப்படி ஒரு கதை சொல்லுங்க," என்று கேட்பார். சூரி வெறுத்துப் போய் கதையே சொல்லாமல் அந்த மேலாளரை விரட்டியடிப்பார்.

பிரம்மன் கதையை தயாரிப்பாளரிடம் சொன்னபோது தான் இருந்த நிலையை நினைத்துதான் இயக்குநர் சாக்ரடீஸ் இப்படி ஒரு காட்சியை வைத்தாரோ என்னமோ... ஆனால் சூரியைப் போல விரட்டியடிக்க தேவையில்லை. ஒரு முறை பார்த்து வைக்கலாம்!

English summary
Sasikumar's new friendship venture Bramman is a romantic comedy with friendship sentiments is a watchable show.
Please Wait while comments are loading...