For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாட்டு எப்படி?

  By Staff
  |

  - ரமேஷ்

  ரொம்ப நாளைக்கு அப்புறமாய் முழுக்க முழுக்க காதல் ரசம் சொட்டும் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர்வைரமுத்து.

  காதலும் காமமும் கலந்த பாடல்கள் தமிழ் இலக்கியத்துக்குப் புதிதல்ல. திருக்குறளின் காமத்துப் பாலிலும்,அகநானூற்றுப் பாடல்களிலும் ஏராளமான அருமையான பாடல்களைக் காண முடியும். ஆனால் தமிழ் சினிமாவில்இத்தகைய பாடல்கள் சற்றுக் குறைவுதான். அடிக்குது குளிரு, என்னை மடக்குது தளிரு என்ற வகைப்பாடல்கள்தான் அதிகம்.

  அவ்வப்போது நல்ல காதல் பாடல்களை அளித்து வரும் வைரமுத்துவுக்கு, செல்லமே படம் சரியான களம்அமைத்துக் கொடுத்திருக்கிறது. மனிதர் காம உணர்வுகளை காதல் தேனில் தோய்த்தெடுத்து அருமையானகவிதைகளாக வடித்துக் கொடுத்துள்ளார்.

  ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் மொத்தம் 5 பாடல்கள். எல்லாவற்றையும் வைரமுத்துதான் எழுதியிருக்கிறார்.காதலிக்கும் ஆசை இல்லை என்ற பாடலைத் தவிர மீதிப் பாடல்கள் எல்லாம் கூடலைப் பற்றிச் சொல்பவை.

  காதலிக்கும் ஆசை இல்லை பாடலை கேகே பாடியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் குரலை மாற்றி பாடும் லாவகம்இவரிடம் இருக்கிறது. காதலியின் சம்மதத்தை வேண்டி காதலன் பாடும் பாடல். இது.

  காதலிக்கும் ஆசை இல்லை

  கண்கள் உன்னைக் காணும்வரை

  உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

  பட்டினத்தார் பாடல் மட்டும்

  பாடம் செய்து ஒப்பித்தேன்

  கண்ணே உன்னை நான் காணும் முன்னால்

  என்கிறான் காதலன். அதற்கு நாயகி,

  கல்லைப் பார்த்து கனியோ

  என்று காதல் செய்வது வீண் வேலை

  என்று பதில் தருகிறாள். வைரமுத்துவின் வரிகளோடு, ஹாரீஸ் ஜெயராஜின் துள்ளல் இசையும், கேகேயின்இளமையான குரலும் சேர்ந்து இந்த பாடலுக்கு கேசட்டின் நம்பர் ஒன் பாடல் அந்தஸ்தை எளிதாகத் தந்துவிடுகின்றன.

  முதலிரவு அனுபவத்தை நாயகி பாடுவதாக அமைந்த பாடல் வெள்ளைக்கார முத்தம். மஹதி பாடியிருக்கிறார்.ஒன்றா இரண்டா பாடலையும், வசீகரா.. பாடலையும் மிக்ஸ் செய்தது போல ட்யூன்.

  உடம்பிற்குள் உயிர் உள்ள

  இடம் கண்டு தொட்டான்

  சிதறிக் கிடந்தேன்

  சேர்த்து எடுத்தான்

  என்ற வைர வரிகளுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் ஏனோ மெனக்கெட்டு இசையமைக்கவில்லை.

  கும்மியடி பெண்ணே கும்மியடி என்று ஒரு பாடல். முதலிரவுக்குப் போகும் நாயகியை அவளது தோழிகள்கிண்டலடித்து பாடுவது போல் அமைந்துள்ளது.

  உடுத்திப் போன சேலை மறந்து

  வேட்டி உடுத்தி நடப்பா

  போகப் போக உத்தி சொல்லிக் கொடுப்பா

  என்று வைரமுத்து கலக்கிக் கொண்டு போக, அதை ஹாரீசும் சந்தியாவும் சேர்ந்து சொதப்பியிருக்கிறார்கள்.அட்லீஸ்ட் தந்தந்தானாவை குறைத்திருந்தாலாவது பாடல் கொஞ்சம் தேறியிருக்கும்.

  ஆரிய உதடுகள் உன்னது என்ற பாடல் கூடல் சுகத்தை காதலனும், காதலியும் பாடுவதாக உள்ளது. ரொம்பநாளைக்கப்புறம் சொர்ணலதாவின் குரல் இந்தப் பாடலில் ஹரிஹரனோடு சேர்ந்து ஒலிக்கிறது. இருவரும் தேர்ந்தபாடகர்கள் என்பதை பாடலைக் கேட்கும்போது உணர முடிகிறது.

  என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று காதலி கேட்கிறாள். காதலன் சொல்கிறான்:

  உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்

  மோகம் வரும் தருணங்களில்

  முனகல் இடும் ஒலி பிடிக்கும்

  கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னும் பின்னும்

  கலையாத கொலுசு ரொம்பப் பிடிக்கும் பிடிக்கும்

  என்று. அசத்தல், வைரமுத்து. இந்தப் பாடலில் பல்லவியை விட சரணத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் அசத்தியிருக்கிறார்.

  செல்லக்கிளியோ செல்லக்கிளியோ என்று ஒரு பாடல். மோசமான ட்யூனை ரஞ்சித்தும், அனுராதா ஸ்ரீராமும்சேர்ந்து தங்களால் முடிந்தளவுக்கு கெடுத்திருக்கிறார்கள். அனுராதாவின் குரலில் ஒரு விட்டேற்றித்தனம் தெரிகிறது.

  அடி சூரியனுக்கே சுவரைக் கட்டி இரவை நீட்டிப்போம்

  இரு நதிகள் போலே நாம் தழுவிக் கொள்வோம்.

  நாம் தழுவும்போது சிதறும் துளியால்

  விண்மீன் எல்லாம் நனையச் செய்வோம்

  என்ற வைரமுத்துவின் இலக்கிய வரிகள் வீணடிக்கப்பட்டுள்ளது.

  காதலிக்கும் ஆசை இல்லை பாடலைத் தவிர மீதிப் பாடல்களுக்கான இசை எல்லாம் சுமார் ரகம்தான். ஆனால்வைரமுத்துவின் வரிகளுக்காக ஒரு முறை கேட்கலாம்.

  வைரமுத்துவின் வரிகளை ரீமாசென்னை வைத்து காதல்-காமம் சொட்டச் சொட்ட படமாக்கியிருப்பதாய்சொல்கிறார்கள்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X