Coolie Review: கூலி விமர்சனம்.. ரஜினிகாந்த் ஒவ்வொரு சீனும் கொல மாஸ்.. லோகேஷ் சொதப்பியது எங்கே?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் வெளியான நிலையில், பலதரப்பட்ட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், காலை 9 மணி காட்சியை பார்த்துவிட்டு கூலி படத்தின் ஒரிஜினல் திரை விமர்சனத்தை கொடுக்க ஓடோடி வந்துவிட்டேன்.
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தை செம மாஸாக காட்ட வேண்டும் என்கிற செக் பாக்ஸை பக்காவாக டிக் செய்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா படமாக கூலி படத்தை கொடுக்க வேண்டும் என கலாநிதி மாறன் போட்ட கண்டிஷனை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது குறித்து விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

கூலி கதை: சைமன் (நாகார்ஜுனா) ஹார்பரில் தயாள் (செளபின் சாஹிர்) தலைமையில் விலையுயர்ந்த வாட்ச்களை விற்பனை செய்வது போல இன்னொரு மிகவும் மோசமான பிசினஸை செய்து வருகிறார். அவர் கொன்று குவிக்கும் ஆட்களை அப்புறப்படுத்தும் பணி ராஜசேகருக்கு (சத்யராஜ்) வழங்கப்பட தனது 3 மகள்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த மோசமான வேலையை செய்கிறார். மேலும், அங்கே நடக்கும் விஷயங்களை அம்பலப்படுத்த நினைக்கும் அவரை கொன்று விடுகின்றனர். தனது நண்பனை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க களமிறங்கும் தேவா தனது நண்பனின் 3 மகள்களையும் காப்பாற்ற போராட கடைசியில் என்ன ஆனது என்பது தான் கூலி படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஆனால், இந்த கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை வைக்கிறேன் என்றும் புதிய புதிய விஷயங்களை உட்புகுத்துகிறேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பார்த்த வேலை ரசிகர்களை ஒரு சில இடங்களில் கைதட்ட வைத்தாலும், பல இடங்களில் கடுப்பைத் தான் கிளப்பிவிட்டது. வழக்கம் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்மேன் ஆர்மியாக படத்தை காப்பாற்றுகிறார். இன்னொரு பக்கம் அனிருத் பேக்கிரவுண்டில் பாடிக் கொண்டே படத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நாகார்ஜுனாவை விட செளபின் சாஹிருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரோல் தான் அடிபொலி.

மோனிகா பாடலில் பூஜா ஹெக்டேவுடன் ஆடும் போது சட்டையை கிழித்துக் கொண்டு வெறித்தனம் காட்டுவதில் இருந்து கடைசி வரை அவருடைய நடிப்பு அதகளம் என்று தான் சொல்ல வேண்டும். உபேந்திராவுக்கு வொர்த்தான என்ட்ரி இல்லை என்றாலும், அவர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்கிறார். ஸ்ருதிஹாசன் தனது நடிப்பால் ரசிக்க வைத்தாலும், அவருக்கும் படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை. அந்த அறையாவது ஓங்கி அறைந்திருக்கலாம் என்கிற ஃபீலிங் தான் வந்தது.
பிளஸ்: தக் லைஃப் படத்தில் மணிரத்னம் ஆரம்பத்திலேயே டீ ஏஜிங் காட்சிகளை வைத்துவிட்டு அதன் பின்னர் படத்தை சொதப்பி விட்டார். ஆனால், அந்த ஹைப்பை கடைசி வரை கடத்திச் சென்று கிளைமேக்ஸில் வைத்த விதம் பெரிய பிளஸ்ஸாக உள்ளது. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலமாக உள்ளன. நாகார்ஜுனாவின் ஸ்டைலான வில்லத்தனம், சத்யராஜின் துணிச்சலான நடிப்பு, செளபின் சாஹீர் மற்றும் நித்யா ராமின் போர்ஷன் படத்துக்கு பெரிய பலம்.
மைனஸ்: படத்தின் முதல் பாதி கூட நன்றாகவே சென்றது. ஆனால், படத்தின் 2வது பாதியில் கதை இழுத்துக் கொண்டே சென்றது தான் படத்திற்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது. அதிலும், அமீர்கான் வரும் கிளைமேக்ஸ் கேமியோ எல்லாம் கூலி படத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அந்த இடத்தில் லோகேஷ் கனகராஜ் ஏதோ ஃபில்லர்ஸ் போட்டது போலத்தான் உள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டுவது போல அமீர்கானின் தாஹா கேரக்டரை வைத்து கூலி 2வுக்கு லீடு கொடுத்து முடித்திருந்தால் கூட தரமாக இருந்திருக்கும். அதே போல இந்த படத்தில் ரெட்ரோ பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. வித வித விதமாய், வித்யாசமாய் கொல்வது தான் படம் முழுக்க வருகிறது. ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸிக்கு எல்லாம் எந்தவொரு வேலையும் இல்லை. ஒரு சில ட்விஸ்ட்டுகள் வொர்க்கவுட் ஆனாலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வையே அவை கொடுக்கின்றன. கிளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருந்தால், இந்த கூலி ஹைப்புக்கு ஏற்ற வொர்த்தாக இருந்திருக்கும். ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு, ஆக்ஷன், ஸ்டைல் மற்றும் உழைப்பு கடைசி வரை ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. தாராளமாக தியேட்டரில் படத்தை பார்க்கலாம். ஓவர் எதிர்பார்ப்பு வேண்டாம்!


Click it and Unblock the Notifications











